வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (29/07/2013)

கடைசி தொடர்பு:13:57 (29/07/2013)

வாங்கண்ணா... வாழ்த்துகள்ண்ணா!

''சைந்தவி எட்டாவது படிக்கும்போது நான் ஒரு டெடிபியர் கொடுத்து என் காதலைச் சொன்னேன்.  அப்போ அந்தப் பரிசோட பட்ஜெட் கம்மி. இப்போ எதிர்பார்ப்புகள் அதிகமாகிருச்சு. பரிசுகளோட பட்ஜெட்டும் அதிகமாகிடுச்சு!'' என்று ஜி.வி.பிரகாஷ் சிரிக்க,

 ''ஆங்... சும்மா சொல்றார். ஆஸ்திரேலியா ஹனிமூன்ல  சொல்லிக்கிற மாதிரி எனக்கு இவர் எதுவுமே வாங்கித் தரலை. ஆனா, இவர்தான் நிறைய ஷாப்பிங் பண்ணார்!'' என்று சைந்தவி முறைக்க... அழகாகக் காதல் திருமண வாழ்க்கை ஆரம்பம்!  

''ஒரு டஜன் வருஷமாக் காதலிக்கிறோம். இரண்டு வருஷம் முன்னாடியே 'கல்யாணம் பண்ணிக்கப் போறோம்’னும் சொல்லிட்டோம். ரொம்ப நிதானமா, இரண்டு பேரோட ப்ளஸ் மைனஸ் தெரிஞ்சுக்கிட்டு மிகவும் பக்குவமான மனநிலைக்கு வந்த பிறகே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு நல்ல ஃப்ரெண்ட் என் வாழ்க்கையில் கைகோத்துக்கிட்ட மாதிரி, ரொம்ப சந்தோஷமா உணர்றேன்!''  என்று ஜி.வி உருக, காதல் மின்னும் கண்களுடன் அவரைப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார் சைந்தவி.

''ஜி.வி-யை சின்ன வயசுல இருந்தே தெரியும். பாசமாப் பழகுவார். ரொம்ப இனிமையானவர். ஒரு சாதாரண ரசிகரா தியேட்டர்ல படம் பார்க்கும்போதும் சரி, இப்போ அவர் மியூஸிக் பண்ண படத்தைப் பார்க்கும்போதும் சரி... அப்பவும் இப்பவும் அவர்கிட்ட எந்த மாற்றமும் இல்லை. இத்தனை வருஷத்தில் மாறி இருக்கிறது அவரோட லுக்தான். ஆமா, ஜி.வி ரொம்ப அழகாயிட்டார்!'' என வெட்கப்படவைக்கிறார் சைந்தவி.

சைந்தவியுடனான காதல் திருமணம் தாண்டியும் ஆல்பங்களின் காப்பிரைட் யுத்தம், 'தலைவா’ பாடல்களுக்கு மாஸ் வரவேற்பு, சமூக வலைதள விமர்சனங்கள், படத் தயாரிப்பு நிறுவனம் என ஜி.வி.பிரகாஷிடம் பேச மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன.

''ஆடியோ நிறுவனங்கள், இசையமைப்பாளர்களிடம் இருந்து ராயல்ட்டியைத் திருடுவதாக ட்வீட் செய்திருந்தீர்களே!''

''ஒருவர் கம்போஸ் பண்ணும் இசைக்கு அவர்தான் உரிமையாளர். இதுதான் உலகம் முழுக்க உள்ள சட்டம். ஆனால், இங்கே சில ஆடியோ நிறுவனங்கள் அந்த உரிமையை எங்களிடமிருந்து பறிக்கிறாங்க. நாங்க அவர்களிடம் கடன் வாங்கியிருப்பதாக பத்திரத்தில் எழுதி வாங்கி, எங்கள் இசையும் பாடல் வரிகளும் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாக ஒரு தோற்றத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். இது நவீனத் திருட்டு. இதற்கு எதிராகப் போராட ஆரம்பித்திருக்கிறோம். எல்லா இசையமைப்பாளர்களும் ஆதரவு கொடுத்திருக்காங்க. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்!''

'' 'தலைவா’ படத்தில் விஜய் பாடிய 'வாங்கண்ணா... வணக்கங்ண்ணா’ செமத்தியான ஹிட். விஜய் என்ன சொன்னார்?''

'' 'நானே இப்போதான் 'ட்யூட்’, 'ப்ரோ’-ன்னு பேச ஆரம்பிச்சேன். நீங்க திரும்பவும் வாங்கண்ணா, வணக்கங்ண்ணா’னு ஞாபகப்படுத்திட்டீங்க. ஆனாலும் பாட்டு சூப்பர்’னு பாராட்டினார். வாழ்க்கை ஒரு வட்டம்னு அவர் பன்ச்சை அவர்கிட்டே சொன்னேன். வெடிச்சுச் சிரிச்சார்!''

''இப்போலாம் ஒரு ஆல்பம் வெளியான அடுத்த நிமிஷமே ட்விட்டர், ஃபேஸ்புக்ல கமென்ட்ஸ் பின்னுதே... படத்தின் இசையை ரொம்ப டெக்னிக்கலா விமர்சிக்கிறாங்க... கவனிக்கிறீங்களா?''

''மிஸ் பண்ணாமப் படிச்சிடுவேன். பாராட்டுக்களை எந்த அளவுக்கு விரும்பிப் படிப்பேனோ, அதே அளவுக்கு விமர்சனங்களையும் படிச்சிடுவேன். ஆனா, ஒரு விஷயம் என்னன்னா ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்களை மட்டுமே வெச்சு நம்ம இசையை டிசைன் பண்ண முடியாது. ஏன்னா, அந்த ஸ்பேஸ் 'ஏ ப்ளஸ்’ ரசிகர்களுக்கானது.அதையும் தாண்டி பி, சி...னு பல சென்டர் ரசிகர்களையும் நாம கவனிக்கணும். ஒரு தரப்புக்கு மட்டுமே பிடிச்ச இசையைக் கொடுக்க முடியாது. எல்லோருக்கும் பிடிச்ச இசையைக் கொடுப்பதில்தான் ஒரு இசையமைப்பாளரின் வெற்றி இருக்கு!''

''பெரிய பொருளாதார வசதி இருந்தால்தான்  தயாரிப்பாளர் ஆக முடியும். 'தயாரிப்பாளர்’ ஜி.வி.பிரகாஷ் வசதியானவரா?''

''இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணலாமேனுதான் தயாரிப்பாளர் ஆனேன். அதே சமயம் படத் தயாரிப்பு மூலம் சம்பாதிக்கிற ஆசையும் இல்லை. நல்ல புராஜெக்ட்கள் மூலமா இளம் இயக்குநர்கள், இசைய மைப்பாளர்கள்னு நிறையப் பேருக்கு வாய்ப்பு தரணும்னு ஆசை. இப்போதைக்கு என் முதல் படம் 'மதயானைக் கூட்டம்’ நல்லா வந்திருக்கு. விக்ரம் சுகுமாறன்னு அறிமுக இயக்குநர். என் உதவியாளர் ரகுநந்தன் இசை. படம் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்!''

- சார்லஸ், படம்:பொன்.காசிராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்