"இன்று ஈரான்... நாளை தமிழ்நாடு!"

சில படங்கள் பண்ணும்போதுதான் நமக்குச் சந்தோஷமும், பெருமையும், கர்வமும் வரும். இந்தப் படம் பண்ணும்போது அற்புதமான படம் பண்ணோம்கிற கர்வம் எனக்கு வந்தது. 'ஆதலால் காதல் செய்வீர்’ நிச்சயம் பெரிய அதிர்வலைகளை எழுப்பும்!'' - பிரகாசமாகச் சிரிக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

 ''படத்துல அப்படி என்ன அதிர்ச்சி வெச்சிருக்கீங்க?''

''கல்லூரியில் முதல் வருடம், இரண்டாவது வருடம் படிக்கிற டீனேஜ் பசங்களோட நட்பு, காதல்தான் படம். உண்மைக்கு நெருக்கமாக இல்லை... முழுக்க உண்மையாகவே இருக்கும் படம். இந்தத் தலைமுறை பசங்க காதலை எப்படிப் பார்க்கிறாங்கன்னு பளிச்னு புரிய வைக்கும். எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மைக் கதை தான். ஆனா, யாரும் முழுசாப் பதிவு பண்ணாத ஒரு கதை!''

''ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கலர்ல கொடுப்பீங்க... ஆனா, 'ராஜபாட்டை’ தோல்வியால், இளைஞர்களைத் தியேட்டருக்கு வரவைக்கிறதுக்காக இந்த சப்ஜெக்ட்டா?''

''என் மேக்கிங்கில் பெரிய பலமா நான் நினைக்கிறது காமெடியும் எமோஷனும்தான். சினிமா கத்துக்கொடுத்த படிப்பினையில், 'ஆதலால் காதல் செய்வீர்’ படம் எனக்கு 200 சதவிகிதம் நம்பிக்கை கொடுத்துச்சு. மணிரத்னம் சார் நிறையப் படங்கள் பண்ணியிருந்தாலும், 'அஞ்சலி’க்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. அதே மாதிரி என் கேரியர்ல, 'ஆதலால் காதல் செய்வீர்’ இருக்கும்!''  

''நிறைய புது இளைஞர்களும் வர்றாங்க... உங்களை மாதிரி சீனியர்களும் மெனக்கெடுறீங்க... தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''    

''நான் கண்கலங்கிப் பார்த்த படம்னா அது ஈரானியப் படமான 'சில்ரன் ஆஃப் ஹெவன்’. குழந்தைகளின் மனசை அந்தப் படத்தில் அவ்வளவு அழகா காட்டி இருப்பாங்க. தன் தங்கச்சி ஆசைப்பட்ட ஷூவைப் பரிசா ஜெயிக்கிறதுக்காக ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கிறான் அண்ணன். மூணாவது பரிசுதான் ஷூ. கடைசி நொடி அவசரத்தில் அண்ணன் முதல் ஆளா ஜெயிச்சுடுறான். எல்லாரும் கைதட்டிப் பாராட்டுறாங்க. ஆனா, தங்கச்சிக்கு ஷூ ஜெயிக்க முடியலையேங்கிற கவலையில் அண்ணன் அழறான். உணர்ச்சிகளின் குவியலா... அவ்வளவு ஆழமா என்னைப் பாதிச்ச படம் அது. இப்படியான சம்பவங்கள் நம்மளைச் சுத்தியும் நடக்கும். சென்னை ஜி.ஹெச்சுக்குள் வெளியூர்க்காரர் யாராச்சும் நுழைஞ்சா, எந்த வார்டுக்குப் போகணும், எந்த டாக்டரைப் பார்க்கணும், எப்படித் தன் பிரச்னையைச் சொல்லி மருந்து மாத்திரை வாங்கணும்னு தெரியாது. அதையெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கே ஒரு முழு நாள் ஆகிடும். இந்த வலிகளைப் பதிவு செய்தா, அதுதான் உலக சினிமா. இந்த மாதிரி சினிமா பண்ணாதான் பார்ப்போம்னு மக்கள் எப்பவுமே சொன்னது இல்லை. யார் படமா இருந்தாலும், ரெண்டரை மணி நேரம் இம்ப்ரெஸ் பண்ணணும்னுதான் எதிர்பார்க்கிறாங்க. 'நான் கடவுள்’ மாதிரியான படங்களைப் பார்த்துப் பிரமிக்கிறவங்க, 'ஓ.கே ஓ.கே’ படத்தையும் பார்த்து கலகலனு சிரிச்சு ஹிட் ஆக்குறாங்க. தமிழ் சினிமா நாலஞ்சு வருஷங்கள்ல பெரிய இடத்துக்கு வந்திருக்கு. ஈரான் படங்களைத் தேடிப் பிடிச்சுப் பார்க்கிற மாதிரி, தமிழ்ப் படங்களை உலகம் முழுக்கப் பார்க்கும் காலம் ரொம்பப் பக்கத்தில் வந்திருச்சு!''

க.நாகப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!