Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா !

எப்படிஇருக்கீங்க?'' என்று கேட்டால், ''அடுத்த நொடி நிச்சயமில்லை நண்பா. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கேன்!'' - பெரிய கண்கள் இன்னும் அழகாய் விரிய, வரவேற்கிறார் பிரகாஷ்ராஜ். நீண்ட நாட்களாக இந்தி, தெலுங்கு என்று பிஸியாக இருப்பவரிடம் பேசியதில் இருந்து...

''என்ன... தமிழ்நாடு பக்கம் பார்க்க முடியறதே இல்லை?''

''இதோ திரும்ப வந்துட்டேன். என் மகள், என் நண்பர்களின் மகன், மகள்னு நிறையப் பேரைப் பார்த்து, அவங்க படிக்க சிரமப்படுறதைப் பார்த்து 'என்ன கல்வித் திட்டம் இது?’ங்கிற கவலையும் கோபமும் வந்துச்சு. அதைத்தான் 'தோனி’யா எடுத்தேன். அதை இயக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு விதமான வலியோட இருந்தேன். சரி, கொஞ்சம் ரிலாக்ஸ்டா கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. 'சால்ட் அண்ட் பெப்பர்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அழகான ஒரு காதல் கதை. காதலைவிடக் கொண்டாட வேண்டிய விஷயம் வேற என்ன இருக்கு? நடுத்தர வயதுக் காதல், காதலோட வேற ஒரு பரிமாணம் காட்டுற படம் அது. சமையல், உணவு, உணர்வு, ருசி, காதல், தனிமைனு எல்லாருக்குமான கதை அது. அதை 'உன் சமையலறையில்’னு தமிழில் படமாப் பண்றேன். இளையராஜா இசை. தமிழ், தெலுங்கு ரெண்டுலேயும் படம் ரிலீஸ் ஆகும்!''

''2012-ல் பெரிய படங்கள் நிறைய அடி வாங்கி, சின்னப் படங்கள் ஹிட் ஆகின. இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''பொதுவா, சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க. மாற்றுச் சிந்தனையை அமுக்கிடுவாங்க. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடிச்சுக்கிட்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றினு நான் பார்க்கலை. இது புதிய சிந்தனைகளோட வெற்றி. மக்களோட ரசனையைப் புரிஞ்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி சினிமா மாறணும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பா நடக்கும். அதையும் தாண்டி இளைஞர்கள் வரணும். ஏன்னா, இன்னைக்கு டாப் டைரக்டர்கள், டாப் நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவங்கதான்!''

'' 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்ல ரிலீஸ் பண்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''கமல் எடுத்திருக்கிறது ரொம்ப முக்கியமான முடிவு. நான் வரவேற்கிறேன். காலம்காலமா... 'நான் இப்படி ஒரு படம் எடுத்திருக்கேன். தயவுசெஞ்சு தியேட்டருக்கு வந்து படம் பாருங்க’னு சினிமாக்காரங்க பிச்சை எடுக்கிற மாதிரிதான் கேட்டுட்டு இருக்கோம். சினிமாவில் இருக்கிறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நாம இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம். என்னைக் கேட்டா, பணத்தைவிட நேரம் ரொம்ப முக்கியமானது. அதனால வாடிக்கையாளர் எங்கே இருக்காங்களோ, அங்கேயே தேடிப் போய் பீட்ஸா, கல்தோசைனு டோர் டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதைத்தான் கமலும் பண்ண நினைக்கிறார்.

சாட்டிங்ல என்னிடம் வந்தார் லண்டன் தமிழ் இளைஞர். 'தோனி பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருந்தது!’னு சொன்னார். நான் 'தோனியை அங்கே ரிலீஸ் பண்ணலையே?’னு கேட்டேன். அதுக்கு 'திருட்டு விசிடி-யில் பார்த்தேன் சார். நான் பிரகாஷ்ராஜ் படத்தை உடனே பார்க்க ஆசைப்பட்டேன். இங்க உங்க படம் வந்து சேர மூணு மாசம் ஆகுது. அதுக்காக 200 கி.மீ. நான் டிராவல் பண்ணணும். ரிலீஸ் அன்னைக்கே நானும் பார்க்கிற மாதிரி இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணுங்க. நான் நேர்மையா பணம் கட்டிப் பார்க்கிறேன்’னு சொன்னார். இவரை மாதிரி ஒரு குரூப் தியேட்டருக்கு வர்றதையே நிறுத்திட்டாங்க. சிலருக்கு நேரம் இல்லை. கமல் யோசிக்கிற டோர் டெலிவரி சிஸ்டம் இந்த குரூப் ஆடியன்ஸை திரும்ப சினிமா பக்கம் இழுத்து வரும். சரி, எதுவும் வேண்டாம். புது முயற்சிக்கு என்னதான் ரிசல்ட் கிடைக்குதுனு பார்க்கலாமே? ஒரு படம் இண்டஸ்ட்ரியோட வாழ்க்கையைத் தீர்மானிக்காதே!''

''சூர்யா பண்ணின 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ டி.வி. ஷோவை திடீர்னு நீங்க நடத்துறீங்களே?''

''அது நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும். விகடன்ல 'சொல்லாததும் உண்மை’ எழுதினப்ப, எப்படி முகம் தெரியாத மனிதர்கள்கிட்டே அறிமுகம் ஆனேனோ, அதே மாதிரி விதவிதமான மக்கள்கிட்டே திரும்பக் கை குலுக்கப்போறேன். கட்டி அணைக்கப்போறேன். இன்னைக்கு டெலிவிஷன் ஸ்ட்ராங் மீடியா. அதில் நானும் இருப்பது சந்தோஷம்!''

''ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாக் கேரக்டரும் பண்ற மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லையே?''

''நிச்சயம் வருவாங்க. ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதுசா உள்ளே வர்றாங்க. உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும். அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் ரெடியா இருக்கணும். பிரகாஷ்ராஜ் பெரிய நடிகன் ஆகிட்டான்னு சொல்றாங்க. அதுல எனக்கு எந்தச் சந்தோஷமும் இல்லை. ஏன்னா, என்னைப் பார்த்து இளம் தலைமுறை ஆட்கள் பயப்படுறாங்க. சிலர் பார்த்த முகமா இருக்கேனு யோசிக்கிறாங்க. இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால 'நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா!’னு நான் கத்திச் சொல்ல வேண்டிஇருக்கு!''  

''டூயட் மூவீஸ்ல எடுத்த படங்கள் தரமா இருந்தாலும் வசூல்ல சரியாப் போகலைனு வருத்தம் உண்டா?''

''ஒரு தயாரிப்பாளரா நான் கணக்கு வழக்கு பார்க்கிறதே இல்லை. ஆனா, நடிகனா நான் பக்கா பிசினஸ்மேன். நடிகன் என்கிற வியாபாரிதான் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜின் இழப்புகளைச் சரிபண்ணிட்டே இருக்கிறான். நான் விரும்புற, நான் நினைக்கும் சில நல்ல படங்களை இந்த சொசைட்டிக்குத் தரணும்கிற ஆசையில்தான் படங்கள் தயாரிக்கிறேன். நான் தயாரிக்கிற படங்கள் ஒரு கோடியோ, ஒன்றரைக் கோடியோ நஷ்டமாவது உண்மைதான். நடிகனா நான் வாங்கும் சம்பளத்துல இந்த இழப்புகளை என்னால் சரிசெய்ய முடியுது. சில பேர் சீட்டாடுவாங்க. சில பேர் ஊர் சுத்துவாங்க. எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். எனக்குக் கெட்ட பழக்கம் படம் தயாரிக்கிறது. படம் ஓடுதோ இல்லையோ, நாம சொல்ற கருத்து மக்களைப் போய்ச் சேருதான்னு தெரியலையேனு வருத்தமா இருக்கும். 'தோனி’ சரியாப் போகலை. ஆனா, இன்டர்நெட்ல 16 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இப்படியாவது பார்க்கிறாங்களேனு சந்தோஷமா இருக்கு!''

''பிரபுதேவா-நயன்தாரா சேர்றதுக்கு நீங்களும் ஒரு காரணம். இப்போ பிரிஞ்சிட்டாங்க?''

''காதல் வருவதற்கும் அது உடையறதுக்கும் அற்பமான காரணங்கள் போதும். அவங்க வாழ்க்கையில அவங்க ரொம்ப விரும்பினாங்க. அப்போ ஒரு நண்பனா நானும் கூட நின்னேன். ஏதோ ஒரு பெர்சனல் காரணம்... ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. அது அவங்களோட நன்மைக்காகப் பிரிஞ்சுட்டாங்க. இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது!''

''பொண்ணுங்க நல்லா வளர்ந்திருப்பாங்க... எப்படி இருக்காங்க?''

''மூத்தவ பூஜா அழகா வளர்ந்திருக்கா... ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கா. போட்டோகிராஃபி, பெயின்டிங், மியூஸிக்னு கலைகள் மேல் ஆர்வம். போன சம்மர்ல பாரீஸ், இந்த வின்டர்ல ஜெர்மன்னு சந்தோஷமா ஊர் சுத்திட்டு இருக்கா. தனக்கு என்ன வேணும்கிறதில் ரொம்ப தெளிவா இருக்கா. அவ தொடர்ந்து 12 வருஷம் படிச்சிட்டா. அதனால, ஒரு வருஷம் கேப் எடுத்து நல்லா என்ஜாய் பண்றதுனு நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். சின்னவ மேனகா... எட்டு வயசு. ஜாலியா வளர்க்கிறேன். ஜாலியா வளர் றாங்க!''

எஸ்.கலீல்ராஜா, ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: கே.ராஜசேகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்