'பட்டத்து யானை' விஷாலுக்கு அதிமுக்கியமான படம் - பூபதி பாண்டியன் | விஷால், பூபதி பாண்டியன், ஐஸ்வர்யா அர்ஜுன், பட்டத்து யானை, மலைக்கோட்டை

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (25/07/2013)

கடைசி தொடர்பு:15:17 (25/07/2013)

'பட்டத்து யானை' விஷாலுக்கு அதிமுக்கியமான படம் - பூபதி பாண்டியன்

"சாதாரணமாவே நான் காமெடில பட்டய கௌப்புவேன். இதுல சந்தானம் கூட வேற சேர்ந்துருக்கேன். பொதுவா என் படங்கள்ல ஆக்ஷன் பாதி, காமெடி பாதினு தான் இருக்கும். ஆனா இது அப்படி இல்லாம 80 சதவீதம் காமெடி, 20 சதவீதம் தான் ஆக்ஷன் இருக்கும்’’ - 'பட்டத்து யானை' ரிலீஸாக உள்ள குஷியில் பேசுகிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

‘‘அது என்ன ‘பட்டத்து யானை’?’’

"ஹீரோவுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் இருக்கு. ஒரு குழந்தை இருக்கும். அந்த குழந்தையை எப்படி வெச்சுக்கணும்னு ஹீரோ ஆசைப்படுறான்கிறது மாதிரி சின்ன சென்டிமென்ட் ஸீன். அதை மனசுல வெச்சுதான் 'பட்டத்து யானை'ங்கிற டைட்டிலைப் பிடிச்சோம். ஆனா, அது மாஸ் டைட்டில் ஆகி விஷாலோட கேரக்டர் மேல ஏறிடுச்சு. கேட்சிங்கான டைட்டில் அமைஞ்சாலே அது பாதி சக்சஸ் ஆச்சே...’’

‘‘விஷால் வெர்சஸ் சந்தானம் - இதுவே கேட்சிங்கா தானே இருக்கு?’’

‘‘காரைக்குடில சமையல் கான்ட்ராக்டரா இருக்குற சந்தானத்துக்கு ஒரே தேதில ரெண்டு ஆர்டர் வரும். ஒண்ணு அந்த ஏரியா ரவுடி வீட்டுக் கல்யாணம், இன்னொண்ணு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வீட்டுக் கல்யாணம். ரெண்டு பேரோட ஆர்டர்ல எதை எடுத்துக்குறதுனு முழிக்கும்போது, விஷால்தான் ரவுடியை இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டிவிட்டுட்டு இன்ஸ்பெக்டர் வீட்டு கல்யாணத்தை முடிக்கலாம்னு ஐடியா கொடுப்பாரு. இன்ஸ்பெக்டர் வீட்டு கல்யாணத்து அன்னிக்கு ரவுடி ஜெயில்லேர்ந்து ரிலீஸ் ஆகிடுவான். இன்ஸ்பெக்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்துடும். அதனால ரவுடிகிட்ட வசமா மாட்டிக்கிற சந்தானத்தை 'இப்படி ஆர்டருக்காக வெய்ட் பண்ணாம நாமளே திருச்சில சொந்தமா ஒரு ஹோட்டல் வைப்போம்'னு சொல்லி விஷால் திருச்சிக்கு கூட்டிட்டு வருவாரு. அப்புறம் திருச்சில நடக்குற சம்பவங்கள் தான் கதையே. க்ளைமேக்ஸ்ல சந்தானத்துக்கு ஃபர்ஸ்ட் ஸீன் மாதிரியே ஒரு ரவுடியோட கல்யாண ஆர்டரும் ஒரு இன்ஸ்பெக்டர் கல்யாண ஆர்டரும் கிடைக்கும். போலீஸ் ட்ரான்ஸ்ஃபர் வந்தா மாறிடுறாங்க, நமக்கு லோக்கல் ரவுடி தான் முக்கியம்னு ரவுடிக்கு ஓ.கே. சொல்லிடுவாரு. அந்த ரவுடி கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக ஹீரோயினை கடத்திட்டு வந்திருப்பான். எப்படியும் ஹீரோ வருவான்னு சந்தானம் சாப்பாட்டுல விஷத்தைக் கலந்து விஷாலைக் கொல்லப் பார்ப்பாரு. அந்த அளவுக்கு ஏன் சந்தானம் போனாருங்கிறது தான் கதையே. இதுலயே ஹீரோவோட லவ், அவருக்கு வர்ற பிரச்னைகள், ஆக்ஷன் ரிவெஞ்ச் எல்லாமே இருக்கும்.’’

‘‘விஷாலுக்கு 'மலைக்கோட்டை'னு பெரிய ஹிட் கொடுத்தவர் நீங்க. ஆனா, அதுக்கு அப்புறம் அந்த அளவுக்கு பெரிய ஹிட் விஷாலுக்கு சிக்கலையே?’’

‘‘ஆமா, விஷால் கேரியர்ல 'மலைக்கோட்டை' ஒரு முக்கியமான படமா தான் இன்னும் இருக்கு. 'பட்டத்து யானை' அதை விட முக்கியமான படமா இருக்கும். கமர்ஷியல்னா ஆக்ஷனும், காமெடியும் தானே. 'மலைக்கோட்டை'ய விட இதுல இன்னும் அதிக காமெடி, ஆக்ஷனை சேர்த்துருக்கேன். இப்ப வர்ற ஆடியன்ஸ் என்ன எதிர்பார்த்து தியேட்டருக்கு வர்றாங்க? ரிலாக்ஸ் ஆகணும்னுதானே? அதனால தான் காமெடி கொஞ்சம் தூக்கல். படத்துல  காமெடி இருந்தாலும் விஷாலுக்கான ஒரு ஆக்ஷன் மூட் இருக்கும். அதுக்காக விஷாலுக்கு பஞ்ச் டயலாக்லாம் இருக்காது. எல்லா பஞ்ச்களுமே சந்தானத்துக்கு மட்டும் தான். முக்கியமா கேமராவை உதைக்கிறது, கேமராவைப் பார்த்து வார்ன் பண்றதுலாம் இதுல இருக்காது.’’

‘‘முதன்முறையா சந்தானம் காம்பினேஷன்?’’

‘‘என் படத்துல காமெடிக்குனு யாரையும் தனியா போட்டதில்லை. ஹீரோலேர்ந்து ஹீரோயின், வில்லன் வரைக்கும் காமெடி பண்ணுவாங்க. இதுல தான் முதல்முறையா சந்தானம் கூட சேர்றேன். வழக்கமா ஹீரோவோட கதைல தான் காமெடியன் வருவாங்க. ஆனா இது அப்படி இல்லை. ஒரு காமெடியன் கதைல தான் ஹீரோவே என்ட்ரியாவாரு. முழுக்க முழுக்க சந்தானத்து மேல தான் படம் பயணிக்கும். சந்தானத்தோட கதைல உள்ள புகுந்து தன்னோட பிரச்னையை தீர்த்துக்குவார் விஷால். முதல்முறையா இதுல சந்தானத்தோட கெட்டப்பையே மாத்திருக்கோம். படம் முழுக்க வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைல ஒரு சமையல் கான்ட்ராக்டராவே வாழ்ந்துருக்காரு. ஒரு ஹோட்டல் வைக்கணும்னா 4, 5 பேர் வேணும்ல. அதுல ஓனர் சந்தானம். சந்தானத்தோட லேபர்ஸ் தான் விஷால், ஜெகன், சபேஷ், கார்த்தி நாலு பேரும். ‘இந்த படத்துல தான் நான் ஃப்ரீயா இருக்கேன். எல்லா டயலாக்கையும் நீங்களே பார்த்துக்குறீங்க... எனக்கு வேலையே வைக்கலை’னு சந்தானமே சொன்னாரு.’’

‘‘அர்ஜுன் வாரிசு ஐஸ்வர்யாவுக்கு முதல் படமாச்சே?’’

‘‘ஆரம்பத்துல ஒரு சின்ன பயம் இருந்துச்சு. அர்ஜுன் சாரோட பொண்ணாச்சே... ஏன்னா, 'கிரி' படத்துலயே அர்ஜுன் சார்கிட்ட பழகியிருக்கேன். ஆனா, கேமரா முன்னாடி ஐஸ்வர்யாவோட பெர்ஃபாமென்ஸ் முதல் படம் மாதிரியே தெரியலை. படத்துக்கு பெரிய ப்ளஸ்சா இருப்பாங்க. படத்துல அவங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். விஷால், சந்தானம், ஐஸ்வர்யா எல்லாருமே நல்ல நட்பு வட்டத்துல இருக்கறது எனக்கு வசதியா போச்சு.’’

"இப்ப காமெடி ட்ரென்ட்டுங்கிறதால ஆக்ஷனைக் குறைச்சு காமெடிய அதிகப்படுத்திட்டீங்களா?’’

‘‘என்னோட படங்கள்ல காமெடி வலுக்கட்டாயமா திணிச்சதா இருக்காது. கதையோடவே தான் காமெடி இருக்கும். அதே நேரத்துல யதார்த்தத்தை மீறாம இருக்கும். எல்லோருக்குமே பிடிச்சா மாதிரி இருந்தா தான் காமெடி ஜெயிக்கும். யூத்களுக்காக எடுக்குறேன்னு முகம் சுளிக்க வைக்காம இருக்கணும். அடுத்தவன் ஃபேமிலியோட பார்க்காம தன்னோட ஃபேமிலியோட பார்க்கிற மாதிரியான படமா தான் இது இருக்கும். மனம் கோணாம சிரிக்க வைக்கிற படங்கள் எப்பவுமே ஜெயிக்கும். எனக்கு ஆக்ஷனே இல்லாத முழு நீள காமெடி படம் எடுக்க ஆசை தான். சீக்கிரமே அப்படி ஒண்ணு அமையணும்.’’

- க.ராஜீவ்காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close