வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (18/07/2013)

கடைசி தொடர்பு:15:18 (18/07/2013)

“இயக்குநர்களுக்குத் தைரியமே இல்லை!” - சீறும் செல்வராகவன்

''தமிழ் சினிமாவில் இப்போ ஒரு நல்ல கதை சொல்றதே  பாவம்னு ஆகிருச்சு. 'பருத்திவீரன்’ டைப் கிராமத்துக்கதை யையோ, நாகரிகக் கோளாறு களையோ, நாட்டில் நடக்கும் பிரச்னைகளையோ எடுத்தா, அது அநியா யம்னு சொல்றாங்க.  சம்பந்தமே இல்லாமக் கத்தணும், இல்லைனா பத்து பேர் சேர்ந்து காமெடிங்கிற பேர்ல அர்த்தமே இல்லாம சிரிக்கணும். இதுதான் தமிழ் சினிமாவோட லேட்டஸ்ட் டிரெண்ட். இதுக்கு நடுவுல நான் ஏன் கதையைப் பத்திப் பேசணும்? அடப் போங்க சார்!''

- இது, ''இரண்டாம் உலகம் எப்படிப்பட்ட படம்?'' என்று கேட்டதற்கு செல்வராகவனிடமிருந்து வந்த கோபமான பதில். செம கோபமாக, வெளிப்படையாக செல்வராகவன் பேசியதில் இருந்து...

''ஏதோ அதிருப்தியில இருக்கீங்க போல...''

''நாசாவுல விடுற ராக்கெட்டையும் தீபாவளிக்குக் கடையில் விக்கிற ராக்கெட்டையும் ஒண்ணுன்னு சொன்னா, எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான் இங்கே சினிமாவைப் புரிஞ்சுவெச்சிருக்கோம். பாலிவுட்டில் பிரமாதமான மாற்று சினிமா முயற்சிகள் நடக்குது. தமிழ் சினிமாவும் இப்படி மாறும்னு நினைச்சுதான் 13 வருஷமாக் காத்திருக்கேன். ஆனா, எங்கே ஆரம்பிச்சேனோ, அங்கேயேதான் காத்திட்டிருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு இங்கே தமிழ்ல படம் பண்ண இஷ்டமே கிடையாது!''

''நீங்க யாரைக் குறை சொல்றீங்க?''

''25 வயசுல மனசில் ஃபயர் உள்ள ஒரு பையன், புத்தம் புதுசா ஒரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர்கிட்ட கொடுத்தா, அதைத் தூக்கி அவன் மூஞ்சியிலேயே அடிக்கிறாங்க. அவனோட கதையும் அவ னோட வாழ்க்கையும் அங்கேயே முடிஞ்சி ருது. 'நிறைய பன்ச் டயலாக் பேசணும், இதுவரைக்கும் யாரும் போகாத நாட்டுக்குப் போய் பனி மலை பக்கத்துலேயோ, நீர் வீழ்ச்சி பக்கத்துலேயோ நின்னு பாட்டு எடுங்க’னு, இவங்களே கதையைத் தீர்மானிக்கிறாங்க. காமெடியைத் தவிர வேற எதையும் யோசிக்கிறதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் ஹீரோவும் இப்போ தயாரா இல்லை. இளைஞர்களோட கனவை, அவங்களோட வாழ்க்கையை இன்னும் எத்தனை வருஷத்துக்கு நாசப்படுத்தப் போறாங்கன்னு தெரியலை!''

''நீங்க வித்தியாசமா எடுத்த 'ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி படங்கள் தோல்வியடைஞ்ச நிலையில், அதே மாதிரி படம்தான் எடுப்பேன்னு பிடிவாதமா நிக்கிறீங்களா?''

''அப்படி ஒரு எக்ஸ்பரிமென்ட் ஃபிலிமை ஆடியன்ஸ் பாக்க விரும்பலைன்னா, 33 நாள் தியேட்டரில் படம் ஓடியிருக்குமா? உண்மையில் அந்த மாதிரி படங்களைப் பார்க்க ஆடியன்ஸ் ரெடியா இருக்காங்க. கொடுக்க தயாரிப்பாளர்கள்தான் ரெடியா இல்லை. தயாரிப்பாளர்களுக்குப் பத்து ரூபா போட்டா, குறைஞ்சது 12 ரூபாயாவது லாபம் கிடைக்கணும்தான். ஆனா, இங்கே சேஃப்ட்டியா நாலு ரூபா போட்டு, 40 ரூபா எடுக்க ஆசைப்படுறாங்க. சீனியர் டைரக்டர்களும் கம்ஃபோர்ட் ஸோனை விட்டு  வெளியேவர்றது இல்லை. இவ்வளவு பயந்தா நாம வியந்து பேசுற ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் எல்லாம் வந்திருப்பாங்களா? சீனியர்ஸ் ரிஸ்க் எடுத்தால்தான் அடுத்து வர்ற தலைமுறைப் பசங்க தைரியமாப் புது முயற்சி எடுப்பாங்க. நமக்குப் பின்னாடி சினிமாவுக்கு வந்த கொரியாக்காரர்களும் சீனர்களும் எங்கேயோ போய்ட்டாங்க. அதுதான் என் கோபம்!''

''மற்ற சினிமா நண்பர்களைச் சந்திக்கும் போது இந்த மாதிரி வருத்தங்களை ஷேர் பண்ணிப்பீங்களா?''

''இப்படிப் பேசுறதாலதான் எனக்கு நண்பர்களே கிடையாது. இங்க நண் பர்களா இருக்கணும்னா, முதல்ல முகமூடியை எடுத்து மாட்டிக்கணும். எல்லாரும் பேசுற விஷயத்தையே நாமளும் ஜல்லி அடிக்கணும். 'இன்னைக்கு ஓப்பனிங் எப்படி இருக்கு? பிச்சிக்கிச்சு. ஜி எப்படி இருக்கீங்க?’னு இந்த மாதிரி நிறைய வார்த்தைகள் கத்துக்கணும். அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப் எனக்குத் தேவையே இல்லை!''

''ஓ.கே. உங்க படத்துக்கு வருவோம். 'இரண்டாம் உலகம்’ எப்படிப்பட்ட படம்?''

''அதைக் கண்டுபிடிக்கத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஏழெட்டு மாதங்களுக்கு முன்னாடியே ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. கிராஃபிக்ஸ் வேலைகள் நடந் துட்டு இருக்கு. எனக்கு இன்டர்வியூவில் கதை மாதிரி சொல்லத் தெரியாது. முதல் படத்துலேர்ந்து இப்போ வரைக்கும் என் மனசு என்ன சொல்லுதோ, அதைத்தான் படமா எடுக்கிறேன். நீங்க யோசிக்காத ஒரு விஷயத்தைத்தான் நான் படமா எடுத்திருக்கேன். அது எப்படி வரும், என்ன மாதிரி இருக்கும்னு கேட்டா எனக்குச் சொல்லத் தெரியாது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா ஆடியன்ஸும் நானும் மனசளவில் இணைகிற நல்ல படமா இருக்கும். எனக்குத் தெரிஞ்சு இங்க 90 பெர்சன்ட் காதல் உண்மையா இல்லை. சில காதல் நிர்வாணமாப் பார்க்கிறதோடநின்னு டும். சிலது பத்து நாள் தாங்குனாப் பெரிய விஷயம்.  இது எல்லாத்தையும் தாண்டி உங்க காதல் உண்மையானதா இருந்தா, நீங்க அதில் எவ்வளவு தூரம் போகலாம்னு சொல்லியிருக்கேன்!''

''படத்தில் ஆர்யா, அனுஷ்கா எப்படி நடிச்சிருக்காங்க?''

''படத்தில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்... ரெண்டு பேரோட நடிப்புதான். படத்தில் ரொம்ப கம்மியான கேரக்டர்கள்தான். ஆனா, எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை தயாரிப்பாளர், ஆர்யா, அனுஷ்கா இவங்களோட சேர்ந்து நான்... மொத்தம் நாலே பேர்தான் சுமந்து தூக்கி வந்திருக்கோம். இது ரசிகர்களை மட்டுமே நம்பி எடுத்த படம். அரிவாள்,  கத்தி, பன்ச் இல்லாம எங்க உழைப்பைக் கொட்டிக் கதை பண்ணியிருக்கோம். மக்கள்தான் இதுக்குப் பதில் சொல்லணும்!''

‘‘இந்த தனிமை வேண்டிக்கிட்ட மாதிரில்ல இருக்கு?’’

‘‘முதல்ல இருந்தே நான் தனியாத்தான் இருக்கேன். சினிமா நிகழ்ச்சிகளுக்கும் பெருசா போறதில்லை. அப்படியே வந்தாலும் அது என் தம்பிக்காக இருக்கும். நீங்களே யோசிச்சுப்பாருங்க, உங்களுக்கே போரடிக்கலையா? 15 பேரை மேடையில ஏத்தி, அந்தப் படம் என்ன மாதிரியானப் படம், எப்படி வந்திருக்குனுக்கூட தெரியாமா,  ஒவ்வொரும் அதை ஏதோ ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ ரேஞ்சுக்கு கொண்டுபோய் வெச்சு... எரிச்சலா இல்லையா? கமல் சார்கூட ஒருமுறை, ‘இப்ப என்ன வந்துச்சு... படம் ஓடலைனா கழுத்தப்பிடிச்சா கேக்கப்போறாங்க’னு பேசினார். இதைவிடக்கொடுமை கடைசியா இசை வெளியீடுங்கிற பேர்ல ஒரு பெரிய சக்கரத்தை கொண்டுவந்து தர்றதுதான். இன்னைக்கு சி.டி.யெல்லாம் கிட்டத்தட்ட ஒழிஞ்சேப்போச்சு. ஒன்லி டவுன்லோடுதான். பிடிச்சா கேக்கப்போறாங்க, இல்லைன்னா தூக்கி எறியப்போறாங்க, இதுக்கெதுக்கு நிகழ்ச்சி, அழைப்பிதழ்.. உலகளவில் இதெல்லாம் நாம மட்டும்தான் பண்ணிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன். நான் என்ன அவ்வளவு வேலைகெட்டாப்போயிட்டேன் அங்க வந்து உட்கார்ந்திருக்கிறதுக்கு?’’

‘‘ஒட்டு மொத்த சினிமாவே இப்படித்தான் இருக்குனு சொல்றீங்களா?’’

‘‘ஒண்ணு ரெண்டு முத்து, கோல்டு வரும். ஆனால் நூறு யானைகள் ஓடி வரும்போது அந்தரெண்டு மூணும் நசுங்கி சின்னாபின்னமாகுது என்பதுதான் உண்மை. என்னை விட்ருங்க, இரண்டாம் உலகம்தான் என் கடைசிப்படம்னு கூட வெச்சுக்கங்க. இங்க இருக்கிற ஃபிலிம் மேக்கர்ஸ், முக்கியமா ஹீரோக்கள்தான் இந்த விழிப்பு ணர்வை கொண்டுவரணும். அதுக்கெல்லாம் முன்னாடி, ஒரு பையன் காலேஜ் முடிச்சதும், நான் சாஃப்ட்வேர் டிரை பண்ணப்போறேன்னு சொன்னா அவங்க வீட்ல வர்ற அதே பெருமிதமும் மரியாதையும் சினிமா மேலயும் வரணும். ‘ஓ... சினிமாவுக்காப் போறீங்க வெரிகுட் தம்பி’னு சொல்ற மாதிரி படஙகள் பண்ணணும். இங்க 98 சதவீத மக்களுக்கும் சினிமாவுக்கான சரியான அர்த்தம் தெரியாது. அது, கோடிக்கணக்குல காசு செலவு பண்ணி 2 ஆயிரம் பேருக்குமேல அணுஅணுவா உழைக்கிறாங்க என்பதெல்லாம் தெரியாது. ஆனால் 120 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்டு, ‘படம் குப்பைடா மச்சான்’ என்பதோட மேட்டர் ஓவர். ஆனால் உங்களை அழ வைக்க, ஃபீல் பண்ணவைக்க, வீட்டுக்குப் போனப்பிறகும் ரெண்டு நாள் மந்திரக்கோல்ல கட்டிப்போட்டது போல ஆட்டிவைக்கனு உண்மையான சினிமா நீங்கள் நினைப்பதைவிடப் பெருசு. இந்த விழிப்புணர்வு இல்லைனா 2028லயும் பன்ச் டயலாக் பேசுவோம். உலகம் வேற எங்கேயோ போயிட்டு இருக்கும்!’’

‘‘எம்.ஜி.ஆர். ரஜினி, விஜய்...னு காலங்காலமா பன்ச் டயலாக் பேசுற ஹீரோக்கள்தானே சினிமாவை நகர்த்திட்டு இருக்காங்க?’’

‘‘அப்ப குழிப்பணியாரம் சாப்பிட்டீங்க. இப்ப எதுக்கு பீட்சா கேக்குறீங்க? வேட்டி கட்டின தமிழனுக்கு இன்னைக்கு ஜீன்ஸை தவிர வேறெதும் தெரியலை. ஒரு புத்தகக்கடையில போய், தமிழ்ல பேசி ஒரு புத்தகம் இருக்கானு விசாரிக்க இன்னைக்கு யாருக்காவது தைரியம் இருக்கா? இப்படி மொழி, உடை, உணவுல மாத்திக்கிட்டு புதுசை பிடிச்சுக்குறீங்கள்ல, சினிமாவுக்கு மட்டும் ஏன் இதை அப்ளை பண்ண மாட்டேங்குறீங்க? மக்களும் சினிமான்னா தீண்டத்தகாத விஷயம், வீடு கிடையாதுங்கிற சீப்பான எண்ணத்தை மாத்திக்கணும். இன்னைக்கு சினிமாக்காரன்தான் எல்லா தவறுகளையும் பண்றானா? ஐ.டி.யில நடக்குது, ஊரே வியந்து மெய்யுருகி பாக்குற கிரிககெட்ல நடக்குது. ஆனால் குறை சொல்லணும்னா, எல்லா தாய்மார்களும், முதல்ல சினிமாவை நோக்கிதான் கல்லெறியிறாங்க.’’

‘‘இப்ப மினிமம் கியாரண்டினு காமெடியைப் பிடிச்சிக்கிட்டாங்க. இந்த டிரெண்டை எப்படி பாக்குறீங்க?’’

‘‘இதையெல்லாம் டிரெண்டுனு சொல்லி அந்த வார்த்தையையே அசிங்கப்படுத்தாதீங்க. டிரெண்டு என்பது வேறு. காதல், நேட்டிவிட்டியோட வந்து திரும்பிப்பார்க்கவெச்ச ‘கும்கி’யை ஒரு டிரெண்டுனு சொல்லலாம். வடசென்னைக்கு புது கலர் கொடுத்த ஆரண்ய காண்டம் ஒரு டிரெண்டு செட்டர் படம். இது எதுவுமே இல்லாத படங்களை எதைவெச்சு நீங்க டிரெண்டுனு சொல்றீங்க. இந்த சேர்ல உட்கார்ந்துட்டே நீங்க சொல்ற 10 டிரெண்டு செட்டிங் வகையறா படங்களை ஆரம்பிச்சு விடலாம. ஆனால் எனக்கு அவ்வளவு லாபமோ, பணத்தேவையோ இல்லை. ஆனால் நிலைமை இப்படியே போனால் பலபேரை நாம இழந்திடுவோம்.’’

'' 'தனுஷ§க்காகப் பார்க்கலாம்’னு இந்தி மீடியாக்கள் விமர்சனம் பண்ற அளவுக்கு 'ராஞ்சனா’, அவருக்கு நல்ல பேரை வாங்கித் தந்திருக்கு. அவரோட வளர்ச்சியை எப்படிப் பாக்கிறீங்க?''

''வளர்ச்சின்னா அவர் என்னைவிட மூணு, நாலு இன்ச் உயரம் ஜாஸ்தி (சிரிக்கிறார்). சென் ஸிபிளா என்ன மாதிரி கதையை செலெக்ட் பண்றோம்? எப்படி அதை எடுக்கிறாங்க... என்பதைப் பொறுத்ததுதான் இந்த வளர்ச்சி. இவ்வளவு நேரம் உங்ககிட்ட சொன்னதைத்தான் ஒரு அண்ணனா அவர்கிட்ட சொல்வேன். ஹீரோவுக்குனு சில படங்கள் பண்ணலாமே தவிர, ஒரே மாதிரி பண்ணிட்டு இருக்காதேனு சொல்லியிருக்கேன்!''

‘‘திரும்பவும் உங்க காம்பினேஷனை எதிர்பார்க்கலாமா?’’

‘‘வெளிப்படையா சொல்லணும்னா, ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல், ‘பாட்ஷா’ ரஜினினு ஹீரோக்களோட ரசிகனாத்தான் நாம வளர்ந்திருக்கோம். ஆனால் இன்னைக்கு ஒரு ஃபிலிம் மேக்கரா அதே நடிகர்களோட வேலை செய்யும்போது அவங்களை எப்படி புதுசா காட்ட முடியும்னு மட்டும் யோசிச்சுக்கங்க. இங்க உள்ள எல்லா ஹீரோஸ் கூடவும் வொர்க் பண்ண ஆசைதான். சூர்யாக்குள்ள இருக்கிற மிகச்சிறந்த நடிகனை வெளியில் கொண்டு வரணும்னு ஆசை. கமல் சார் நினைச்சார்னா, இந்த நாட்டையே இரண்டரை மணி நேரம் கட்டிப்போடலாம். அதேமாதிரி விக்ரம், அஜீத், விஜய்னு எல்லாரும் தங்களோட ஃபுல் கேப்பாசிட்டி, பொட்டன்ஷியலுக்கு படம் பண்ணினாங்கன்னா அது பிரமாதமான படமா இருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் மனசோட கனெக்ஷன் இருக்கிறவன் மட்டும்தான் நல்ல ஃபிலிம் மேக்கரா இருக்க முடியும். இதை ஹானஸ்டா டிரை பண்ணுங்க.’’

‘‘கொலவெறியில இருக்கீங்க போலிருக்கே?’’

‘‘வெறி இல்லைங்க. உண்மையைப் பேசுறேன். அந்தப் பணத்தை எல்லாம் சேத்துவெச்சீங்கன்னா, பல்லாயிரக்கணக்கான இளம் இயக்குநர்களுக்கு ஆளுக்கு ஒண்ணா ஒரு படம் தரலாம். நீங்க 100 கேமராவை வெச்சு ஒரு ஷாட்டுக்கு செய்ற கோடிகளை தெருவுல எத்தனையோ பேர் படம் பண்ணியே ஆகணும்னு பசியோட சுத்திட்டு இருககாங்கள்ல அவங்கள்ட்ட கொடுத்தீங்கன்னா நல்ல படம் பண்ணி கொடுப்பாங்க. அப்படியே நீங்க பண்ற அந்த 100 கேமரா காட்சியும் கடைசியில ஏற்கெனவே வந்த ‘மாட்ரிக்ஸ்’ல இருந்து சுட்டதா இருக்கும். இப்ப காப்பி அடிக்கிற பெர்சென்டேஜ் ரொம்ப அபாயகரமானதா இருக்கு. இதை ஒரு விபசாரம்ங்கிற அளவுக்கு எடுத்துக்க வேணாமா?’’

‘‘இப்படி காப்பி அடிப்பதைத் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் படங்கள்ல உள்ள நல்ல விஷயங்களை எடுத்தாளணும்னு ஆசைப்படுறோம். இதை வேற விதமா எப்படி பண்ணலாம்?’’

‘‘முடிஞ்சா ரைட்ஸ் வாங்குங்க. சென்னையில இருந்து கொலம்பியா பிக்சர்ஸுக்கு போன் பண்ணி இந்தப் படத்தோட ரைட்ஸ் வேணும்னு கேட்டுப்பாருங்க... அவன் சொல்ற ரேட்ல தலை சுத்தி கீழ விழுந்துடுவீங்க. சமீபத்துல ஒரு சவுத் ஆப்பிரிக்கன் படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சப்போய, இதை தமிழ்ல எந்த இயக்குநரையாவது வெச்சு தயாரிக்கலாம்னு போன் பண்ணி கேட்டேன். அவங்களுக்கு இந்தியாவுல தமிழ்நாடு, சென்னைனு ஒண்ணு இருக்குறதே தெரியலை. மெயில் அனுப்பினேன். அதுக்கும் பதில் இல்லை. பாவம் என்ன பண்ணுவாங்க, காப்பி அடிக்கிறவங்களுக்கும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்யுது!’’

‘‘ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமா ஒரு படத்த காலி பண்ணவும், பெரிய ஓப்பனிங் கொடுக்கவும் முடியுது. இந்த வளர்ச்சியை சினிமாவுக்கு எப்படி பயன்படுத்திக்கலாம்?’’

‘‘இந்தியாவுல பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி ரொம்பப் பெருசாகிடுச்சு. ஆனால் ஏழையாகவே இருந்தாலும்கூட இன்னைக்கு எல்லார்ட்டயும் கம்ப்யூட்டர் இருக்கு. தங்களோட இயலாமையை எல்லாரையும் திட்டித் தீர்த்துக்குறாங்க. அவங்களுக்கு எல்லா நல்லதும் நடந்து, எல்லா நல்ல விஷயங்களையும் பண்ணிக்கொடுத்திருந்தால ஒருவேளை இந்தப் பிரச்னை இருக்காதுனு நினைக்கிறேன். அதுமட்டுமிலலாம கருத்துக்கு எதிர் கருத்து சொல்லாம மனைவி, அம்மானு எலலாரையும் வேற கூப்பிட்டு திட்டுறாங்க. ஓ.கே. இப்படி படத்தை காலி பண்றதைத்தடுக்க படத்தோட டிவிடியை ஒரு மாசத்துல வெளியில விடுறதுதான் ஒரே வழி. ஹிந்தியில அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க. தியேட்டர்ல பார்க்கணும்னு நினைக்கிறவங்க, நிச்சயம் தியேட்டருக்கு வந்திடுவாங்க. முடியாதவங்க, சி.டி.யில பாத்துக்கட்டும்!’’

‘‘டிடிஎச். மூலம் நேரடியா வீடுகளுக்கே படங்களை கொண்டுபோற கமல்ஹாசனின் முயற்சி நல்ல விஷயம்னு சிலர் சொல்றாங்க. இதை எப்படி பாக்குறீங்க?’’

‘‘நம்மளவிட ஹாலிவுட் அட்வான்ஸுனு ஒப்புக்கிறீங்களா இல்லையா? ஆமாம்னா, அவங்களே அதைப் பண்ணாதப்ப நாம ஏன் பண்ணணும்? ஆனால் அவங்க டிடிஎச்.சுக்குனு லோ பட்ஜெட்ல படம் பண்றாங்க. ஆனால் நீங்க ஏகப்பட்ட கோடிகளை கொட்டி படம் எடுத்துட்டு டிடிஎச்ல பண்றது சரியா வராதுணுதான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு அந்த விஷயத்துல அவ்வளவு நாலேட்ஜ் இல்லாததால அதைப்பற்றி பேசுறது நல்லா இருக்காது. தவிர காசு கொடுத்து தியேட்டர்ல போய் லைட் ஆஃப் பண்ணி அந்த மாஜிக் பாக்குற ஆர்வம் பலருக்கும் இருக்கிறதாலதான் இன்னும் சினிமா தியேட்டர்ஸ இயங்கிட்டு இருக்கு. ஆனால் நீங்க சாப்பிட்டுகிட்டே ரிமோட் மூலம் பாஸ் பண்ணி பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா அந்த உணர்ச்சிகள் போயிடும் இல்லையா? அப்புறம் படம் பாக்குற மாதிரியா இருக்கும்?’’

எந்த சினிமா பின்புலமும் இல்லாத குறும்பட இயக்குநர்கள் இங்க அடுத்தடுத்து சக்சஸ் தர்றாங்க. சீனியர்ஸ் உங்களை நீங்க எப்படி அப்டேட் பண்ணிக்கிறீங்க?’’

‘‘சீனியர்ஸுனு சொல்லி என்னை கிழவன் லிஸ்ட்ல சேத்துடுவீங்க போலிருக்கே. இன்னைக்கு குறும்படம் பண்ற எல்லா இயக்குனர்களுக்கும் என் வயசுதாங்க. குறும்படமோ, நெடும்படமோ படத்துல கன்டென்ட்தான் முக்கியம். அது புதுசா, நல்லா இருந்தா பார்க்கப்போறாங்க. இன்னும் எளிமையா சொல்லணும்னா, லியானார்டோ டாவின்சி, ராஜா ரவிவர்மா இவங்கல்லாம் காலத்தைத் தாண்டிய பெயிண்டர்ஸ். அந்தமாதிரியான ஒரு கலை வடிவம்தான் சினிமா. அப்படி கலை வடிவமா சினிமா பண்றதுக்கு என்னையும் சேர்த்து இங்க யாருக்குமே தைரியம் கிடையாது. இதைப்பற்றி பேச எனக்கும் அருகதை கிடையாது. ஏன்னா, நானும் ஒரு கால் அந்தப்பக்கமும், இன்னொருகால் இந்தப்பக்கமும் வச்சிக்கிட்டுதான் இருக்கேன். தனுஷ் என் படத்துக்கு பாட வேண்டியதா இருக்கு, அதுக்கு 20 பேர் ஆடவேண்டியதா இருக்கு. இன்னும் கொஞ்ச பேரை சிரிக்கவைக்க வேண்டியதா இருக்கு, அதோட பத்து சீன்ல சின்ன கேன்வாஸ் பண்ண வேண்டியதா இருக்கு. ஒருகாலததுல நாம ஆர்ட்டுனு நினைச்சு புல்லரிச்சதெல்லாம் இன்னைக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கிப் பார்த்ததும் மறைஞ்சிப்போச்சு. சினிமாவுக்குள் வராம பேசாம இன்ஜினியரா இருந்திருந்தா அந்த மாயையிலேயே சந்தோஷமா இருந்திருப்பேன்!’’

‘‘நீங்க பண்ற படங்கள்ல ‘கனவு அப்பா’ கேரக்டர் வெச்சிருப்பீங்க. இப்ப ஒரு அப்பாவா எப்படி ஃபீல் பண்றீங்க-?’’

‘‘அந்த ஃபீலிங்கை விவரிக்கவே முடியாது. அதுக்கு மேல பொறுப்புள்ள ஒண்ணு இருக்கானு தெரியலை. கொடுமை என்னன்னா பெண் குழந்கைகளை தூக்கிப்போட்டுட்டு போயிடுறாங்கனு இப்பக்கூட செய்தி வருது. பெண் குழந்தை என்பது நாம வாங்கிவந்த வரம். ஏழேழு ஜென்மங்களில் பண்ணின புண்ணியம். அப்பா-அம்மாவா இருக்கிற மாதிரியான அழகான எக்ஸ்பீரியன்ஸ் எதுவுமே கிடையாது. ஸ்கூல்ல குழந்தையை அடிச்சாங்கன்னா, வாத்தியாரையே தூக்கி உள்ள வெச்சிடுற இந்தக்காலத்துல பையனோ பொண்ணோ நல்ல ஃப்ரெண்டாத்தான் இருக்கணுமேதவிர கோபமா நமம சுண்டுவிரல்கூட அவங்கமேலப் படக்கூடாது.’’

''கமல், விக்ரம் படங்களில் கமிட் ஆகி ட்ராப் ஆச்சே... என்ன பிரச்னை?''

''ஆமாம். கமல் படம் ஷூட்டிங் போய் நின் னுச்சு. விக்ரம் படம் லொகேஷன் போய் நின்னுச்சு. எனக்கு இதில் வருத்தம் எதுவும் இல்லை.  கமல் சாருக்கு ஒரு விஷயம் சொல்றோம்னா, அதை நான் ஒரு டைரக்டரா சொல்லலை. அவரை இப்படிக் காண்பிக்கணும்னு நமக்குள்ள இருந்த ஆசை யில் சொல்றோம். அது அவங்களுக்குச் சரியா வரலைனு சமரசம் பண்ணினா, அங்கேயே நமக்குள்ள இருக்குற கிரியேட்டர் செத்துட்டான்னு அர்த்தம். ஒருநாள் சமரசம் ஆனாலும் ஷூட்டிங் நாட்கள் முழுக்க நடைபிணமாத்தான் அலையணும். நான் அதை என்னைக்குமே பண்ண மாட்டேன். அதுக்குப் பதிலா, புது நடிகர்களைவெச்சுப் பண்ணிடுவேன். என்ன... அதில் ஸ்டார் வேல்யூ இருக்காது. அதுக்காக ஜனங்க பார்க்க மாட்டோம்னு சொல்றது இல்லையே?''

''ஆனாலும் பெரும்பாலான இயக்குநர்கள் இன்னைக்கு ஹீரோ பின்னாலதானே ஓடுறாங்க?''

''அதை அவங்களிடம்தான் நீங்க கேட்கணும். நான் கேட்கிறேன்... 'எதனால இப்படி ஓடுறீங்க? உங்களுக்கு ஏன் தைரியம் வர மாட்டேங்குது?’  இன்னைக்கு இருக்குற டைரக்டர்களிலேயே நான் ரொம்ப மதிக்கிறது பிரபு சாலமன்தான். டாப் மோஸ்ட் இயக்குநர்களைவிட அவர் எவ்வளவோ பெட்டர். 'மைனா’, 'கும்கி’னு புதுமுகங்களை வெச்சுத் தைரியமாப் படம் எடுக்கிறார். பெரிய ஹீரோக்களின் படங்களைவிட இந்தப் படங்களின் கலெக்ஷன் ஜாஸ்தி. அப்புறம் ஏன்யா பயப்படுறீங்க? கேட்டா ஸ்டார் வேல்யூனு ரசிகர்கள் மேல பழியைத் தூக்கிப் போட்டுடுறீங்க. ஹிட்டு கொடுக்கலைன்னா, என்னய்யா ஆகப்போவுது? நரகத்துலயா பிடிச்சுத் தள்ளப்போறாங்க?''

''சிகரெட், குடிப் பழக்கத்தை எல்லாம் விட்டுட்டதா கேள்விப்பட்டோம்?''

''பழக்கம் இருந்துச்சு. முழுக்க முழுக்க என் மகளுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டேன். சிகரெட் பிடிச்சிட்டு என்னால அவள் கன்னத்துல முத்தம் கொடுக்க முடியலை. குடிச்சுட்டுக் குழந்தையைத் தூக்கும்போது, கீழே போட்டுட்டா என்ன பண்றதுனு பயம் வந்திருச்சு. பொறுப்புள்ள தகப்பனா வாழ்றதைவிட வேற சந்தோஷம் எதுவும் இல்லை. தண்ணி, தம்மு அடிச்சாதான் கிரியேட்டிவிட்டி வரும்கிறது எல்லாம் கப்சா!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்