Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"அந்த வலிமை பலாத்காரப்படுத்த இல்லை... பாதுகாப்பதற்கு!"

"நம்பிக்கையைச் சம்பாதிக்கிறதுதான் சினிமால ரொம்ப முக்கியம். பணத்தையும் கடனை யும் சினிமா சீக்கிரமே கொடுத்துடும். ஆனா, நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் இங்கே சம்பாதிக்க முடியாது. முக்கியமான நண்பர் ஒருவர், 'சசியை நம்பி, குடியிருக்கிற வீட்டை வித்துக்கூடப் படம் எடுக் கலாம்’னு சொன்னதா கேள்விப் பட்டப்ப ஆடிப்போயிட்டேன். அந்த நிமிஷத்துல மனசு முழுக்கச் சந்தோஷமானாலும், அந்த நம்பிக்கையைக் கடைசி வரை காப்பாத்தணுமேங்கிற பொறுப்பு என்னை ரொம்பப் பக்குவமா மாத்தியிருக்கு. பல சமயம் விமர்சனத்தைவிட பாராட்டு தான் நம்மளோட பதற்றத்தை யும் பயத்தையும் அதிகமாக் கிடுது!'' - 'சுந்தரபாண்டியன்’ கொடுத்த நம்பிக்கையை 'குட்டிப்புலி’யில் தக்கவைக்கும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் சசிகுமார்.

''ராஜபாளையம் ஏரியாவில் வாழ்ந்த நிஜமான கேரக்டர்தான் குட்டிப்புலி. அதே ஏரியாவில் ஷூட்டிங் நடக்கிறதால் வேடிக்கை பார்க்கிறவங்ககூட 'சார், கைய நல்லா ஏத்திவிடுங்க... மீசையை குட்டிப்புலி மாதிரியே திருகிவிடுங்க’னு எனக்கு டிப்ஸ் கொடுக்குறாங்க. கைலியும் சட்டையும், சட்டையே பண்ணாத வாழ்க்கையுமாகத் திரியும் பாத்திரம். கட்டுக்கு அடங்காத பையனோட அம்மாவா தெய்வானைங்கிற பாத்திரத்தில் சரண்யா. படத்துக்காக மட்டும் இல்ல... உண்மையாவே உள்ளன்போடு என்னை நேசிக்கிற தாய் அவங்க. 'குட்டிப்புலி’யில் ஹீரோவே அவங்கதான். திருவிழா, ஊர்வம்பு, சண்டை சச்சரவுன்னு பக்கா கிராமத்துக் கதை யில், 'சுந்தரபாண்டியன்’ படத்தோட ஞாபகமே வராத அளவுக்கு முடி தொடங்கி அடி வரைக் கும் முழுசா என்னை மாத்திட்டான் டைரக்டர் முத்தையா. பாடியே பால் கறக்கிற மாதிரி சிரிச் சுக்கிட்டே அத்தனை வேலையையும் செஞ்சு முடிச்சிடுறான்!''

''சுந்தரபாண்டியனில் உங்க உதவியாளர் பிரபாகரனை இயக்குநர் ஆக்கினீங்க... இப்போ 'குட்டிப்புலி’யில் முத்தையா... புதுமுக இயக்குநர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதில் பயம் இல்லையா?''

''எதுக்குப் பயப்படணும்? முன்னா டியே நான் 'விகடன்’ பேட்டியில் ஒரு தடவை சொல்லியிருக்கேனே... 'பசங்க பாண்டிராஜ் கண்ணுல பார்த்த ஆனந்தக் கண்ணீரை இன்னும் பத்து இயக்குநர்கள் கண்ல நான் பார்க்கணும்’னு. வெறும் வார்த்தைக்காக அதை நான் சொல்லலை. அந்தக் கண்ணீரோட பிசுபிசுப்பு இப்போ வரைக்கும் ஒட்டியிருக்கு. ஏமாற்றமும் நம்பிக்கைத் துரோகமும் நிறைஞ்சுகிடக்கிற காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் நாலு பேரைப் பரவசப்படுத்திப் பார்க்கணும்னு நினைக்கிறவன் நான்!''

''இயக்குநர்கள் விஷயத்தில் இது சரி... ஆனால், லட்சுமிமேனனோட இரண்டாவது முறையும் ஜோடி சேர்ந்து நடிக் கிறீங்களே... அதுவும் பரவசத்துக்குத்தானா?''

''ரெண்டு படம் சேர்ந்து நடிச்சாலே பிரபு - குஷ்பு அளவுக்குச் சேர்த்துவெச்சுப் பேசுவாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, என் படத்தில் நடிச்ச எல்லா ஹீரோயின்களுடனும் நான் இரண்டு படம் சேர்ந்து பண்ணியிருக்கேன். 'சுப்ரமணியபுரம்’, 'போராளி’ படங்களில் சுவாதி, 'ஈசன்’, 'நாடோடிகள்’ படங்களில் அபிநயா, 'நாடோடிகள்’, 'மாஸ்டர்ஸ்’ படங்களில் அனன்யானு மூணு பேர்கூடவும் இரண்டு தடவை சேர்ந்து நடிச்சிருக்கேன். சமாளிப்புக்காக இப்படிச் சொல்லலை... கூட நடிக்கிற ஹீரோயின் அடுத்த படத்திலும் என்னோட சேர்ந்து நடிக்கிறாங்கன்னா, அதுக்குக் காரணம் காதல் இல்ல... காவல். 'சசிகூட நடிக்கிறப்ப எந்தப் பிரச்னையும் இருக்காது’ங்கிற பாதுகாப்பு உணர்வு. ஷூட்டிங் ஸ்பாட்டைக் கோயில் மாதிரி நினைக்கிறவன் நான். சத்தமாப் பேசினாக்கூட தப்புங்கிற அளவுக்கு என்னோட ஆட்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கேன். சினிமாங்கிற பிரமாண்ட உலகத்துக்குக் கனவுகளோட வர்ற ஒவ்வொரு பொண்ணும் முதல்ல எதிர்பார்க்கிறது பணத்தை இல்ல... பாதுகாப்பை!  

டெல்லியில் தன் நண்பனோட கைகோத்துப் போன பொண்ணு  அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம்னு கனவுலகூட நினைச்சிருக்காது. ரத்தமும் துடிப்புமா அல்லாடிய அந்தப் பொண்ணு மனசுல எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? ஆணாப் பொறந்த அத்தனை பேருமே கூனிக்குறுக வேண்டிய சம்பவம் இல்லையா அது? ஆனா, அதுக்குக்கூட பொண் ணுங்களோட உடைதான் காரணம், நடைதான் காரணம்னு உள்ளர்த்தம் கற்பிக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? தலைநகர்ல நடந்த கொடூரம் தடம் தெரியாத ஊர்கள்லயும் நடந் துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, அதைக் கண்டும் காணாமலும் நாம கடந்துபோய்க்கிட்டு இருக் கோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களோட கைகள் உறுதியாவும் வலுவாவும் இருக்கிறது யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை... பத்திரமாப் பாதுகாக்குறதுக்கு. சாகப்போற கடைசி நிமிஷத்துலகூட, பிடிச்சவனோட மடி யில தலை சாய்க்க நினைக்கிறவங்க பொண் ணுங்க. அவங்களுக்கான நம்பிக்கையைக் கொடுக் காத அத்தனை ஆண்களுமே அயோக்கியர்கள் தான்!''

''ஒரே அறையில் தங்கியிருந்த பாலா, அமீர், சசி மூணு பேருமே இன்னிக்குப் பெரிய இடத்தில் இருக்கீங்க. என்னிக்காவது இதை நினைச்சு ஆச்சர்யப்பட்டு இருக்கீங்களா?''

''இரண்டு அண்ணன்களோட மனசறிஞ்சவனா சொல்றேன்... சினிமாவில் என்ன செய்யணும்னு பாலா அண்ணன் திட்டமிட்டு இருந்தாரோ... அதில் பாதியைக்கூட அவர் இன்னும் எட்டலை. அவரோட முழு உயரம் தெரியிறப்ப, அது சச்சின் சாதனை மாதிரி யாராலயும் முறியடிக்க முடியாததா இருக்கும். சமூகப் பங்களிப்புகளில் என்ன செய்யணும்னு அமீர் அண்ணன் திட்டமிட்டு இருந்தாரோ... அதில் அஞ்சு சதவிகிதத்தைத்தான் அவர் எட்டிஇருக்கார். அரசியல் தொடங்கி பல விஷயங் களில் அமீர் அண்ணன் உச்சம் தொடுற காலம் வரும். ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் என்னோட திட்டமிடலும் அதிகம். அதை நோக்கிய வெவ்வேறு பாதைகளிலான வேகமான ஓட்டத்தில் இதையெல்லாம் நினைச்சு ஆச்சர்யப் பட எங்களுக்கு நேரம் இல்லை!''

க.ராஜீவ்காந்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்