Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஓம் மின்சாரம் ஓம்!

''எல்லாரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஒரு விஞ்ஞானியாகத்தான் பார்க்கிறோம். ஆனா,  'அடுத்தவங்களுக்காக வாழ்ற வாழ்க்கைதான் அர்த்தமுள்ள வாழ்க்கை’னு அற்புதமான வாழ்க்கைத் தத்துவம் சொன்னவர் அவர். அந்தத் தத்துவம்தான் எங்க படத்தின் ஒன் லைன்!''- சினேகமாகச் சிரிக்கிறார் சூர்ய பிரபாகர். 'காதலர் தினம்’ கதிர், 'சிட்டிசன்’ சரவண சுப்பையா, 'குஷி’ எஸ்.ஜே.சூர்யா, 'திருடா திருடி’ சுப்ரமணிய சிவா, 'எஸ்.எம்.எஸ்.’ ராஜேஷ் என ஏகப்பட்ட இயக்குநரிடம் பாடம் படித்துவிட்டு, இப்போது 'ஓம் சாந்தி ஓம்’ என்று அறிமுகத் தடம் பதிக்கவிருக்கிறார்.

''இந்தியில ஷாரூக்கான் நடிச்ச ஹிட் பட டைட்டில் 'ஓம் சாந்தி ஓம்’. தமிழ்ல நீங்க என்ன சொல்லப்போறீங்க?''

''எல்.கே.ஜி. படிக்கிற பையன், கல்லூரி மாணவன், நடுத்தர வயசுப் பெண்மணி, 60 வயது சீனியர் சிட்டிசன், ஸ்ரீரங்கத்துல வேலை பார்க்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர்... இவங்க அஞ்சு பேருக்கும் ஒரு பிரச்னை. அந்தப் பிரச்னையை ஹீரோ ஸ்ரீகாந்த் எப்படித் தீர்க்கிறார்... இதுதான் கதை. மத்தவங் களுக்காக ஓடி ஓடி உதவி செய்யிற ஹீரோவோட அந்த உதவும் கேரக்டரே அவர் காதலுக்கு எதிரி ஆகிடுது. பிரிஞ்ச காதலுக்கு இறுதியில் என்ன ஆகுதுங்கிற சஸ்பென்ஸை சுவாரஸ்யமான ட்விஸ்ட்களோட சொல்லியிருக்கேன். காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறைனு படத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் மென்மையான உணர்வுகள்தான்!''

''இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மென்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா?''

''நிச்சயமா! 'மத்தவங்க கஷ்டத்தைப் பார்த்துக் கண்ணீர் விடுறதைவிட, கண்ணீரைத் துடைக்கிற வனுக்குத்தான் மரியாதை அதிகம்’, 'இந்த உலகத்துல உதவினு கேட்டு வர்றவனுக்கு உதவி செஞ்சதால் கெட்டுப்போனவன் யாரும் இல்லை’, 'அவங்க எப்பவும் அப்படித்தான், நாங்க எப்பவுமே இப்படித்தான்’... இப்படி டிரெய்லர்ல யும் டீஸர்லயும் கவனிக்கவைக்கும் வசனங்கள் நிச்சயம் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும். சிம்பிளா சொல்லணும்னா, படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் இறந்துபோன தன் மனசுக்கு நெருக்கமானவங்களை நினைச்சுக்குவாங்க!''

''மென்மையான படத்தின் படப்பிடிப்பு மென்மையா அமைஞ்சதா?''

''மின் வெட்டுப் பிரச்னைதான் எங்களை ரொம்ப டீஸ் பண்ணிருச்சு. ஸ்ரீரங்கத்துல ராத்திரி நடக்கிற மாதிரி சில சம்பவங்கள். அஞ்சு கதாபாத் திரங்கள் நடிக்கும் காட்சி அது. ஸ்ரீரங்கத்துல சாயங்காலத்துக்கு மேல அதீத மின் வெட்டு. ஒவ்வொரு ஏரியா வுலயும் ஒரு ஆளை நிக்கவெச்சு, மின்சாரம் வந்ததும் தகவல் சொல்லச் சொன்னோம். தகவல் வந்து, நாங்க அங்கே போய் இறங்கி கேமராவை செட் பண்ணிட்டு நிமிர்ந்தா, கரன்ட் கட்! சரி... அங்கே இங்கே அலைய வேணாம். ஒரே இடத்துலஇருப் போம். அங்கே எப்ப மின்சாரம் வருதோ அப்போ படம்எடுத் துக்கலாம்னு காத் துட்டு இருந்தா, அந்த ஏரியாவுல மட்டும் கரன்ட் வரவே வராது. இப்படிப் பல நாள் கண்ணாமூச்சி விளையாடித்தான் படப்பிடிப்பை முடிச் சோம். அப்போலாம் பொறுமையா இருந்து மனசை ஒருமுகப்படுத்தக் கத்துக்கிட்டோம். அந்த யோக மன நிலைதான் அத்தனை பரபரப்புகளின் பாசிட்டிவ் பக்க விளைவு!''

''நிறைய இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கீங்க... ஒவ்வொருத்தரிடமும் என்ன கத்துக்கிட்டீங்க?''  

''கதிர் சார்கிட்ட பாடலுக்கான விஷுவல் ட்ரீட்மென்ட் கத்துக்கிட்டேன். அவர் எப்பவுமே தன் உதவியாளர்கள்கிட்ட நெருக்கமான நண்பன் போலத்தான் பழகுவார். 'நிறையப் பெண்களைக் கவனிங்க... நல்லா டிரெஸ் பண்ணுங்க... லவ் பண்ணிட்டே இருங்க’னு சொல்வார். சுப்ரமணிய சிவா தூங்காமக்கொள்ளாம வேலையே பழியாக் கிடப்பார். அவர் பக்கத்துல நின்னாலே நமக்கும் அவரோட சின்சியாரிட்டி தொத்திக்கும். எஸ்.ஜே.சூர்யாகிட்ட வேலை பார்த்தப்போ தான் திரைக்கதை எப்படி மோல்ட் பண்றதுனு கத்துக் கிட்டேன். ஹ்யூமரை எந்த சீனில் கரெக்டா, கச்சிதமா ப்ளேஸ் பண்ணணும்னு ராஜேஷ்கிட்ட கத்துக்கிட்டேன். இவங்க எல்லாரோட ப்ளஸும் ப்ளஸ்ஸிங்ஸும் என் படத்துக்கு உண்டு!''

- க.நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement