Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்" !

பசங்க பாண்டிராஜ் இயக்கிய 'வம்சம்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளரான இவர் தற்போது மல்லுக்கட்டு, கலியுகம், சுவாசமே, அடித்தளம், ஞானக்கிறுக்கன், அதுவேற இதுவேற உள்ளிட்ட சுமார் அரை டஜன் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கவிஞர் அறிவுமதியுடன் இணைந்து தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் 'தாய்பால்' என்றொரு இசை ஆல்பத்தையும் உருவாக்கி வருகிறார். தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களும் முக்கியமான ஹீரோக்களும் இந்த ஆல்பத்திற்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

நாள்தோறும் இசையமைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்வியோடு நூரை சந்தித்தோம்.

மியூசிக் என்பது ஏதோ தின்பண்டம் அல்ல, நாலு பேர் கையை வைத்தவுடன் தீர்ந்து போவதற்கு! அது கடல். யார் வேண்டுமானாலும் மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இசையில் புதுசு புதுசாக எதையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. சமீபத்தில் கூட கானா பாலாவை பாட வைத்திருந்தேன். வழக்கமாக கானா பாடல் என்றால் அதற்கென சில இன்ஸ்ட்ரூமென்டுகளை மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நான் அவரை கானா ஸ்டைலில் பாட வைத்து அதன் பின்னணியில் மேற்கத்திய இசையை மிக்ஸ் பண்ணினேன். அந்த பாட்டு புதிதாக வந்திருக்கிறது.

இன்றைய பாடலாசிரியர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இசையமைப்பாளரிடமிருந்து வாய்ப்புகள் வாங்குவதாக கூறப்படுகிறதே?

எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரவர்க்கு என்று தனித்துவம் இருக்கிறது. அறிவுமதி, யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, மோகன்ராஜ் என்று அத்தனை பேருடனும் நான் இணைந்து இசையை தருகிறேன். இவர்களை தவிர தமிழ்சினிமாவின் லெஜன்ட்டுகளான வாலி அவர்களோடும், வைரமுத்து அவர்களோடும் கூட பணியாற்றுகிறேன். அது தனி அனுபவமாக இருக்கிறது. ஒரு முறை வாலி சார் என் ட்யூனை ரசித்துவிட்டு 'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்' என்றார். எனக்கு அப்படியே சிலிர்த்துவிட்டது. எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் அது! இவர்களை தவிர நிறைய புதியவர்களுக்கும் அவ்வப்போது வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா படங்களிலும் ஒரு குத்துப்பாட்டு வந்துவிடுகிறதே?

கானா, வெஸ்டர்ன், மெலடி மாதிரி குத்துப்பாட்டும் இசையின் ஒரு பிரிவாகிவிட்டது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் டைரக்டரின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் ஒரு இசையமைப்பாளரின் கடமை அல்லவா? அதனால் நான் குத்துப்பாட்டுக்கு எதிரியல்ல. குத்துப்பாட்டோ, தத்துவ பாட்டோ? அதுவும் இசைதானே?

டைரக்டரிடம் கதை கேட்கும்போதே மனசுக்குள் ட்யூன் வந்துவிடுமா?

அப்படி ஒரு சில கதைகளுக்கு நம்மை து£ண்டுகிற சக்தி இருக்கிறது. சமீபத்தில் கூட ஒற்றன் இயக்குனர் இளங்கண்ணன் அவர்கள் என்னிடம் கதை சொன்னார். இது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'அடித்தளம்' படத்திற்காக. கட்டிட தொழிலாளர்களின் வாழ்வை அதன் உண்மை மீறாமல் சொல்கிற படம் இது. வருஷம் முழுக்க உழைத்து ஒரு கட்டடித்தை கட்டுகிற கொத்தனார், அந்த வீட்டுக்கு உரிமையாளர் குடிவந்த பின் உள்ளேயே நுழைய முடியாது. அவ்வளவு ஏன்? அவ்வளவு உரிமையாக அந்த தெருவில் சொந்த வீடாக நினைத்து வாழ்ந்த அந்த கட்டிட தொழிலாளியின் குடும்பம் அதன்பின் அங்கு அதே உரிமையோடு நடமாடக் கூட முடியாது. இந்த வலியை அவர் சொல்லும்போதே எனக்குள் ட்யூன் வந்தது.

அடுத்த முயற்சி?

அறிவுமதி அண்ணன் எழுத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தாய்பால்' ஆல்பம்தான்! தமிழ், தமிழர்கள் பற்றி மட்டுமல்ல, 'ஆற்று மணலை அள்ளாதே... அடுத்த தலைமுறை கொல்லாதே' என்று சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை அந்த பாடலில் சொல்லியிருக்கிறார் அவர். இந்த பாடலை முழுமையாக உருவாக்கி உலக தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதுதான் என் ஆசை. இப்பவே கனடா, அமெரிக்கா என்று இந்த பாடல் வெளியீட்டு விழவை எங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்று அழைக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement