“இது எல்லோருக்குமான காதல்!”

'சுந்தரபாண்டியன்’ தந்த உற்சாகத்தில் அடுத்ததாக 'இது கதிர்வேலன் காதல்’ படத்தை உதயநிதி - நயன்தாரா காம்பினே ஷனில் எடுத்துவருகிறார் பிரபாகரன். கல்யாண தேஜஸ் முகத்தில் படர... படுஉற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் பிரபாகரன்.  

'' 'சுந்தரபாண்டியன்’ ஒரு சாதிக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படம்னு எழுந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

''படம் பண்ணணும்னு முடிவானதும் 'நாம பார்த்த, ரசிச்ச விஷயங்களை எடுக்கணும்’னு ஆசை வந்துச்சு. என் சொந்த ஊர் மதுரை அழகர்கோவில் பக்கத்துல ஒரு கிராமம். தேனி வழியாப் பயணம் செஞ்சு கம்பத்தில் படிச்சேன். அப்படி ஒருநாள் பயணத்தில்தான் சுந்தரபாண்டியனுக்கான கதைக் கரு கிடைச்சது. பொதுவா உசிலம்பட்டின்னா, பெண் சிசுக் கொலைதான் ஞாபகத்துக்கு வரும். உசிலம்பட்டி யோட இன்னொரு முகம், அதிகம் வெளியில் தெரியாது. அதுதான் 'சுந்தரபாண்டியன்’. என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக் கலாம். கௌரவக் கொலைகளை அடையாளப் படுத்தவோ, அவற்றைப் பற்றி விமர்சனம் பண் ணவோ, நான் படம் எடுக்கலை. இதெல்லாம் இங்கே நடக்குதுனு சுட்டிக்காட்டினேன். அவ்வளவுதான்!''

''உதயநிதி காம்பினேஷன் எப்படி அமைஞ்சது?''

''படம் பார்த்துட்டு அடுத்த கதை எதுவும் ரெடி பண்ணிவெச்சிருக்கீங்களானு கேட்டார். படம் தயாரிக்கப்போறார்னு நினைச்சு அவர் கிட்ட, 'கதிர்வேலன் காதல்’ படத்தோட கதை யைச் சொன்னேன். கதையைக் கேட்டுட்டு இந்த ஹீரோ கேரக்டரை நானே பண்றேன்னு சொல் லிட்டார். எனக்கு செம சர்ப்ரைஸா இருந்துச்சு. ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கார். 'ஓ.கே... ஓ.கே’னு பெரிய ஹிட் கொடுத்துருக்கார். அவரோட அடுத்த படம் பண்றதுங்கிறது உண்மையிலேயே பெரிய வேலை. பெரிய பொறுப்பு. சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்!''  

''கதிர்வேலனோட  காதல் எப்படி இருக்கும்?''

''அஞ்சு வயசுப் பையன்... சின்ன வயசுல இருந்தே ஆஞ்சநேய பக்தனா இருக்கான். அவன் இளைஞனான பிறகு சந்திக்கிற ஒரு பொண்ணு, அவனைத் தலைகீழாப் புரட்டிப் போடுறா. அவனோட தடுமாற்றங்கள்தான் படம். 'ஓ.கே... ஓ.கே’ காமெடி, 'சுந்தர பாண்டியன்’ ஃபேமிலி பேக்கேஜ். ரெண்டும் இந்தப் படத்தில் சரி பாதி இருக்கும். எல்லாமே புது சீன்களாப் பண்ணிருக்கோம். நிச்சயம் இது எல்லாருக்குமான காதலா இருக்கும்!''

''ஓ.கே... ஓ.கே. பார்க்கும்போது உதயநிதி இன்னும் கொஞ்சம் நடிச்சிருக்கலாம்கிற மாதிரிதானே தோணுச்சு?''

''அந்தக் குறை இந்தப் படத்தில் இருக்காது. முதல் படப் பதற்றம் இப்போ அவரிடம் இல்லை.  நடிப்பு, ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாத்தையும் அழகாப் பண்றார். சுருக்கமா சொல்லணும்னா 'இது அவரோட ரெண்டாவது படம்’னு சொல்ல முடியாது. யார்கிட்டேஹோம் வொர்க் பண்றார்னு தெரியலை, ஒவ்வொரு நாளும் நடிப்பில் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது!''

''நயன்தாரா?''

''அவங்ககிட்ட ஒரு மணி நேரம் கதையைச் சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். உடனே அவங்க உதயநிதி சாருக்கு போன் போட்டு, 'இந்தப் படத்தை கண்டிப்பா நான் பண்றேன். சம்பளம் அப்புறம் பேசிக்கலாம்!’னு சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்குக் கதையும் கேரக்டரும் அவங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. அவங்களுக்கு சினிமா மேல உள்ள காதல் இன்னும் அதிகமாகிருக்குனு நினைக்கிறேன். இந்தப் படம் வந்த பிறகு, ரசிகர்கள் நயன்தாராவை இன்னும் அதிகமாக் கொண்டாடுவாங்க!''

- க.நாகப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!