“என் சம்பளத்தைப் பத்தி எதுக்குப் பேசணும்?” - விஜய் சேதுபதி | விஜய் சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும்

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (15/07/2013)

கடைசி தொடர்பு:13:44 (15/07/2013)

“என் சம்பளத்தைப் பத்தி எதுக்குப் பேசணும்?” - விஜய் சேதுபதி

''தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்கான விகடன் விமர்சனத்தில் என் நடிப்பு நல்லா இருந்ததுனு குறிப்பிட்டு இருந்தாங்க. அதே படத்தில் நடிச்சதுக்காக எனக்குச் சிறந்த அறிமுகம்னு விகடன் விருது அங்கீகாரம் கிடைச்சது. விகடனின் அந்த ரெண்டு பக்கங்களையும் ஃப்ரேம் பண்ணி  வீட்ல மாட்டிவெச்சிருக்காங்க என் தங்கச்சி!''- சின்னச் சிரிப்புடன் சொல்லும் விஜய் சேதுபதி, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு அமர்கிறார். 'பீட்சா’ தொடங்கி ஹாட்ரிக் ஹிட், அரை டஜன் படங்களுக்கு கால்ஷீட் எனப் பரபரக்கும் விஜய் சேதுபதி 'சினிமா ஹீரோ’ கனவு இளைஞர்களுக்கான இன்றைய ரோல் மாடல்.  

''ஆமாங்க... என்னைச் சந்திக்கிற நிறைய இளைஞர்கள் கண்கள்ல புது நம்பிக்கை மின்னுது. அந்த நம்பிக்கை மட்டும் இல்லாமத்தான் நான் பல வருஷம் திண்டாடிட்டு இருந்தேன். 'தென்மேற்குப் பருவக்காற்று’ முடிச்சு நல்ல பேர் வாங்கின பிறகும் ரெண்டு வருஷம் கஷ்டம்தான். அப்போ என் மேல நம்பிக்கைவெச்ச ஒரே நபர் இயக்குநர் சீனுராமசாமிதான். 'டேய், 'இப்படிக் கதை கேளு, அப்படிக் கதை கேளு’னுலாம் உன்கிட்ட சொல்ல மாட்டேன். ஏன்னா, நல்ல சினிமாக்காரனா வர்றதுக்கான எல்லாத் திறமையும் உன்கிட்ட இருக்கு, நம்பிக்கையைத் தவிர!

நீ உன்னை நம்பு. உன் திறமையை நம்பு. கடுமையா உழைச்சுட்டே இரு. மத்ததெல்லாம் தானா நடக்கும்’னு சொல்வார். இப்போ அதுதான் நடந்திருக்கு. அப்படி இளைஞர்களுக்கு ஏதோ ஒரு வகையில் என் பயணம் நம்பிக்கை கொடுக்கிறது சந்தோஷமா இருக்கு!''

''அடுத்தடுத்து மூணு படங்கள் ஹிட். ரசிகர்கள் பல்ஸ் என்னனு பக்காவா பிடிச்சிட்டீங்கபோல?''

''முதல் நாள், முதல் ஷோ 'சூது கவ்வும்’ ஸ்க்ரீனிங்ல நானும் தியேட்டர்ல உக்காந் திருக்கேன். ரசிகர்கள் ஏத்துப்பாங்களா... மாட்டாங்களானு பயத்துல உடம்பு நடுங்கிட்டு இருக்கு. முதல் 10 நிமிஷத்துக்கு அப்புறம் தான் அந்த நடுக்கம் மறைஞ்சு இயல்புக்கு வந்தேன். நாம எவ்வளவுதான் யோசிச்சு முடிவெடுத்து நடிச்சாலும், நம்ம கணக்கு சமயங்கள்ல மிஸ் ஆகிடும். அதனால சினிமாவில் இருக்கிற வரை அந்த நடுக்கம் இருந்துட்டே இருக்கும். அதை மனசுல ஏத்திக்காம நம்ம வேலையை மட்டும் ஒழுங்காப் பார்க்கணும். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ டைட்டில் எங்க டீம் தவிர, யாருக்குமே பிடிக்கலை. 'நண்பர்கள் சேர்ந்து படம் பண்றது நல்ல விஷயம். ஆனா, டைட்டிலை மட்டும் மாத்திடுங்க’னு சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா, 'இந்தக் கதைக்கு இதுதான் சரி’னு நாங்க உறுதியா இருந்தோம். படம் ரிலீஸான பிறகு, எல்லாரும் அதை ஏத்துக்கிட்டாங்க. ஹீரோ, டைரக்டர் பத்தி எந்த அபிப்ராயமும் இல்லாம, புதுப் பசங்க ஏதோ வித்தியாசமா பண்ணியிருப்பாங்கனு நம்பிப் படம் ரிலீஸ் ஆகும் அந்த வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள்தான் எங்களுக்குத் தெய்வம்!''

''மத்த ஹீரோக்கள் சத்தம் இல்லாம உங்க வளர்ச்சியைக் கவனிக்கிறாங்க... ஆனா, யாரும் வாழ்த்தினாங்களா?''

''பாலா சார், 'ஜெயம்’ ரவி, சித்தார்த், நாசர், ரேகா மேடம்னு பலர் வாழ்த்தினாங்க. எவ்வளவோ வேலைகளுக்கு நடுவுல என்னை மெனக்கெட்டு வாழ்த்தணும்னு நினைச்ச அந்த மனசுதான் பெரிய விஷயம்!''

''சம்பளத்தை எக்கச்சக்கமா ஏத்திட்டீங்கனு ஒரு பேச்சு இருக்கே?''

''யார் பேசிக்கிறாங்கனு சொல்லுங்க? என்கூட வேலை பண்ணவங்க யாரும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்க. அப்படி என்கூட வேலை செய்யும், செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சொல்றாங்கன்னா, அவங்களுக்கு நான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். ஆனா, எங்கேயோ தெரு முக்குல நின்னுக்கிட்டு, 'விஜய் சேதுபதி எக்கச்சக்க சம்பளம் கேக்குறான்’னு சொல்றவங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!''

''உங்க குடும்பத்தைப் பத்திப் பேசுறதுல ஆர்வம் காட்டமாட்டேங்குறீங்களே?''

''இதுல மறைக்க என்ன இருக்கு? நான், என் மனைவி, ரெண்டு குழந்தைங்க. ஏதோ இன்னைக்கு நான் செய்திகள்ல அடிபடுறதால, குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்த மறுக்கிறேன்னு நினைக்க வேண்டாம். என் இயல்பே அதுதான். என் சினிமா வெளிச்சம் அவங்க சுதந்திரத்துக்கு இடைஞ்சலா இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்... அவ்வளவுதான். மத்தபடி வேற எந்தக் காரணமும் இல்லை!''

- ம.கா.செந்தில்குமார், படம்: பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்