தீப்பெட்டிக்குக் காதல் பத்திக்கிச்சு! | கணேசன், தீப்பெட்டி

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (22/07/2013)

கடைசி தொடர்பு:10:31 (22/07/2013)

தீப்பெட்டிக்குக் காதல் பத்திக்கிச்சு!

ரு அழகான பொண்ணு, அதே தெருவில் கொஞ்சம் சுமாரான பையன்... கொஞ்சம் சிக்கலான காதல். பெரியவர்கள் எதிர்ப் பைத் தொடர்ந்து, காதலன் தற்கொலை முயற்சி, ஓர் அதிகாலையில் ஓட்டம்... இவை எல்லாமே வெள்ளித்திரை ஹீரோக்கள் வழக்கமாக சினிமாவில் செய்வது. அதையே ரியல் லைஃபில் செய்து அசத்தியிருக்கிறார் ஒரு காமெடியன்.  

'ரேணிகுண்டா’ படத்தில் நாயகனுக்கு இணையாக ஒருதலைக் காதலில் பட்டையைக் கிளப்பிய  'தீப்பெட்டி’ கணேசன், இப்போது நிஜ வாழ்க்கையிலும் காதலனாகி கைத்தலம் பற்றியிருக்கிறார். புதுக் கல்யாண மினுமினுப்பு கண்களில் மினுங்க, ஆசை மனைவி ரேஷ்மா வின் கைப் பிடித்தபடியே பேசுகிறார்.  

''என் நிஜப் பேர் கார்த்திக். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். சரியா வளர்ச்சி இல்லாததால என்னைக்  கிண்டல் பண்ணுவாங்க. அதனால ஒன்பதாம் வகுப்போட பள்ளிக்கூடம் போறதை நிறுத் திட்டேன். அப்பா இரும்புக் கடை வெச்சி ருக்கார். அங்கே  போனா, திட்டு வாங்கணு மேனு பெயின்ட் அடிக்கிற வேலைக்குப் போயிட்டேன். ஒருநாள் என் ஃப்ரெண்ட், 'நடிக்க ஆள் எடுக்கிறாங்க... அதுக்குப் போறேன்’னு சொன்னான். நான் சும்மா வேடிக்கை பார்க்க அவனோட கிளம்பிப் போனேன். மாடியில் 'ரேணிகுண்டா’ படத்தோட ஆடிஷன் நடந்துட்டு இருந்துச்சு. நான் கீழே உட்கார்ந்திருந்தேன். உதவி இயக்குநர் ஒருத்தர், 'நீயும்... வா தம்பி’னு கூட்டிட்டுப் போனார். என்னைப் பார்த்த டைரக்டர் பன்னீர்செல்வம், 'பையன் நல்லா இருக்கானே’னு ஆச்சர்யமாகி நடிக்கவெச்சார். இந்த கார்த்திக் 'தீப்பெட்டி’ கணேசன் ஆன கதை இதுதான் சார்!'' என்றவரிடம்

''காதல்... தற்கொலை முயற்சி... ரன்னிங் மேரேஜ்னு  நிஜ வாழ்க்கையில் ஹீரோயிஸம் காட்டியிருக்கீங்களே?'' என்றால் வாய்விட்டுச் சிரிக்கிறார்.

''லவ் பண்ற எல்லோருமே ஹீரோதாங்க. எங்களுக்குப் பக்கத்துப் பக்கத்து வீடு. சின்ன வயசுலேர்ந்தே எனக்கு ரேஷ்மாவைத் தெரியும். முதல்ல காதலும் இல்லை... கத்திரிக்காயும் இல்லை. திடீர்னு ஒருநாள் தேவதை மாதிரி தெரிஞ்சா. அப்போ இருந்து ரசிக்க ஆரம்பிச் சிட்டேன். வீட்டுக்குப் பக்கத்துல ஒரு அடி பம்பு  இருக்கும். அதில் தண்ணி அடிக்க வரும். நான் காத்து வாங்குற சாக்குல ஜன்னலைத் தொறந்து வெச்சுக்கிட்டு சைட் அடிப்பேன். ஒருநாள் கண்டுபிடிச்சு, 'நீ ஏன் என்னையே பார்க்குறே?’னு பிலுபிலுனு சண்டை பிடிச்சிருச்சு. நான் சிம்பிளா ஜன்னலை மூடிட்டேன். டெய்லி இதே கதைதான். நாம பார்க்குறது அந்தப்பொண் ணுக்குப் பிடிச்சிருக்குன்னு எனக்குள்ள ஏதோ குருட்டு நம்பிக்கை.

ஒரு மழை நாள் அன்னைக்கு, திடீர்னு ஜன்னல் பக்கம் வந்து 'நீ யாரையாச்சும் லவ் பண்றியா?’னு கேட்டாங்க. அந்த அட்டாக்கை நான் எதிர்பார்க்கலை. ஒரு மாதிரியாத் தைரி யத்தை வரவெச்சு, 'ஆமா, அது நீங்கதான்’னு சொல்லிட்டேன். என்னை மாதிரி ஒருத்தனை தேவதை மாதிரி ஒருத்தி லவ் பண்ணா எப்படி இருக்கும்? நானே நிஜமாவே வேற பிறப்பு எடுத்த மாதிரி இருக்கு. காதல் ஓ.கே. ஆன ஒரு வருஷம் பின்னாடிதான் சினிமா நடிகன் ஆனேன். அவங்க வீட்ல ஏகப்பட்ட எதிர்ப்பு. கல்யாணம் முடிக்க வாய்ப்பே இல்லைனு நினைச்சுத் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுட்டேன். கண் முழிச் சப்ப இது சொர்க்கமா, நரகமானு யோசிச்சுக் கிட்டு இருந்தா, அது ஹாஸ்பிட்டல். 'பெத்தவங்க சம்மதிக்கும்போது சம்மதிக்கட்டும். இப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!’னு ரேஷ்மா சொன்னாங்க. அப்புறம் ஜம்முனு ஆட்டோ பிடிச்சுப் போய் மதுரை முருகன் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ எங்க காதல் கல்யாணத்தை எல்லாரும் ஏத்துக்கிட் டாங்க!'' என்று கணேசன் நிம்மதிப் பெரு மூச்சோடு சொல்ல, ''ஒரு ரகசியம் சொல்லட்டா.. கணேசன் என்னை சைட் அடிக்கிறார்னு தெரியும். அடுத்த தெருவிலேயே இன்னொரு அடி பம்பும் இருக்கு. அதுக்குப் போகாம இவரைப் பார்க்கிறதுக்காகவே அங்கே போய் தண்ணி எடுப்பேன். அது தெரியாம நம்மாளு ரொம்ப நாளாப் பேசப் பயந்துகிடந்தாரு!'' என்று ரேஷ்மா கேலிக் குரலில் சிரிக்க, ரேஷ்மாவின் தோளில் அத்தனை காதலுடன் சாய்ந்துகொள்கிறார் கணேசன்.

- செ.திலீபன், படங்கள்: பீரகா வெங்கடேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்