''நான் ஹனி... ஜோ பப்பி!'' | சூர்யா, ஜோதிகா

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (22/07/2013)

கடைசி தொடர்பு:12:15 (22/07/2013)

''நான் ஹனி... ஜோ பப்பி!''

துறுதுறு குழந்தைகளின் 'கிய்யா மிய்யா'க்களும் டீன் டிக்கெட்டுகளின் சிதறல் சிரிப்பொலியுமாக பார்ட்டி ஹால் பரபரப்பில் இருக்க, ஒரு ப்ளாஷில் சத்தமில்லா சஸ்பென்ஸாக சுட்டிகளின் நடுவில் ஆஜரானார் செம ஸ்மார்ட் சூர்யா!

அவருடைய அழகுக் குட்டிச் செல்லம் தியாவுக்குக் காத்திருந்தது முதல் பரிசு. ''தியாவுக்கு ஆப்பி நியூ இயர் சொல்லிருங்க!'' என்றபடி குழந்தைகள் கூடி 'பேபி ஜிம்' பார்சலைக் கொடுக்க, சூர்யா முகத்தில் நெகிழ்ச்சியான மகிழ்ச்சி!

ஜாலி கேலியுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது ஈரோடு மகேஷ§ம் 'ரம் ரம்' ரம்யாவும்!

ஆரம்ப அதிரடியாக சரவெடி வாழ்த்து வழங்க வந்தார் இயக்குநர் பேரரசு!

''இவ்வளவு
வெற்றிக்குப் பிறகும்
உன் அமைதி ஆச்சர்யம்!
உன் வெற்றிக்கு
தெய்வங்களே இனி
பூச்சொரியும்!
சூர்யா என்றால் ஜோதி
ஜோதி என்றால் சூர்யா
ஜோதிகா என்றால் சூர்யா!
இந்த ஜோடிக்கு நிகர் யார்யா!''

என்று கலந்து கட்டிய பஞ்சாமிர்தமாக போட்டுப் பொளக்க, ''உங்க படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே, எனக்கு ஓப்பனிங் ஸாங் எழுதினதுக்கு தேங்க்ஸ் சார்!'' என்று வெட்கச் சிரிப்புடன் நன்றி தெரிவித்தார் சூர்யா.

 

''சூர்யா! முதல்ல தியா பத்தி நீங்க நிறைய சொல்லணும்!'' என்ற ரம்யாவின் அப்ளிகேஷனுக்கு உடனடி சாங்ஷன்!

''தியா எங்க எல்லாரையும் ஏமாத்திட்டா! ஜோ வயித்துக்குள்ள இருக்கும்போது பயங்கரமா உதைச்சுக்கிட்டே இருந்ததால, நிச்சயம் பையனாத்தான் இருக்கும்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா, எனக்கும் ஜோவுக்கும் பெண் குழந்தைன்னா ரொம்ப இஷ்டம். 'நீ அழகாயிட்டே போற ஜோ. அதனால பொண்ணுதான் பொறக்கும் பாரேன்'னு சொல்லிட்டே இருந்தேன். டெலிவரி சமயம், நானும் ஜோ பக்கத்திலேயே இருந்தேன். தலை வெளியே வந்ததுமே, 'என்ன குழந்தை டாக்டர்?'னு அவசரப்பட்டேன். நான் ஆசைப்பட்டபடியே அழகான பூக்குட்டியா வந்து விழுந்தா தியா. வெளியே வரும்போதே ஜோ மாதிரி நல்லா முட்டைக் கண்ணால முழிச்சுப் பார்த்துட்டேதான் வந்தா. கண்களைத் திறந்துட்டே வெளியே வர்ற குழந்தைகள் அபூர்வமாம். ஜோவோட பொண்ணா இருந்துட்டு, இந்தப் பார்வைகூட பாக்கலைன்னா எப்படி!

பார்க்கிறதுக்கு செம க்யூட்டா, பிரிட்டிஷ் குழந்தை மாதிரி இருக்கா. செம வாலு! கார்த்தி, 'பச்சமலைப் பூவு'ன்னு பாட்டுப் பாடுறான். தங்கச்சி பிருந்தா, 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரையே' பரதநாட்டிய அபிநயங்களோடு ஆடிக் காட்டுவாங்க. எல்லாத்துக்கும் சிரிப்புதான். ஹைய்யோ... செம க்யூட்! குடும்ப நண்பர் ஒருத்தர் ஜாலியா ஜோசியம் பார்த்தப்ப, என்னையும் ஜோவையும்விட தியா ரொம்ப பாப்புலர் ஆவார்னு சொன்னார். அந்த நாளை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!'' என்றார் அன்பான அப்பாவாக!

ஆரம்பித்தது வாசகர்கள் கேள்வி நேரம்!

''சிவகுமார் சூர்யா கார்த்தின்னு ட்ரிபிள் ஹீரோ சப்ஜெக்ட் படம் எப்போ?''

''ஹைய்யோ! நான் மாட்டேன்ப்பா. கார்த்திகூட நடிக்கணும்னு நினைச்சாலே பயமா இருக்கு!'' என்று ஜாலி ஜகா வாங்கியவர், ''அப்பா, கார்த்தில்லாம் செம பிரில்லியன்ட். அப்பா எங்கேயாச்சும் ஊருக்குக் கிளம்பினா, என்னெல்லாம் எடுத்துட்டுப் போறோம்னு லிஸ்ட் வெச்சு எடுத்துட்டுப் போற அளவுக்கு பக்கா ப்ளானிங். நான்லாம் சூட்கேஸையே மறந்துட்டுக் கிளம்புற மாஸ்டர் மைண்ட். கார்த்தி, எங்க எல்லாரையும்விட சொகுசா வாழ்ந்தவன். 'பருத்திவீரனு'க்காக அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கான். படம் பார்த்துட்டு அழுதுட்டேன். மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறதுன்னா, பொருத்தமா... அழுத்தமா... நல்ல கதை வேணும்ல!''

''இப்ப பொதுவா இந்தியில் ஹிட்டான படத்தைதான் இங்கே ரீமேக் பண்ணுவாங்க. ஆனா, சூர்யாவோட 'கஜினி'யைப் பார்த்துப் பதறி பாலிவுட்ல அமீர்கானே ரீமேக் பண்ணிட்டு இருக்கார்!'' என்ற சஸ்பென்ஸ் பில்டப்புக்கு, ''அந்த முழுப் பெருமையும் டைரக்டர் முருகதாஸ் சாரைத்தான் சேரும்!'' என்று சூர்யா சரண்டராக, ''அதேதான், வெல்கம் முருகதாஸ் சார்!'' என மகேஷ் அழைக்க, சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக என்ட்ரி கொடுத்தார் முருகதாஸ்.

''சூர்யா சிறந்த நடிகர் என்பதைவிட மிகச் சிறந்த மனிதர். தன்னால முடிஞ்ச நல்ல விஷயங்களைச் சத்தமே இல்லாமப் பண்ணிட்டு இருக்கார். இந்தி 'கஜினி' டீம்ல இருக்கிற எல்லாருக்கும், குறிப்பா பெண்கள்... சூர்யாவுக்கு பயங்கர பேனாகிட்டாங்க. 'ச்சே..! சான்ஸே இல்லை, சூப்பர்ப்!'னு எப்பவும் சூர்ய நமஸ்காரம்தான். ரெண்டு அடி நடக்கிற ஷாட்னா கூட ஏகப்பட்ட ரிகர்சல் பண்ணிட்டுதான் நடிக்கிறார் அமீர்கான். 'சூர்யா அத்தனை அழகா பண்ண கேரக்டரை நான் எந்தவிதத்திலும் டேமேஜ் பண்ணிரக் கூடாது!'ன்னு சொல்லிட்டே இருப்பார். இப்போ தெலுங்கிலும் சூர்யாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள். அவரோட ரேஞ்சே வேற..! சூர்யாவை வெச்சு மூணு மொழிகளிலும் ஹிட்டடிக்கிற ஒரு படத்தை எடுக்கணும்கிறது என் ஆசை. அது கூடிய சீக்கிரம் நிறைவேறப்போகுது!'' என்று முருகதாஸ் சொல்லச் சொல்ல, சூர்யாவின் முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் கலந்து கட்டி மின்னியது.

சின்னத் திரையில் கலக்கிக்கொண்டு இருக்கும் சேதுவின் மிமிக்ரி ஷோ இந்த இடத்தில் ஜாலி டைம்பாஸாக குலுங்கிச் சிரிக்கவைத்தது. தொடர்ந்தது கேள்வி நேரம்.

''அடடா! நாம மிஸ் பண்ணிட்டோமே!'ன்னு உங்களை பீல் பண்ண வெச்ச படம் எது?''

'''ஆட்டோகிராப்'! வாய்ப்பு கிடைச்சும் நான் மிஸ் பண்ணின படம். சேரன் சார் எனக்காகக் காத்திருந்தார். ஆனா, அப்போ வீட்ல பொருளாதார ரீதியா கொஞ்சம் சிக்கல்ல இருந்தோம். தடதடனு நாலஞ்சு படங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை. இப்பவும் ஆட்டோ கிராப் பார்க்கிறப்போ, மனசுக்குக் கஷ்டமா இருக்கும்!''

''விஜய்யும் நீங்களும் ஒரே காலேஜ்தானே? அந்த காலேஜ் கலாட்டாக்களை கொஞ்சம் எடுத்துவிடுறது..!'' என்றவுடன், ஆர்வமாக ஆரம்பித்தார் சூர்யா.

''நான் காமர்ஸ். விஜய் விஸ்காம். ஒரு தடவை அவன் கிளாஸ§க்குப் போகாம, பசங்களோட என் கிளாஸ§க்கு வந்து உக்காந்துட்டான். அப்பவே அவன் படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்டான். திடீர்னு புரொபஸருக்குச் சந்தேகமாகி, 'நீ இந்த கிளாஸ் இல்லையே! உன் போஸ்டர்லாம் நான் பார்த்திருக்கேனே, நீ விஜய்தானே? இங்கே எங்கே வந்தே?'ன்னு கேள்விகளாக அடுக்க ''கார் பார்க்கிங்லயே உட்கார போர் அடிச்சது சார். அதான் சும்மா வந்தோம். நான் மட்டுமில்லை... என்னோட இன்னும் எட்டுப் பசங்க வந்திருக்காங்க. எங்களை எல்லாம் சரவணன்தான்(சூர்யாவின் இயற்பெயர்) இன்வைட் பண்ணான்!'னு என்னை மாட்டிவிட்டுட்டாப்ல. இது போல பல காமெடிகள்... அப்பப்ப நானா நினைச்சுச் சிரிச்சுக்குவேன்!''

அடுத்து வந்து விழுந்தது 'கிக்'கான கேள்வி!

''நீங்க ஜோவை எப்படிக் கூப்பிடுவீங்க? ஜோ உங்களை எப்படிக் கூப்பிடுவாங்க... செல்லமா..!''

ஏகத்துக்கும் கூச்சத்தில் நெளிந்தவர், ''சபையில எப்பிடிச் சொல்றது?'' என்று 'எஸ்கேப்'பப் பார்த்த வரை விடவில்லை வாசகர்கள். ''நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருக்குறப்ப ஜோ என்னை 'ஹனி'னு கூப்பிடுவாங்க. நான் ஜோவை 'பப்பி'னு கூப்பிடுவேன். அவங்க அப்படியே 'காக்க காக்க' படத்துல வர்ற மாதிரி நான்ஸ்டாப்பா பேசிட்டே இருப்பாங்க. நான் ரொம்பக் கொஞ்சமாதான் பேசுவேன். 'ஏய்... போரு'னு செமத்தியா வாருவாங்க!'' என்றதும், எக்கச்சக்கச் சிரிப்பு.

அடுத்ததாக 'ரப்பர்மேன்' கோகுல்நாத்தின் வெரைட்டி காமெடி. வார்த்தையில்லா ஒலியும் ஒளியும், பாடி பெயின்ட்டிங், ஆக்டிங் என பின்னிப் பெடலெடுத்து விட்டது கோகுல் டீம்.

தன்னைக் கவர்ந்த எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்த ஐந்து வாசகர்களான திருமேனி, வித்யா, சாந்தி, உமா மற்றும் செந்தில் ஆகியோருக்கு வாட்ச் பரிசு வழங்கினார் சூர்யா. அவர்களில் மாற்றுத் திறன் படைத்த வாசகி வித்யா வீல்சேரில் ஆர்வமாக வந்திருந்தது சூர்யாவை ரொம்பவே நெகிழவைத்தது. மேடையி லிருந்து இறங்கிச் சென்று வித்யாவோடு உரையாடி, உற் சாகப்படுத்தியது தனிச் சிறுகதை.

வாசகர்களுக்கு நன்றி சொல்ல மைக் பிடித்த சூர்யாவுக்கு, நெகிழ்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை!

''இந்த அளவுக்குக் கலகலப்பான பார்ட்டியா இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை. தெரிஞ்சிருந்தா, ஜோவையும் கூட்டிட்டு வந்திருப்பேன். இப்ப வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா ரெண்டு பேருக்கும் கதை கதையா சொல்வேன். என்னைப் பார்க்குறதுக்காக நேரம் ஒதுக்கி வந்திருக்கும் வாசகர்கள் எல்லோருக்கும் நன்றி! பொதுவா விகடன் வாசகர்கள் எல்லோரும் ஈர மனசுள்ளவங்க. கார்கில், சுனாமின்னு எந்த ஒரு பிரச்னைன்னாலும் நன்கொடைகளை வாரி வழங்கிப் பரிவு காட்டுறவங்க. சொல்லப்போனா, எனக்கும்கூட ஆனந்த விகடன்னா அம்மா அப்பா மாதிரி. உங்க எல்லாரையும் சந்திச்சு உரையாடுற நாளுக்காக நான்தான் ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருந்தேன். வாசகர்களுக்கு நன்றி, விகடனுக்கு நன்றி. எனக்கு இதுதான் உள்ளபடியே நியூ இயர் பார்ட்டி!'' என்று உணர்ச்சி பொங்கப் பேசி முடிக்க, செம எமோஷன லான கிளைமாக்ஸ் அது!

 

-விகடன் டீம்
படங்கள்: பொன்.காசிராஜன், உசேன், எம்.மாதேஷ்வரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close