“ஒரு கதை எல்லோருக்கும் பிடிக்கணும்னு அவசியம் இல்லை!” | சரவணன், விக்ரம்பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராம்

வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (22/07/2013)

கடைசி தொடர்பு:10:24 (22/07/2013)

“ஒரு கதை எல்லோருக்கும் பிடிக்கணும்னு அவசியம் இல்லை!”

‘எங்கேயும் எப்போதும்’ படம் பண்ணும்போது என்னைப் பத்தி ஆடியன்ஸுக்குத் தெரியாது. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் படம் பண்ணிட்டேன். முதல் படம் ஹிட்டானதும் என் மேல் நிறைய எதிர்பார்ப்பு விழுந்தது. அதனால், அந்த சாயல் இல்லாம ஒரு படம் பண்ண  நினைச்சேன். அப்படிக் கிடைச்ச கதைதான் 'இவன் வேற மாதிரி’!'' பாசிட்டிவ் வார்த்தைகளில் பளிச்சென்று பேசுகிறார் சரவணன்.  

''அப்படிக் கவிதையாப் படம் எடுத்துட்டு திடீர்னு ஆக்ஷன் கதையைக் கையில் எடுக்க  என்ன காரணம்?''

''இந்தக் கதையைத் தொட்டா நல்லா இருக் கும்னு தோணுச்சு. அதான் பண்றேன். சமூகத்தில் ஒரு தப்பு நடந்திருக்குன்னா,  எல்லாருமே அந்த தப்புக்கு எதிராப் பேசுறோம். எது நடந்தாலும் எல்லாரும் அதுக்கு ஒரு கருத்து சொல்றோம். ஆனா, தப்பைத் திருத்துறதுக்காக களத்துல இறங்கிப் போராடுறது எத்தனை பேர்? ஏன்னா, ஏதாவது நடந்திருமோங்கிற பயம். இந்த பயம் இல்லாத ஒருவன்தான் என் ஹீரோ. நம்மைப் போல ஒருத்தன், நாம செய்ய நினைக் கும், ஆனா செய்யத் தயங்கும் வேலையைத் தைரியமா அவன் செய்றதுதான் கதை!''  

''ஆக்ஷன் கதைக்கு விக்ரம் பிரபு செட் ஆகிட்டாரா?''

'' 'கும்கி’யில் இருந்து விக்ரம் பிரபுவை நிஜமாவே வேற மாதிரி மாத்திட்டோம். அவரோட உயரமும், ஷார்ப் லுக்கும் இந்தக் கதைக்கு செம ஃபிட். ஹீரோயின் சுரபி, டெல்லிப் பொண்ணு. ஒரு மாசம் நடத்தின வொர்க்ஷாப்ல நல்லா டிரெய்ன் ஆகிட்டாங்க.  'தடையறத் தாக்க’ வம்சி வில்லனா நடிக்கிறார். கணேஷ் வெங்கட்ராம் போலீஸ் ஆபீஸரா வர்றார். 'எங்கேயும் எப்போதும்’ கதையை முழு ஃப்ளாஷ்பேக்ல சொன்னேன். இந்தக் கதையை ஸ்ட்ரெய்ட்டா, சுவாரஸ்யமா சொல்லியிருக்கேன்!''

''ஆர்யா, விஷாலுக்கு இந்தக் கதையைச் சொன்னதா, பேச்சு வந்ததே?''

''ஆர்யாவைப் பார்த்து கதை சொன்னேன். பதில் இல்லை. புரொடெக்ஷன் சைடுல கேட்டப்ப, 'கதை அவரை பெரிசா இம்ப்ரஸ் பண்ணலையாம்’னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் ஆர்யாகிட்ட பேசலை. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு கதை எல்லாருக்கும் பிடிக்கணும்கிற அவசியமும் இல்லை. விஷாலுக்கு இன்னொரு கதை சொன்னேன். அவருக்கு ஸ்கிரிப்ட் ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போ வரை நாங்க அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். நான் ஃபார்ம்ல இருக்கேன் சார். எந்த கிரவுண்ட்ல விட்டாலும் விளையாடுவேன். என் னைப் பொறுத்தவரை கதைதான் பலம். ஆனா, அதை எப்படி சொல்றோம்கிறதுலதான் விஷயமே இருக்கு!''

''சர்ச்சைகளுக்கு அப்புறம் அஞ்சலிகிட்ட பேசுனீங்களா?''

'''எங்கேயும் எப்போதும்’ ஷூட்டிங்ல பார்த்தப்போ அஞ்சலிக்கு இவ்ளோ ஃப்ரெண்ட்லியான அம்மா இருக்காங்களேனு நினைச்சேன். அவங்க விஷயத்துல  உண்மையில்... எது உண்மை, எது பொய்னு தெரியலை. 'இது என் சித்தி’ன்னு ஆரம்பத்திலயே அஞ்சலி சொல்லி இருக்கலாம். அதனால என்ன ஆயிடப்போகுது? ஒரு நடிகையா அஞ்சலிக்கான இடம் தமிழ் சினிமாவில் எப்பவோ கிடைச்சாச்சு.  அஞ்சலினு சொன்னாலே 'கற்றது தமிழ், 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’னு மூணு படங்கள் ஞாபகத்துக்கு வரும். இதை அஞ்சலி பையன், பேரன் வந்தாலும் காலரைத் தூக்கி விட்டுட்டு சொல்லலாம். அவங்க சீக்கிரம் பழைய ஃபார்ம்க்கு வந்தா அவங்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்ப நல்லது!''  

''இப்போ காமெடிப் படங்கள் மட்டும்தான் ஜெயிக்குதே?''

''அப்படி இல்லை. காமெடிப் படங்களா வருதுன்னு சீரியஸ் படம் எடுக்க டைரக்டர்கள் நெனைப்பாங்க. ஆனா, அது எடுத்து முடிக்க ஆறு மாசம், ஒரு வருஷம், ரெண்டு வருஷம் ஆகிடும். பல டைரக்டர்கள் இப்படி ஒரே சமயத்துல டிராவல் ஆகும்போது, அப்போ ஒரே மாதிரி சீரியஸான படங்களா வர ஆரம்பிக்கும். காமெடிப் படங்கள் ஓடுறது நல்ல விஷயம்தான். ஆனா, வரிசையா காமெடிப் படங்களா வந்தா ஆடியன்ஸ் சீக்கிரமே டயர்டு ஆகிருவாங்க. காமெடிப் படங்கள் ஒருநாள் ஆடியன்ஸுக்குப் போர் அடிக்கும். அப்போ மொத்த சினிமாவோட டிரெண்ட் மாறும்!'' 

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்