“நாலு கோடி வாங்கிக்க நான் ரெடி!” | சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (15/07/2013)

கடைசி தொடர்பு:13:37 (15/07/2013)

“நாலு கோடி வாங்கிக்க நான் ரெடி!”

''இது எதையுமே நான் எதிர்பார்க்கலைங்க. 'அடுத்தடுத்து ஹிட்ஸ்’னு சினிமாவுலயும் வெளியிலயும் ஆச்சர்யமாப் பேசுறாங்க. அட, 'அடுத்தடுத்த’வை விடுங்க. முதல்ல எல்லாரும் 'ஹிட்டு’னு ஒப்புக்கிறதே பெரிய விஷயம்ல. இதுல என் ஃபார்முலானு எதுவுமே கிடையாது. எல்லாருக்கும் புரியிற மாதிரி, எல்லாருக்கும் புடிக்கிற மாதிரியான படங்கள் நடிக்கணும். அவ்வளவுதாண்ணா நம்ம டார்கெட்!''- நெஞ்சில் கை வைத்து நிறைவாகச் சிரிக்கிறார் சிவகார்த்திகேயன். 'இன்னார் ஹீரோ’ என்று தெரிந்ததுமே சடசடவென ஏரியா விற்கும் பட்டியலில் 'மேலே... மேலே...’ வந்துவிட்டார் சினா கானா!  

''அப்பாவியாப் பேசினாலும், சாந்தி தியேட்டருக்கு ஒரு படம்... சத்யம் தியேட்டருக்கு ஒரு படம்னு பிளான் பண்ணிப் பண்ற மாதிரியே இருக்கே..?''  

''அட ஏங்க... பட்ஜெட்டுக்கும் எனக்கும் என்னங்க சம்பந்தம்? ஆனா, நான் நடிச்ச முதல் படத்துல இருந்தே கவனிச்சீங்கன்னா, பட்ஜெட்ல இருந்து பிசினஸ், வசூல் வரை எல்லாமே பாசிட்டிவ் வளர்ச்சியில் இருக்கு. அதுதான் எனக்குச் சந்தோஷம். நான் ஒண்ணும் சினிமால புதுமை படைக்கவோ, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தவோ திட்டம் போட்டு வரலை. ஆனா, ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டணும்னு மட்டும் ஆசைப்படுறேன். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மாதிரி 'எதிர்நீச்சல்’ இருக்காது. 'எதிர்நீச்சல்’ மாதிரி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இருக்காது!''  

''தனுஷ் தன் மனைவி, பசங்களை மிஸ் பண்ணுவாரானுகூடத் தெரியலை. ஆனா, உங்களை மிஸ் பண்றதா ட்விட்டர்லாம் போடுறார். இது என்ன புது கெமிஸ்ட்ரி?''

''அவர் 'மிஸ் யூ சிவா’னு ட்வீட் பண்ண அடுத்த நாளே அவரைப் போய்ப் பார்த்துட்டேன். 'நான் இமயமலைக்கெல்லாம் போயிடலை. ஜஸ்ட் தேனி அடிவாரத்துலதான் இருந்தேன். உலகத்தின் எந்த சக்தியாலும் என்னை உங்ககிட்ட இருந்து பிரிக்கவே முடியாது’னு சொல்லிட்டு வந்தேன். அவர் என்னை ரொம்ப நம்புறார். அதுக்கு நான் உண்மையா இருக்கேன். 'காதல் கொண்டேன்’ பார்த்தப்ப, 'அட... நம்மளை மாதிரியே இருக்காரே’னு நினைச்சேன். அப்போ இருந்து அவரை எனக்குப் பிடிக்கும்!''

''ஒரு ஹீரோவா வெற்றியைத் தக்கவெச்சுக்கிறது இப்போ ரொம்பக் கஷ்டமாச்சே... ஆரம்பத்துல வளர்த்துவிடுற சோஷியல் மீடியாக்களே, பின்னாடி வாரி விட்ருதே இப்பல்லாம்?''

''முன்னாடி படம் நல்லாருந்தா பக்கத்து வீட்டுக்காரர்கிட்ட மட்டும் சொல்வோம். ஆனா, இப்போ முதல் ஷோ முடிஞ்சதுமே உலகம் மொத்தத்துக்கும் நம்ம கருத்தைச் சொல்லிடுறோம். அதை பாசிட்டிவ்வா எடுத்துக்க வேண்டியதுதான். நம்ம வேலையை கரெக்டா செஞ்சுட்டுப் போயிட வேண்டியதுதான்!''

''சீரியஸான படம் பண்ற ஐடியாவே இல்லையா?''  

''காமெடியில் மட்டுமே தங்கிடக் கூடாதுன்னுதான் 'எதிர்நீச்சல்’ மாதிரியான எமோஷனல் ஸ்க்ரிப்ட்லயும் நடிக்கிறேன். சீரியஸான படங்களை விடுங்க... சினிமால என் பெரிய பேராசை என்ன தெரியுமா? ஷங்கர் சார், முருகதாஸ் சார் படங்களில் வேலை பார்க்கணும். அதுக்கு எனக்குத் தகுதி இருக்கானு தெரியலை. ஆனா, வளர்த்துக்குவேன்!''

''விஜய் சேதுபதியைக் கவனிக்கிறீங்களா?''  

''இங்கே போட்டி பலமா இருந்தாலும் ஒவ்வொரு போட்டியாளருமே எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். போட்டியாளர்கிட்ட இருந்துதான் நிறையக் கத்துக்க முடியும்!''

''அஞ்சு வருஷம் கழிச்சு எங்கே, எப்படி இருப்பீங்க?''

''தமிழ் சினிமாவில் இருக்கணும். அது முக்கியம். நான் நடிச்ச எந்தப் படத்தையும் பின்னாடி பார்த்து, 'ஏண்டா இந்தப் படத்தைப் பண்ணோம்’னு ஃபீல் பண்ணக் கூடாது. அதுவும் முக்கியம்!''

''உங்களுக்கு ஒரு கோடி, ரெண்டு கோடி சம்பளம்னு கிளப்பிவிடுறாங்களே?''

''என்னை வெச்சுப் படம் பண்ண தனுஷ் சார், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார்லாம் திரும்பவும் என்னை வெச்சுப் படம் பண்ண ஆசைப்படுறாங்க. இதுல இருந்தே நான் சம்பள விஷயத்துல எப்படினு புரியும்.

என்னைப் பத்தி கிசுகிசுக்க எதுவுமே கிடைக்கலைனு இப்படிலாம் பரப்பிவிடுறாங்கபோல. ஏங்க,சொல்றதுதான் சொல்றீங்க... ரெண்டு கோடிக்குப் பதிலா நாலு கோடினு எழுதுங்களேன்... கொடுத்தா வாங்கிக்கமாட்டேன்னா சொல்லப்போறேன்!''

- க.ராஜீவ் காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்