Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிரிக்காவில் வடிவேலு! இது புது சினிமா

கே.எஸ்.ரவிகுமார்... தமிழ் சினிமாவின் மாஸ்டர் இயக்குநர், இப்போ பாலிவுட்டில்! சஞ்சய்தத்தை வைத்து 'சாமி’ படத்தை இந்தியில் இயக்கிக்கொண்டு இருப்பவரைச் சந்தித்தேன்.  

 ''நீங்கள் இயக்கிய ஹிட் படங்களே அவ்வளவு இருக்கும்போது, ஏன் இந்தியில் 'சாமி’ ரீமேக் பண்றீங்க?''

''அவங்க ரைட்ஸ் வாங்கிவெச்சுட்டுக் கூப்பிட் டாங்க. நான் என்ன பண்ண முடியும்? நிறைய போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் வருதேனு சின்ன சந்தேகம் இருந்துச்சு. அவருக்காக நிறைய மாத்தியிருக்கேன். என் ஸ்பீடுக்கு அங்கே வேலை பார்க்கிறதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு. ஆனா, ஹீரோ இல்லைன்னாலும் ஹீரோ இல்லாத போர்ஷனை எடுத்துருவேன். பரபரனு ஷூட்டிங் முடிச்சாச்சு. ஒரு ஃபைட்டு, ரெண்டு பாட்டு மட்டும்தான் பாக்கி!''

''சமீபமா இங்கே தமிழ்நாட்டில் சினிமாவை வெளியிடுவதில் நிறைய சிக்கல்கள் வந்துள்ளனவே?''

''எப்படிப் படம் எடுத்தாலும் சண்டைக்கு வர்றாங்க. இனிமே ஈ, கொசு, பல்லி, கரப்பான் பூச்சிகளைத்தான் வில்லனாக் காட்ட முடியும்போல. ஏன்னா, அதுகதான் கேஸ் போடாது. கெட்டவன்னா மது, சிகரெட் பழக்கம் இருக்கிறவனாத்தான் காட்ட முடியும். அப்படி சீன் வெச்சா திட்டுறீங்க. ஆனா, அப்புறம் ஏன் ரோட்டுக்கு ரோடு ஒயின்ஷாப் வெச்சு விக்கறீங்க? இதெல்லாம் டூமச்சா இருக்கு.''

''ரஜினிக்கு அரசியல் நிர்பந்தம் வந்த மாதிரி, கமலுக்கும் வந்துருச்சே...''

''ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு. கமல் சார் மனசுல என்ன இருக்குனு நமக்குத் தெரியாதே? தவிர, கமல் சார் எனக்கு நெருங்கிய நண்பர் இல்லை. 'மன்மதன் அம்பு’க்குப் பிறகு அதிகபட்சம் நாலஞ்சு தடவை சந்திச்சிருப்போம். ரஜினி சார்கூட ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு முறை பேசிடுவேன். யாரா இருந்தாலும் நிர்பந்தம்னு ஒண்ணு இருந்தாதான் அரசியலுக்கு வர முடியும். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மாஸ்... இவர் கிளாஸ். அரசியல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை.''

''சரி... இப்போ உண்மை சொல்லுங்க, 'கோச்சடையான்’ படத்தின் ஸ்டேட்டஸ் என்ன?''

''போன வாரம்தான் படம் பார்த்தேன். ரொம்பப் பிரமாண்டமா வந்திருக்கு. ரஜினி சாருக்கும் எனக்கும் பரம திருப்தி. சௌந்தர்யா ரொம்பப் பிரமாதமா டைரக்ஷன் பண்ணியிருக்காங்க. இந்த மாதிரியான படங்களுக்கு ஷூட்டிங்குக்கு 20 நாள் போதும். ஆனா, போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள்தான் மாசக்கணக்கில் இழுக்கும். 'கோச்சடையான்’ல கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை என் பொறுப்பு. படத்தை ரசிகர்களுக்கு விஷ§வல் விருந்தாக் கொடுக்க வேண்டியது சௌந்தர்யாவின் பொறுப்பு. படம் முழுக்க சுத்தத் தமிழ். ரஜினி சாரும் இலக்கிய நடையில்தான் வசனம் பேசி இருக்கார். ரொம்பப் புதுசா, வித்தியாசமா இதுவரை பார்க்காத ரஜினியைப் பார்க்கப்போறீங்க. நானே ரஜினியை அப்படிப் பார்த்தது இல்லை. அடிச்சுச் சொல்றேன்... இந்தப் படத்தைக் குறைஞ்சது அஞ்சு முறை பார்ப்பீங்க. அவ்ளோ புடிக்கும்!''

''ஆனா, 'கோச்சடையான்’ படத்தில் இருந்து உங்களை நீக்கிட்டதாவும் மாதேஷை நியமிச்சதாவும் செய்திகள் றெக்கையடிக்கின்றனவே?''

''நானும் அதைக் கவனிச்சுட்டுதான் இருக்கேன். கேட்டுட்டு ரஜினி சாரே சிரிக்கிறார். எதுவா இருந்தாலும் அவர் சொல்லட்டும். படப்பிடிப்பு என் பொறுப்பு. அதை முடிச்சுக் கொடுத்துட்டேன். இப்போ மாதேஷ் வேலை பார்க்கிறார்னா, அவரோட தேவை அங்கே இருக்கும். எடிட்டிங்கில் எதுவும் உதவினா, 'எடிட்டிங் உதவி’னு அவர் பேரைப் போட்டுக்கச் சொல்லுங்க. யாரும் யாரை நம்பியும் இங்கே வாழ்க்கை நடத்துறது இல்லை. நானும் யாரை நம்பியும் இல்லை!''

''அடுத்து ரஜினி, கமல்... யாராவது ஒருத்தரைவெச்சு பக்கா கமர்ஷியல் படம் கொடுப்பீங்கன்னு பார்த்தா, வடிவேலு நடிக்கிற படத்தை இயக்கப்போறீங்கன்னு சொல்றாங்களே... உண்மையா?''

'' 'கோச்சடையான்’ முடிஞ்ச பிறகு 'ராணா’ பத்திப் பேசலாம்னு ரஜினி சார் சொல்லிட்டார். 'பஞ்சதந்திரம் பார்ட் 2’னு பேச்சு வந்தது. ஆனா, அதிகாரபூர்வமா கமல் சார் தரப்பில் இருந்து யாரும் பேசலை. அந்த இடைவேளையில் வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே’னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன். பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்!''

க.ராஜீவ் காந்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்