வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (22/07/2013)

கடைசி தொடர்பு:12:22 (22/07/2013)

''அமீர்கானிடம் ஏமாந்தேன்!''

'வாரணம் ஆயிரம்' படத்தால் இன்னமும் வாழ்த்துத் தோரணங்கள் வந்து குவியும் சந்தோஷச் சாரல் பிரதிபலிக்கிறது சூர்யாவின் ஒவ்வொரு வார்த்தையிலும்!

நடிகனாகப் பல படிகள் உயர்த்தியதைக் காட்டிலும், அருமையாக ஆளையே மாற்றியிருக்கிறது இந்தப் படத்துக்கான உழைப்பு என்பது பளீர் பளிச்!

''பதற்றமில்லாமல் ஆறு மாசத்துக்குள்ள முடிச்சிரலாம்னு ஆரம்பிச்ச படம்தான். ஆனா, எக்ஸ்ட்ரா எனர்ஜியும் எக்ஸ்ட்ரா நேரமும் செலவழிக்கும்படி ஆயிருச்சு. 'ரொம்ப நல்ல படம் பண்ணிட்டு இருக்கோம்'னு தெளிவாக உணர்ந்தேன். பட ரிலீஷூக்குப் பிறகு, பலரும் அதையேதான் சொன்னாங்க. பெங்களூரிலிருந்து சரோஜா தேவி அம்மா கூப்பிட்டாங்க. 'அப்படியே சிவாஜி சாரைப் பார்த்த மாதிரியே இருந்தது'ன்னு பேசிட்டே போனாங்க. 'சிவாஜி சார் அளவுக்குன்னு சொல்றதுல்லாம் ரொம்ப அதிகம்மா'னு சொன்னேன். 'சூர்யா உன் பலம் உனக்குத் தெரியலை'ன்னாங்க.

என் நியாயமான காத்திருத்தலுக்குக் கிடைச்ச நேர்மையான ஆசீர்வாதம் இது. சினிமாவில் நீங்கள் பார்த்த ஒவ்வொரு அசைவும் கௌதமின் பங்களிப்பு. எனக்குக் கிடைச்ச எல்லா பொக்கேவும் கௌதமுக்குத்தான்!''

''இந்தப் படத்துக்காக தேசிய விருது வாங்கிடணும்கிற மெனக்கெடல் உங்ககிட்டே தெரிஞ்சதே...''

''தேசிய விருது வேற விஷயம். 'தசாவதாரம்'ல கமல் சாரின் உழைப்பைப் பார்த்துட்டு 'நாமெல்லாம் எங்கேடா இருக்கோம்'னு யோசிச்சேன். என்னோட இருப்பைக் காட்டணும்னு தவிச்ச ஆதங்கமும் உழைப்பும்தான் 'வாரணம் ஆயிரம்'. விகடன் விமர்சனத்தில் என்னைப் பாராட்டிய வரிகளை எத்தனை தடவை திரும்பத் திரும்ப வாசிச்சுச் சிலாகிச்சிருப்பேன்னு எனக்கே தெரியலை. காசு பணம்லாம் சும்மாங்க. இப்படி மனசை அள்ளிப்போகிற வார்த்தைகள்தாங்க, இப்ப எனக்குச் சோறு. இதுக்காக இன்னும் எவ்வளவு தூரமும் போகலாம்னு தோணுது. சந்தோஷத்தைவிடப் பெரிய வார்த்தை இருந்தா... அதைப் போட்டுக்கங்களேன்!''

''கே.வி.ஆனந்த், 'நேருக்கு நேர்' படத்தில் என்ன செய்றதுன்னு புரியாமல் நின்ன சூர்யா இவர் இல்லை'ன்னு சொன்னதைக் கவனிச்சீங்களா?''

''கே.வி. சாருக்கு நன்றி. அவரோட 'அயன்' படம் இதுவரை நீங்க பார்க்காத கலரில் வந்திருக்கு. அவரை ஒரு சிறந்த கேமராமேனா மட்டுமே பார்த்திருக்கிறேன். அதையும் தாண்டி, அவரை ஒரு சிறந்த இயக்குநரா இப்போ உணர்கிறேன். என்ன புண்ணியமோ, அடுத்தடுத்து நல்ல படங்களாக் காத்திருக்கு!''

'' 'ஆயிரத்தில் ஒருவன்' ஸ்டில்களைப் பார்த்தால், உங்க தம்பி கார்த்தி பயணிக்கும் பாதையே புதுசா இருக்கே. தம்பியாவே இருந்தாலும் இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''கார்த்திக்குக் கிடைச்சது எல்லாமே கிஃப்ட். சினிமா வாசனையே இல்லாமல் எம்.எஸ். படிச்சு முடிச்சான். திடீர்னு பார்த்தால், மணிரத்னம் அசிஸ்டென்ட்... அமீர், செல்வராகவன் படங்களின் ஹீரோனு மிரட்டலான சினிமா மேக்கிங்கில் செட்டில் ஆயிட்டான். முதல் படத்திலேயே நான் நிமிர்ந்து பார்க்க வேண்டிய உயரத்தைத் தொட்டுட்டான். 10 படங்களுக்குப் பிறகுதான், 'இவனுக்கு நடிப்பு, டான்ஸ் கைவருது'ன்னு என்னைப் பத்தி சொன்னாங்க. இதே டெம்போவில் கார்த்தி 10 படம் முடிச்சுட்டா அவன் எங்கே இருப்பான்னு நினைச்சுப் பார்க்க முடியலை. ஆனா, அண்ணன் தம்பி ரெண்டு பேருமே சினிமாவில் நுழைஞ்சு, ஆளுக்கொரு இடத்தைத் தக்கவெச்சுக்கிட்டோம்கிறதே பெரிய விஷயம்!''

''இந்தி 'கஜினி' பத்தி ஸ்கூப் நியூஸ் ஏதாவது?''

''படத்தை விடுங்க... அதைவிட சூப்பர் சர்ப்ரைஸ் நியூஸ் சொல்றேன் கேளுங்க. ஒரு நாள் அமீர்கான் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். ராத்திரி 9 மணிக்கு வந்தவர், மொத்தக் குடும்பத்துடனும் பேசிச் சிரிச்சு கலாட்டா பண்ணி, டின்னர் சாப்பிட்டுக் கிளம்புறப்போ, இரவு 1 மணி ஆயிருச்சு. 'தாரே ஜமீன் பர்' தமிழ் டப்பிங்கில் நான் அவருக்குக் குரல் கொடுத்ததற்காக எனக்கு ஒரு லேப்டாப் பரிசு கொடுத்தார். 'அந்த அழகான படத்துக்கு நான் விருப்பப்பட்டுதான் பேசினேன்'னு சொல்லிப் பார்த்தேன். 'என் அடையாளமா ஏதாவது ஒண்ணு உங்ககிட்டே இருக்கணும். அதுக்குத்தான்'னு சொல்லிக் கொடுத்தார். கார்த்தியைப் பார்த்து, 'நீதான் அத்தனை ரௌத்ரமான பருத்திவீரனா?'ன்னு ஆச்சர்யப்பட்டார். அப்பாவோட ஓவியங்களைப் பார்த்தவர், 'நீங்க இவ்வளவு பெரிய கலைஞன்னு எனக்குத் தெரியாதே!'ன்னு ஆரத்தழுவிப் பாராட்டினார். பேசிட்டு இருக்கும்போதே கஜினி மேனரிசங்களைச் செய்து காட்டிட்டே இருந்தார். 'இந்தியாவே கொண்டாடுற அமீர்கானா, நம்ம வீட்டு டைனிங் டேபிளில்!'னு அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி. 'நான் பெரிய நடிகன்'னு எங்காவது ஒரு இடத்துல அவர்கிட்ட அகந்தை தலைகாட்டுமான்னு பார்த்துக்கிட்டே இருந்தேன். ஏமாந்துட்டேன். அமீர்கான், நிஜமாவே ஹீரோ!''

''இந்தி 'கஜினி'யில் ஒருவேளை உங்களைவிட அமீர்கான் நல்லா நடிச்சிருந்தா எப்படி எடுத்துக்குவீங்க?''

''அதான் கஜினி டைரக்டர் முருகதாஸ், 'அமீர்கான் ஒரு புரொபசர், சூர்யா ஒரு ஸ்டூடன்ட்'னு விகடன் பேட்டியிலேயே சொல்லிட்டாரே! நிச்சயமா என்னைவிட அமீர் நல்லா நடிச்சிருப்பார். அமீர்கானாகவே இருந்தாலும் தனக்குத் திருப்தி ஏற்பட்டால்தான் முருகதாஸ் விடுவார்!''

''எல்லாம் சொல்றீங்க... குட்டிப் பொண்ணு தியா பத்தி சொல்லுங்க?''

''இப்போ எனக்கு ஒரே ரிலாக்ஸ், தியா. வீட்டில் அத்தனை பேரும் டன் டன்னா அன்பைக் கொட்டுறாங்க. எப்பவாவது நான் தூக்கிவெச்சுக்கிட்டா, 'உடனே ஓடிருவியே நீ... இன்னும் எவ்வளவு நேரம் இருப்பே?'ங்கிற மாதிரி ஒரு லுக் விடுவா. செம சுட்டி. என்னையும் ஜோவையும் தியா கொஞ்சும் அழகே தனி!'' -மென்புன்னகை மலர்ச்சி காட்டுகிறார் 'அப்பா' சூர்யா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்