Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"நான் மகா நடிகன் கிடையாது!" - சூர்யா

"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான் அருமையான நேரம்னு நினைக்கிறேன்!" . அழகான கண்கள் கபடி ஆட, மென் புன்னகையில் மிளிர்கிறார் சூர்யா. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியான தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று... சூர்யாவுக்குத்தான்!

"கேட்டதைவிட, நினைச்சதைவிட எல்லாமே அதிசயமா அடுத்தடுத்து நடந்துட்டே இருக்கு. இந்த வெற்றி ஆரம்பத்தில் எனக்கு வரலை. அப்படி வராமல் இருந்தது நல்லதுதான்னு இப்போ தோணுது. என்னை இப்போ எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீங்கள் என்ன பண்ணினாலும் பிடிக்கும்னு சொல்ற வார்த்தைகள் காதில் வந்து விழுது. இது மாதிரி பேட்டியால்கூட என்னைப் பிடிக்கலாம். இதில் இருந்து இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போகணும். இப்போ எல்லாம் சாமி கும்பிடும்போது எதுவும் கேட்கத் தோணலை. நன்றி மட்டும்தான் கடவுளுக்குச் சொல்லிட்டே இருக்கேன். இப்படி ஒரு அப்பா, அம்மா, பிருந்தா, கார்த்தி, ஜோ, தியா, குட்டிப் பையன், இந்த வெற்றி எல்லாம் கிடைச்ச பிறகு... கடவுளுக்கு நன்றிதான் சொல்லணும்!"

"எப்படி 'கணக்கு' சரியாப் போடுறீங்க? நிறையப் பேருக்கு இந்தக் 'கணக்கு' தப்பாகுதே?"

" 'வாரணம் ஆயிரம்' வெற்றி வேற மாதிரி. எல்லோ ருக்கும் அது நினைவுகளாக மாறியிருந்தது. டைரக்டர் வெற்றிமாறன் பார்த்துட்டு, சிகரெட் குடிக்கிறதை விட்டுட்டேன்னு சொன்னார். எஸ்.எம்.எஸ்களால் என் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது. இவங்க எல்லாம் வேற. ஹரியுடன் நான் 'சிங்கம்' நடிச்சதில் என் கைக்கு வந்தவங்க வேர்வை ஒழுகி, கஷ்டப்படுற மக்கள். வேட்டியை மடிச்சுக் கட்டி, பைக்கில் விரட்டி, 'துரைசிங்கம் ரொம்ப டாப்பு'ன்னு கை வலிக்குற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள். இப்ப கோபமே வரலை. கும்பிடத்தான் தோணுது. எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்கணும்னு நினைச்சுக்கிட்டேன். எல்லா வயசுக்கும் பிடிக்கணும். நிச்சயமா, ஒரே மாதிரி படங்கள் பண்ண மாட்டேன். 'சிங்கம்' மாதிரி நான் இன்னொரு தடவை கோபப்பட்டால் எனக்கே பிடிக் காது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம். நான் நினைப்பது நடந்தால், முருகதாஸ் படம் எனக்குப் பெரிய லெவல். அடுத்து கே.வி.ஆனந்த். ஒவ்வொரு டைரக்டரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன். நான் ஒண்ணும் மகா நடிகன் கிடையாது. ஆனால், என்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத் தருவேன். அவ்வளவுதான். இதைத்தான் நீங்கள் கணக்குன்னு சொல்றீங்க!"

"மற்ற பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் தோல்வி அடையுது. உங்க படங்கள் வெற்றி அடையுது. ஏன்?"

"எவ்வளவோ விஷயங்கள் இருக்குங்க. ரிலீஸ் தேதி, என் டைரக்டரோட உழைப்பு, படத்தோட புரொமோஷன்... இப்படி நிறைய இருக்கு. மத்தவங்க யாரும் தப்பா நினைச்சிடக் கூடாது. கம்பேர் பண்றேன்னு சொல்லிடக் கூடாது. நான் என்னுடைய படங்களை ரிப்பீட் பண்றது கிடையாது. மத்த காரணங்களை நீங்க தேடிக்கங்க!"

"நீங்கள் அறிமுக இயக்குநர்கள் படங்களில் நடிப்பது இல்லையே, ஏன்?"

"ஒவ்வொரு தடவையும் எதிர்பார்ப்பு, பிசினஸ் மேலே ஏறிக்கிட்டே போகுது. எவ்வளவோ கோடி கள் புழங்கிப் படம் வெளியே வருது. இப்படிப்பட்ட வேளையில் கொஞ்சம் அனுபவ இயக்குநர்களைப் பார்த்தால், நம்பிக்கையா இருக்கு. ஒரு கதையைச் சொன்னால் எப்படி இவர் கொண்டுவருவார்னு ஒரு வடிவம் மனசுக்குள் வருது. கொஞ்ச நாட்கள் கழிச்சு பரிசோதனை முயற்சிகளில் இறங்கலாம். அறிமுக இயக்குநர்களிடம் ஒரு கமர்ஷியல் படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்தடுத்து அப்படிச் செய்யும் எண்ணங்கள் இருக்கு!"

"கார்த்தி உங்களுக்கு வீட்டுக்குள்ளே போட்டின்னு விளையாட்டுக்குச் சொல்லிட்டு இருந்தோம். நிஜமாவே அது வரும் போலிருக்கே. உணர்கிறீர்களா?"

"கார்த்தி எடுத்தவுடனேயே ஒரு நல்ல நடிகனாக எழுந்து வந்தவன். அந்த நடிப்பெல்லாம் எனக்குப் பிறகுதான் கிடைச்சது. பக்கத்திலேயே ஓட ஓர் ஆள் இருந்தால் நல்லதுதானே!"

" 'ரத்தச் சரித்திரம்' வன்முறை அதிகம் இருக்கும் போலிருக்கே?"

" 'ரத்த சரித்திரம்' 18+ பார்க்க வேண்டிய படம். ரத்தமும் சதையுமா ஒரு வாழ்க்கையைத் தரிசிக்கிற படம். நான் ராம்கோபால் வர்மாவோட ரசிகன். என் கேரியரில் அவர்கூட ஒரு படம் பண்ணிட்டேன்னு சொல்வது எனக்குப் பெருமை. கமர்ஷியல் படத்துக்கும் கலைப் படத்துக்கும் இடையில் வந்து நிற்கும் இந்த 'ரத்தச் சரித்திரம்'!"

"உங்க புதுக் குட்டி எப்படி இருக்கார்?"

"நல்லா இருக்கார். அழகழகாப் பெயர் தேடிட்டு இருக்கோம். பார்க்க ஜோ மாதிரி இருக்கார். கலர் நம்ம கலர். அழறதே கிடையாது. தியா, தன் தம்பி கிட்ட காட்டுற செல்லம் ரொம்ப விசேஷம். தம்பிக்குத் தலை சீவி, கிண்டர் கார்டன் போறதுக்கு முன்னாடி 20 முத்தமாவது குடுத்துட்டுப் போறாங்க. ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ்!"

"உங்களை கமலுக்கு ஒப்பிடலாமா?"

"அவர் மாதிரி ஆக வாய்ப்பே கிடையாது. அவர் கதை எழுதலாம். மனசை உருவுற மாதிரி வசனம் எழுத முடியும். ஒரு படம் எடுக்க முடியும். எந்த சினிமாவையும் தனியாப் பிரிச்சுப் போட்டுப் பேச முடியும். நான் ஃபேமிலி ஆளு. அவர் மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு சினிமாவை மட்டும் நினைச்சுக்கிற ஆளு கிடையாது.ஷூட்டிங் தவிர ஒரு மணி நேரம் வெளியே சுத்திட்டு ஜோ, தியா, பையன்னு கொஞ்சிட்டுத் திரிகிற ஆளைப்போய் இப்படிச் சொல்லிட்டீங்களே. 'எனக்குப் பயமா இருக்கு'ன்னு ஒரு விழாவில் சொன்னேன். கமல் சார் சிரிச்சுட்டு, 'அந்தப் பயத்தை மட்டும் அப்படியே வெச்சுக்க'ன்னு சொன்னார். ரஜினி சார் ஒரு விமானப் பயணத்தில், 'நீ ஹீரோ மட்டும் கிடையாது. நடிகன். சண்டை போடு, டூயட் பாடு. ஆனால், இரண்டு படத்தில் நல்லா நடிச்சிடு'ன்னு சொன்னார். எல்லாத்தையும் மனசில்வெச்சிருக்கேன். 'பயமா இருக்கு'!" - அருமையாகச் சிரிக்கிறார் சூர்யா!

- படங்கள்:கே.ராஜசேகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்