வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (11/07/2013)

கடைசி தொடர்பு:14:32 (11/07/2013)

“எனக்கு நானே ஒரு கிஃப்ட்!” - அப்சரா ரெட்டி

ஜய் ரெட்டியாக மீடியா உலகுக்கு அறிமுகம் ஆனவர், இப்போது அப்சரா ரெட்டியாக மாறியிருக்கிறார். திருநங்கையான அப்சரா ரெட்டி... இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகளின் சென்னைப் பதிப்பின் இணைப்பு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். தமிழ்த் திரை நட்சத்திரங்களுக்கு நெருக்கமான தோழி. இப்போது தந்தி டி.வி -யில் 'நட்புடன் அப்சரா’ என்னும் நிகழ்ச்சியை வழங்குகிறார்.

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ப்ளஸ் டூ வரைக்கும் சிஷ்யா பள்ளியில் படிச்சேன். அதன் பிறகு, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படிச்சேன். எனக்குள் இருந்த பெண்மையை அதிகமா உணர ஆரம்பிச்சதால், இப்போ முழுப் பெண்ணாகவே மாறிட்டேன். திருநங்கையாக இருந்தால், எல்லோரும் தள்ளிவைப்பாங்கனு சொல்வாங்க. ஆனால், என் வாழ்க்கையில் நான் அப்படி மோசமான சம்பவங்கள் எதையும் சந்திச்சது இல்லை. எங்க அப்பா, அம்மா எனக்கு எப்பவுமே ரொம்ப சப்போர்ட். 'எங்களுக்கு இது புரியாம இருக்கலாம். ஆனா, உனக்கு என்ன பிடிச்சிருக்கோ... அதைப் பண்ணு’னு சொல்லிட்டாங்க!''

''ஒரு திருநங்கையாக இருந்து மீடியா உலகில் வளைய வருவதை எப்படி உணர்கிறீர்கள்?''

''திருநங்கைன்னா உடனே ஒரு இயக்கம் ஆரம்பிச்சு, உரிமைகளுக்காகப் போராடணும்னு எதிர்பார்க்கிறாங்க. திருநங்கைகளும் இந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கம்தான். நான் எல்லா ஆண், பெண் போலவும் நல்லாப் படிச்சேன். நல்ல வேலை கிடைச்சது. நல்லா சம்பாதிக்கிறேன். லண்டனில் இருந்தபோது ஸ்காட்லாண்ட் யார்டு, காமென்வெல்த் செகரெட்டேரியட்ல வேலை செஞ்சிருக்கேன். இப்போ சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல்னு இரண்டு பெரிய செய்தித்தாள்களின் சென்னை எடிஷனில் ஆசிரியராக வேலை பார்த்திருக்கேன். திருநங்கை என்பதால், என்னை யாரும் ஒதுக்கிவெச்சது கிடையாது. ஷாப்பிங் போகும்போது நிறையப் பேர் என்னைப் பார்த்து 'நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?’னு கேட்பாங்க. அதை நான் ஒரு கிஃப்ட்டாத்தான் பார்க்கிறேன்!''

''சிம்பு, தனுஷ், த்ரிஷானு நிறையப் பேர் உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்காங்களே?''

 

''ஆமா... என்னுடைய உணர்வுகளைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டவங்க. ஒரு நாள் சிம்புகூட வெளியே போயிருக்கும்போது, நிறைய ரசிகர்கள் போட்டோ எடுக்க வந்தாங்க. எனக்குக் கொஞ்சம் கூச்சமா இருந்தது. 'நீ எதுக்கு ஒதுங்கி நிக்குறே. தப்பாப் புரிஞ்சுக்கிறவங்க, தப்பாத்தான் புரிஞ்சுக்குவாங்க. அதையெல்லாம் கண்டுக்காதே’னு அட்வைஸ் பண்ணினார். தனுஷ், த்ரிஷா, நமீதானு எல்லோருமே எனக்கு நல்ல நண்பர்கள்!''

''யார் உங்களுடைய இன்ஸ்பிரேஷன்?''

''ஜெயலலிதா ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஸ்ட்ராங்கான, போல்டான பெண்மணி. எனக்கும் அரசியல் ஆசை உண்டு. இன்னும் ரெண்டு, மூணு வருஷத்தில் தீவிர அரசியலில் இறங்குவேன்!''

'' 'நட்புடன் அப்சரா’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்?''

''பிரபலங்கள் வெளியில் எங்கேயும் பேசாத விஷயங்களை, இந்த நிகழ்ச்சியில் பேசுவாங்க. இதை இதயத்தோட பேசுற நிகழ்ச்சினு சொல்லலாம். சிம்பு, தனுஷ், அமலா பால், சிம்ரன், நமீதானு நிறையப் பேர் மனசுவிட்டுப் பேசியிருக்காங்க. சிம்பு 'நான் ஏன் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படுறேன்?’னு பேசியிருக்கார். சிம்ரன் அவங்க கணவர் மேல இருக்கிற சந்தேகம் பத்திப் பேசியிருக்கார். அனிருத், தன்னைவிட வயசுல மூத்தவங்களை ஏன் லவ் பண்ணக் கூடாதுனு பேசியிருக்கிறார். ஹீரோயினா புக் பண்ணிட்டு அப்புறம் எப்படி அயிட்டம் கேர்ளா மாத்தினாங்கனு நமீதா வெளிப்படையாப் பேசியிருக்காங்க. வரப்போற இந்த நிகழ்ச்சி நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்!''

- சார்லஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்