Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“இது அப்பா கொடுத்த தைரியம்!”

தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக நூறு படங்களைக் கடந்து முத்திரை பதித்த பிறகு,  ரோகிணியின் புதிய அடையாளம்... 'இயக்குநர்’! 'அப்பாவின் மீசை’ என்று தலைப்பிலேயே ஹைக்கூ புதைத்து, தன் முதல் படத்தை மிக மிக உற்சாகமாக இயக்கிக் கொண்டிருக்கிறார்...

''ஒரு படத்தை இயக்கணுங்கறது என் பல வருஷக் கனவு. என் பலம், பலவீனம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். நிறையக் குறும்படங்கள் இயக்கினேன். அந்தப் படங்களையும் ஒரு ரசிகையாப் பார்த்தப்போ, எதையும் உணர்வுபூர்வமா சொல்றது எனக்கு நல்லாவே வருதுனு தெரிஞ்சுது. அதனால, எமோஷனல் சினிமாவே எடுக்கலாம்னு முடிவெடுத்தேன். அஞ்சு வருஷம் முன்னாடி தெலுங்கு பேப்பர்ல ஒரு செய்தி படிச்சது மனசுல தங்கியிருந்தது. 13 வயசுப் பையனோட நெகிழவைக்கும் கதை அது. அதை சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டா மாத்த ஒரு வருஷம் பிடிச்சது. எமோஷன் மட்டும் இல்லாம எல்லாரும் விரும்பிப் பார்க்கிற படமா இருக்கணும்னு ஆசை. அதான் ஒவ்வொரு சீனையும் ஒவ்வொரு வசனத்தையும் இழைச்சு இழைச்சுப் படத்தை உருவாக்கிட்டு இருக்கேன்!''  

''தலைப்பே பாதி கதை சொல்லுதே... அப்பா புகழ் பேசும் படமா?''

''ஒரு அப்பாவுக்கும் பையனுக்குமான உணர்வுகள்தான் படத்தின் ஒன்லைன். பொதுவா, நாம எல்லாருமே அம்மாவின் அன்பு பத்திதான் அதிகம் சிலாகிப்போம். ஆனா, இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மையும் அறியாம அப்பா மாதிரிதான் நடந்துக்குவோம். யோசிச்சுப் பார்த்தா, நானும் பல சமயங்களில் என் அப்பா மாதிரிதான் நடந்திருக்கேன். அம்மா அன்பைக் கொடுப்பாங்க. அப்பா தைரியத்தைக் கொடுப்பார். நம்மளை அறியாம அந்த தைரியம் வெளிப்படும்போதுதான், அப்பாவின் அருமை நமக்குப் புரியும். இது நம்ம அப்பாக்களோட படம்!''

''சேரன் எப்படி இந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர் ஆனார்?''

''ஸ்க்ரிப்ட் வேலைகளுக்காக ஒரு பெரிய டீமே வேலை பண்ணோம். இந்தப் படத்தில் பணம்  ஒரு முக்கிய கேரக்டர். ஒரு தனி மனுஷனின் வாழ்க்கையில் பணம் என்னல்லாம் மேஜிக் பண்ணும்னு பலரின் அனுபவங்களைச் சேகரிச்சோம். நிறைய உணர்வுபூர்வமான உண்மையான சீன் கிடைச்சுது. அதெல்லாம் வெச்சு ஸ்க்ரிப்ட் தயாரிச்சுட்டு, 'இது எப்படி இருக்குனு படிச்சுப் பார்த்துச் சொல்லுங்க’னு சேரன் சார்கிட்ட கொடுத்தேன். படிச்சுப் பார்த்தவர், 'இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’னு ஆர்வமா முன்வந்தார். படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் அவரும் நடிக்கிறார்!''

''நடிகர்கள் நாசர், பசுபதி, நித்யா மேனன், சலீம்குமார்... சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, கேமராமேன் அல்போன்ஸ் ராய்.... எதிர்பார்க்காத பேக்கேஜ் எப்படி அமைஞ்சது?''  

''தானா அமைஞ்சது. சலீம்குமார்கிட்ட 'மூணு மாசம் முடி வெட்டக் கூடாது. ஷேவ் பண்ணக்கூடாது. நகம் வெட்டக் கூடாது. நகத்துல அழுக்கு கூட எடுக்கக்கூடாது’னு கண்டிப்பா சொல்லிட்டேன். நாசர் சாரை கொஞ்சம் வெயிட் குறைக்கச் சொன்னேன். பசுபதிக்கு சலீம் கேரக்டர்ல நடிக்க ஆசை. 'இல்லை சார்... இதுதான் உங்களுக்குச் சரியா இருக்கும்’னு நான் சொன்னதும் மறுப்பு சொல்லாம சம்மதிச்சார். ஒரு தெலுங்குப் படத்துல நித்யா மேனன் கூட நடிக்கும்போது நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. நான் கதையைச் சொல்லி, 'இதில் நீ ஹீரோயின் இல்லை. ஆனா, நீதான் நடிக்கணும். பண்றியா’னு உரிமையா கேட்டேன். உடனே சம்மதிச்சாங்க. என் டாக்குமென்ட்ரி படத்துக்கு அல்போன்ஸ் ராய்தான் ஒளிப்பதிவு. அதனால அவரையே ஒளிப்பதிவுக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். '3’ படம் சமயத்துல ரசூல் பூக்குட்டி நண்பர் ஆனார். 'நான் காலேஜ் படிக்கும்போது நீங்க என் ட்ரீம் ஸ்டார். உங்க படத்துல வேலை பார்க்கமாட்டேனா’னு ஆர்வமா எங்ககூட சேர்ந்துகிட்டார். இத்தனை வருஷம் சினிமாவுல இருந்ததுல இவங்க அன்பைச் சம்பாதிச்சு இருக்கேன்னு  நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு!''

''அப்பப்போ ''இப்படி அத்திப்பூத்தது போலத்தான் பெண் இயக்குநர்கள் வர்றாங்க... சினிமாவில் பெண்கள் பங்களிப்பு ஏன் இவ்வளவு குறைவா இருக்கு?''

''உளவியல்ரீதியா மென்மையான படங்களைத்தான் பெண்களால் பண்ண முடியும். 'துப்பாக்கி’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். ஆனா, அந்த மாதிரி ஒரு படத்தை என்னால் பண்ணவே முடியாது. ஆனா, பெண்களுக்குனு சில தன்மைகள் இருக்கு. அந்த ஏரியாவில் அவங்கதான் ராணி. பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரானு சில ஆண் இயக்குநர்கள் பெண்ணின் மனசு போலவே யோசிச்சுப் படம் பண்ணினது ஆச்சர்யமான விஷயம். பொதுவா எந்தப் பெண்ணும் தன் வாழ்க்கையில் இருந்து மூன்று கதைகள் சொல்லலாம். அந்தக் கதைகளை வெச்சு மூணு படம் பண்ணினதுமே, 'நாம டைரக்டர் ஆகிட்டோம்’ங்ற சந்தோஷத்துல அங்கேயே தேங்கி நின்னுடுறாங்க. அதுதான் பிரச்னை!''

''சில மாத பெண் சிசுக்கள்ல ஆரம்பிச்சு முதிய பெண் வரை அனைவரும் பாலியல் வன் முறைக்கு ஆளாகுறாங்களே... அதைப் பத்தி பெண் இயக்குநர்கள் ஏன் அழுத்தமா படம் இயக்க முன்வருவதில்லை?''

''ரொம்ப ஆழமான பிரச்னை அது. வெறுமனே படம் எடுத்துட்டு 'நாங்க விழிப்பு உணர்வு ஏற்படுத்துறோம்.. பெண்களே எச்சரிக்கையா இருங்க’னு தம்பட்டம் அடிச்சுக்கிறதுல எந்தப் பலனும் இல்லை. இப்போதைய தலைமுறையிடம் மாற்றத்தை உண்டாக்கினால்தான் அடுத்த தலைமுறையில் அது எதிரொலிக்கும். அதுக்கு சின்ன வயசுல இருந்தே குழந்தைகளின் பண்பையும், பழக்கவழக்கத்தையும் சீராக்கணும்!''

''இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?''

''ஆந்திரா, கேரளாவுல கொண்டாடிப் பேசுற அளவுக்கு தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்கு. ரொம்ப ஃப்ரெஷ்ஷா, கிரிஸ்ப்பா படம் தரணும்னு புதுசு புதுசா யோசிக்குறாங்க. அதுக்காக டாஸ்மாக் காட்சிகள்ல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனா, அதைத் தாண்டி நிஜ வாழ்க்கையை ரொம்ப பக்கத்தில் காட்டும்போது ரசிக்கவே முடியுது. அதே சமயம் இப்பவும் ஹீரோயின்களை டூயட்டுக்கு மட்டும் பயன்படுத்துறது வருத்தமா இருக்கு.

'சூது கவ்வும்’ படத்துல விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே சஞ்சிதா தெரிவாங்கனு வெச்சது புத்திசாலித்தனமான ட்விஸ்ட். ஆனா, போலீஸ் டிரெஸ் போடும்போதும்கூட சஞ்சிதா ஷார்ட்ஸ்லதான் வர்றாங்க. கற்பனையிலும் கவர்ச்சிதான் மையமா இருக்கு. இளைஞர்களை தியேட்டருக்கு வரவைக்கிறதுக்காக என்னமும் பண்ணலாம்னு நினைக்கிறாங்க. அந்த நிலைமை மாறுனா நல்லா இருக்கும். நிச்சயம் மாறும். ஆனா, எப்போனுதான் தெரியலை!''

- க.நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்