Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரொம்ப தேங்க்ஸ்ங்ணா...

ரொம்ப தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக் கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது.

 ''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க. ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தைத் தக்கவெச்சுக்க, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அனுபவிச்சே தீரணும். இருபது, முப்பது வருஷமா ஒரு நடிகனைத் தலைமேல தூக்கி வெச்சுக் கொண்டாடுற ரசிகர்கள் திடீர்னு அவனை வெறுக்க ஆரம்பிச்சா, அதுக்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போ மனசுல ஓட்டிப் பார்த்துக்கிட்டே இருக்கேன்.''  

'' 'துப்பாக்கி’ 100 கோடி பிசினஸ் பண்ணும்னு எதிர்பார்த்தீங்களா?''  

''இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் வாழும் மாநிலங்கள்தான் அதிகம். அதனால், இந்திப் படங்களான 'கஜினி’, 'தபாங்’ எல்லாம் 200 கோடியைத் தாண்டுறது சாதாரணம். ஆனா, தமிழ்ப் படமான 'துப்பாக்கி’ 100 கோடி வசூலிச்சது பெரிய விஷயம்தான். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந் துட்டே இருக்கு. அவங்க ரசனையும் வேற பிளாட்ஃபார்முக்கு மாறிடுச்சு. அதனால இனி ரசிகர்களின் ரசனைக்கு ஏத்த மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்படி அவங்களை ரசிக்கவெச்சா, 100 கோடி என்ன... 200 கோடியைக்கூட அள்ளிக் கொடுப்பாங்க.''

''இப்போதைய ஹீரோக்களில் யாரை உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''

''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல மிரட்டுறாங்க. என்னைப் பொறுத்தவரை எல்லாருமே பெஸ்ட்தான்!''

''சரி... அப்போ, இப்போ சினிமாவில் உங்களுக்குப் போட்டி யார்?''

''வேற யாரு... விஜய்தான்!''

''உங்களைப் பத்தி இணையத்தில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?''

''ஜாலியான கமென்ட்ஸை எல்லாரையும் போல நானும் ரொம்பவே ரசிக்கிறேன். கடுமையான விமர்சனங்களில் இருக்கும் நியாயத்தை மட்டும் கவனிச்சு, என் அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கிறேன். பொதுவா, எல்லா ஹீரோக்களைப் பத்தியும்தான் சோஷியல் நெட்வொர்க்களில் கமென்ட் பண்றாங்க. ஆனா, தனிப்பட்ட பெர்சனல் தாக்குதலா,  அவங்க மனசைப் புண்படுத்துறது மட்டுமே நோக்கமா இருக்கும் விமர்சனங்கள்தான் நிறைய இருக்கு. அப்படியான விமர்சனங்களை நான் கண்டுக்கவே மாட்டேன்.''

''எந்தக் கேள்விக்கும் பளிச்னு பதில் சொல்லாம பெரும்பாலும் மௌனமாவே இருப்பது ஏன்?''

''தாய்மொழி தமிழ் மாதிரி, என்னோட இயல்பு மௌனம். எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் வார்த்தையைவிட்டு வாழ்க்கையைத் தொலைச்சு இருக்காங்க. வார்த்தை தடுக்கினால் வாழ்க்கை தடுக்கிடும்கிற உண்மை உணர்ந்தவன் நான். அதான் மௌனமா இருக் கேன்!''

''யார் இயக்கத்தில் நடிக்க ஆசை?''

''இதுவரை நான் நடிச்ச படங்கள் எதுவுமே பெரிய திட்டமிடல்கள் இல்லாமத்தான் நடந்துச்சு. ஆனா, இனி ஒவ்வொரு படத்தையும் அழகா, அம்சமா டிசைன் பண்ணணும்னு  நினைச்சிருக்கேன். பாலா, அமீர்... இவங்க ரெண்டு பேரோட ஒவ்வொரு படத்தையும் பார்த்து அசந்துபோயிருக்கேன். அவங்க படங்களில் நடிக்க ஆசையா இருக்கு.  சீக்கிரமே நடிப்பேன்.''

''குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு?''

''சஞ்சய் இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே நெடுநெடுனு வளர்ந்து செவன்த் படிக்கிறார். பொண்ணு ஷாஷா, செகண்ட் ஸ்டாண்டர்டு. ஷூட்டிங் இல்லாதப்போ ரெண்டு பேரையும் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். எனக்கு பிரேக் கிடைக்கிறப்ப, எங்கேயாவது பிக்னிக் போகலாம்னு கேட்டா, பசங்க லீவு போட மாட்டேங்கிறாங்க. நான் எல்லாம் ஸ்கூலுக்குப் போக அவ்வளவு அடம்பிடிச்சு அழுவேன். ஆனா, சஞ்சய்... ஷாஷா ரெண்டு பேரும் குஷியாக் குதிச்சு ஆடிட்டு ஸ்கூலுக்குக் கிளம்புறாங்க. நான் வீட்ல இருந்தா, 'இன்னிக்கு ஒருநாள் லீவு போடுங்கப்பா... அப்பா உங்களை வெளியே அழைச்சுட்டுப் போறேன்’னு கேட்டா, 'செல்ல அப்பால்ல... ப்ளீஸ்... ப்ளீஸ்... ஸ்கூல் போயிட்டு வந்திடுறேன். அப்புறம் வெளில போகலாம்’னு நம்மளை மயக்கிட்டு ஓடிர்றாங்க. கடைசில நான்தான் வீட்ல வெட்டியா உக்காந்திருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். செம பசங்க. வாழ்க்கையை ரொம்ப அர்த்தம்உள்ளதா ஆக்கிட்டாங்க!''

''காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது ஆசிட் வீச்சு, மாணவி பலாத்காரம்னு நிறையச் செய்திகள் வருகின்றன. நீங்கள் நடிக்கும் படங்கள் மூலம், உங்கள் 'மக்கள் இயக்கம்’ மூலமா இளைஞர்களிடையே இந்த விவகாரம் தொடர்பா விழிப்பு உணர்ச்சி உண்டாக்கலாமே?''

''இளைஞர்களுக்கு என்னோட ஒரே வேண்டு கோள்... நம்ம வீட்டுப் பொண்ணுக்கு அப்படி ஒண்ணு நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தாலே, உங்க மனநிலை நிச்சயம் மாறும். சில நிமிஷ சபலத்தால் உங்க வாழ்க்கையைப் பாதிக்கவிடாதீங்க... உங்களுக்குக்கூடப் பிரச்னை இல்லை... நீங்க பாட்டுக்கு ஜெயில்ல மூணு வேளை சாப்பிட்டு, பொழுதைப் போக்கிருவீங்க. ஆனா, அப்புறம் உங்க அம்மா, அப்பாவைக் கொலைகாரனைப் பெத்தவங்கன்னும், அக்கா, தங்கச்சியைக் கொலைகாரன்கூடப் பொறந்த வங்கன்னும் சுத்தி நிக்கிறவங்க அவமானப் படுத்துவாங்க. அதை யோசிச்சுப் பாருங்க... குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், முதுமை மாதிரி இளமைப் பருவமும் நம்ம வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்தான். அதை மத்தவங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காம அனுபவிங்க.  நாட்டுக்கும் வீட்டுக்கும் நாம செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கு... அதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க!''

எம்.குணா
படம் : வி.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்