Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷாரூக் கான் சர்ப்ரைஸ் மீட்!

றுவைசிகிச்சை காரணமாக வலது கையில் கட்டு, 'ஸாரி... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு’ என்று உதடுகளில் புன்னகை, பார்ப்பவருக்கும் பற்றிக்கொள்ளும் துறுதுறுப்பு... 'சென்னை எக்ஸ்பிரஸ்’  ஷாரூக் கான். ஹோட்டல் கண்ணாடி வழியே தளும்பும் மும்பையின் அரபிக் கடல் அலைகளை ரசித்துக்கொண்டே, சகஜமாக, சரளமாகப் பேச ஆரம்பித்தார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்!

'' 'ரா - ஒன்’ படத்தில் சேகர் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞனாக நடித்தீர்கள்... இப்போது 'சென்னை எக்ஸ்பிரஸ்’. தொடர்ந்து தமிழர்களை மையப்படுத்திப் படம் பண்ணுகிறீர்களா?''

''இதைச் சொல்வதால் இந்தியாவின் பிற பகுதியில் இருப்பவர்கள் என் மீது கோபித்துக்கொள்வார்கள். ஆனால், உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது. தொழில்நுட்பம், சாஃப்ட்வேர் என்று வந்துவிட்டால் தென் இந்தியர்கள்... குறிப்பாகத் தமிழர்கள்தான் டாப். நான் நடித்த 'ஸ்வதேஸ்’ இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு அமெரிக்கர்கள் இடையே ஒரே இந்தியனாக நான் பேசுவதுபோலப் படம் பிடிக்க வேண்டும். ஆனால்,  நாசாவுக்குள் பார்த்தால், 75 சதவிகிதம் தமிழர்கள்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி. நாசா அதிகாரிகளிடம் அமெரிக்கர்களிடையே வேலை செய்வதுபோன்ற காட்சிகள் வேண்டுமென்று சொல்லி, அங்கிருந்த கொஞ்சநஞ்ச வெள்ளைக்காரர்களைத் தேடிப்பிடித்து நடிக்கவைத்துப் படம் பிடித்தோம். அதனால்தான் 'ரா-ஒன்’ பட ஹீரோ சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்ப்பவன் என்றதும், சேகர் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞனாக அந்த கேரக்டரை அமைத்தோம். 'சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கதைப்படி பாட்டியின் வேண்டுதலுக்காக ராமேஸ்வரம் வருகிறான் ஹீரோ. அங்கே ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்... அவளோடு காதல்... தொடர்ந்து மோதல். 'சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்திருக்கும் 99 சதவிகிதம் பேர் தென் இந்தியர்கள்தான். எனக்குத் தமிழர்களை மிகவும் பிடிக்கும். அதனால், அவர்களோடு பணிபுரிவது எனக்குச் சுலபமாக இருக்கிறது!''

''ஆனால், 'சென்னை எக்ஸ்பிரஸ்’ டிரெய்லரில் நீங்கள் தென் இந்தியர்களையும் தமிழ் சினிமாவையும் கிண்டலடிப்பதுபோலக் காட்சிகள் இருக்கின்றனவே?''

''ட்விட்டர், ஃபேஸ்புக்கில்கூட நான் தென் இந்தியர்களைக் கிண்டல் செய்வதாக எழுதுகிறார்கள். அப்படி எழுதுபவர்களை முட்டாள்கள் என்றுதான் சொல்வேன். நான் தமிழர்களைக் கிண்டல் செய்வதாக இருந்தால், சத்யராஜ்ஜி எப்படி இந்தப் படத்தில் நடித்திருப்பார்? சத்யராஜ் எப்படிப்பட்டவர், அவரது மொழிப்பற்று பற்றியெல்லாம் உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்டவர், தமிழர்களைக் கிண்டல் செய்யும் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ன? ப்ரியாமணி, பெங்களூரைச் சேர்ந்தவர். தீபிகா, மங்களூரைச் சேர்ந்தவர். இப்படி தென் இந்தியர்கள் அதிக அளவில் வேலை பார்த் திருக்கும் இந்தப் படத்தில், எப்படித் தமிழர்களைக் கிண்டல் செய்ய முடியும்? நான் தமிழர்களைக் கிண்டல் செய்கிறேன் என்று சொல்வது நியாயம் இல்லாத குற்றச்சாட்டு!''

''உங்கள் படம் வெளியாகும்போது இந்தியா முழுக்கப் பரபரக்கிறது. இந்தியாவுக்கு வெளியிலும் உங்கள் படங்களுக்கு நல்ல மார்க்கெட். தமிழ் சினிமா ஹீரோக்கள்போல நீங்களும் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது?''

''இந்தி சினிமாவுக்கு இந்தியா முழுக்க மார்க்கெட் உண்டு என்று சொல்வார்கள். தமிழ் சினிமாவை உள்ளூர் சினிமா என்பார்கள். தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே பார்ப்பதால் 'உள்ளூர் சினிமா’ என்று தமிழ் சினிமாவைத் தவறாக அடையாளமிடுகிறார்கள். ஆனால், அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இந்திப் படங்களைவிட தமிழ்ப் படங்களுக்குத்தான் மார்க்கெட் அதிகம். லாபம் அதிகம். இந்தியைத் தேசிய மொழி என்கிறார்கள். ஆனால், மூணாறில் படப்பிடிப்புக் குச் சென்றால், அங்கு ஒருவருக்குக்கூட இந்தி தெரியவில்லை. இந்தி நடிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் உள்ளூர் நடிகர்களும் இல்லை. இந்தியா முழுக்கச் செல்வாக்குமிக்க நடிகர்களும் இல்லை. ஆனால், தமிழ் நடிகர்களுக்குத் தமிழ்நாட்டில் வேர் இருக்கிறது. உலகம் முழுக்கப் பரவியிருக்கும் தமிழர்களி டமும் ஆதரவு இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த நிலை கிடையாது. மகாராஷ்டிராவில் நான் தேர்தலில் நின்றால், டெல்லிக்காரன் என்று சொல்லி என்னை ஒதுக்கிவிடுவார்கள். டெல்லியில் போட்டியிட்டால், 'மும்பைக்கு நடிக்கப்போன இவன் நம் ஊர்க்காரன் இல்லை’ என்பார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் நின்றால், என்னை இந்திக்காரன் என்பார்கள். பிரபலமாக இருந்தாலும் எங்களுடைய வேர்கள் பலமாக இல்லை.

  

ஆனால், பெர்சனலாகக் கேட்டால், அரசியலில் ஈடுபட சுயநலமாக இருக்கக் கூடாது. ஆனால், நான் அப்படிக் கிடையாது. மேலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நான் எந்த நல்ல விஷயமும் பண்ணவில்லை. எனக்கு 47 வயதாகிவிட்டது. இனிமேல் எப்படி என்னால் சாஃப்ட்வேர் இன்ஜி னீயர் ஆக முடியாதோ, அப்படித்தான் இனிமேல் என்னால் அரசியல்வாதியாகவும் ஆக முடியாது. இது அனைத்தையும்விட முக்கியமாக, நாடாளு மன்றத்தில் ஒளிந்துகொண்டு, என்னால் சிகரெட் பிடிக்க முடியாது. பைஜாமா, குர்தா அணிந்து கொண்டு, சலாம் போடவும் தெரியாது!''

சார்லஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்