வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (11/07/2013)

கடைசி தொடர்பு:13:56 (11/07/2013)

“இங்கே, ஒவ்வொருத்தருமே எம்.ஜி.ஆர்.தான்!”

''இப்போ ரெண்டு பேர் பேசிட்டு இருக்காங்க... அவங்க வாய்விட்டுப் பேசிக்கிறதைத் தாண்டி, உள்ளே மனசுக்குள்ள, 'நீ சொல்றதுல எவ்வளவு பொய்னு எனக்குத் தெரியாதா?’னு ஒரு நினைப்பு ஓடும். சமயங்கள்ல எதிராளி பேசுவதில் மனசு கவனம் பதிக்காம, நம்ம மனசுக்குள் வேற ஏதோ நினைச்சுட்டு இருப்போம். இப்படிப் பேசுற வார்த்தைகளுக்கு இடையில் மனசுக்குள் ஓடுற அந்த இரண்டாவது நினைப்புதான், பெரும்பாலும் நமக்கு வில்லனா இருக்கு. எந்த ஒரு விஷயத்தின் மேலயும் முழுக் கவனம் செலுத்தவிடாம, அது நம்மைக் கீழே இழுத்துப் போட்டுட்டே இருக்கும். அந்த இரண்டாவது நினைப்புங்கிற நம்பியாரை மனசைவிட்டு வெளியேத்திட்டா, இங்கே ஒவ்வொருத்தருமே எம்.ஜி.ஆர்-தான். எப்படி இருக்கு என் படத்தோட இன்ட்ரோ?'' - ஆர்வமாகப் பதிலை எதிர்பார்க்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷா. ராஜமௌலி, விக்ரமன், ஆர்.கண்ணன் என வெரைட்டி இயக்குநர்களின் பட்டறைகளில் பணியாற்றியவர், இப்போது 'நம்பியார்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

''லைன் ஓ.கே! ஆனா, மணம், நிறம், குணம்னு வேற என்ன ஃப்ளேவர் சேர்த்திருக்கீங்க?''

''அந்த இரண்டாவது சிந்தனைகளை ஆஃப் பண்ற சுவிட்ச் தேடித்தான் எல்லாரும் அலையுறோம். படிக்கிற இடத்துல, வேலை தேடுறப்போ, அலுவலகத்தில்னு எல்லா இடத்திலும் பிரச்னைகளுக்குக் காரணமா இருக்கிற அந்த இரண்டாவது சிந்தனையை கட் பண்ண நச்னு புத்திசாலித்தனமா ஒரு ஐடியா சொல்லியிருக்கேன். சைக்கலாஜிக்கலாப் பேசுறதால, படம் ஏதோ சீரியஸா இருக்குமோனு நினைச்சு டாதீங்க. ஸ்ரீகாந்த் சார்கூடப் படம் முழுக்க சந்தானம் வர்றார். அந்த ஒரு லைனை முழு காமெடி சினிமாவா மாத்த ஒவ்வொரு தடவையும் ஒரு நோட்புக்னு திரைக்கதையை 14 தடவை  எழுதினேன். 15-வது புத்தகத்தை முடிச்சப்பதான், 'ஷூட்டிங் போகலாம்’கிற நம்பிக்கை வந்துச்சு.''

''சந்தானம் ஓ.கே. ஆனா, ஸ்ரீகாந்த், சுனைனானு கட்டாய ஹிட் தேவைப்படும் ஹீரோ - ஹீரோயினை வெச்சுக்கிட்டு முதல் படம் பண்றீங்களே?''

''ஸ்ரீகாந்த் சாருக்கு 'நம்பியார்’தான் இனி அடையாளமா இருக்கும். என் ஹீரோங்கிறதுக்காகச் சொல்லலை... மனுஷன் அப்படி ஒரு உழைப்பாளி. அவர் அடிவாங்குற மாதிரி ஒரு ஷாட். சீன் சரியா வரணுமேனு ரெண்டு மூணு டேக் போனோம். பிரேக்ல பார்த்தா, அவர் கன்னம், காது எல்லாம் சிவப்பாக் கன்னிப்போய் இருந்துச்சு. நான் பதறிட்டேன். 'நமக்குத் திருப்திதான் முக்கியம்’னு இயல்பா சிரிக்கிறார். சுனைனா, இதுல வேற பொண்ணு. பாட்டு, கிளாமர்னு சும்மா வந்துட் டுப் போகாம, அவ்வளவு தூரம் நடிக்க ஸ்கோப் இருக்கு பொண்ணுக்கு.''

''படத்தில் நம்பியார் யார்?''

''நம்புவீங்களா..? சந்தானம்தான் படத்தோட நம்பியார். ஹீரோ ஸ்ரீகாந்த் கேரக்டர் பேர், ராமச்சந்திரன். சுனைனா பேர், சரோஜாதேவி. நம்பியார் சார் மகன் மோகன் நம்பியாரைப் பார்த்துப் பேசிச் சம்மதம் வாங்கித்தான் டைட்டிலைப் பதிவுசெய்தோம்!''

''தென்னிந்தியாவின் 'மோஸ்ட் ஹிட்’ டைரக்டர் ராஜமௌலிகிட்ட வேலை பார்த்திருக்கீங்க. அவரோட வேலை எப்படி இருக்கும்?''

''ராஜமௌலி சார்கூட 'சிம்மாத்ரி’ தொடங்கி ஐந்து படங் களுக்கான டிஸ்கஷன்ல இருந்திருக்கேன். தன்னோட ஒவ்வொரு படத்துக்கும் கதை உதவி, திரைக்கதை உதவினு ஏதோ ஒரு கார்டுல என் பேரைச் சேர்த்திடுவார். அவரோட வொர்க்கிங் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது. யார் யார் எப்படி நடிக்கணும்னு தெளிவா நடிச்சுக் காட்டிடுவார். திரைக்கதையை க்ளைமாக்ஸ் நோக்கி பரபரனு ஃபாஸ்டா நகர்த்துறதுல ஆர்வமா இருப்பார். ஒரே ஒரு ஃபைட்டா இருந்தாலும் அது நச்சுனு இருக்கணும்னு அடிக்கடி சொல்வார். அதேபோல வில்லன்கள் பயன்படுத்துற ஆயுதங்களுக்கு அவர் ரொம்ப மெனக்கெடுவார்!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: எல்.ராமச்சந்திரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்