மாடல் அழகா இருந்தா,ரோல் மாடல்தான் !

ஆதித்யா சேனலில் 'சின்னவனே பெரியவனே’ நிகழ்ச்சியில் பல்வேறு மாறுவேடங்களில் தோன்றி செமத்தியாக மொக்கை போட்டுக் கொண்டிருப்பார்கள் இரண்டுபேர். அந்த மோசமானவர்களில் முக்கியமானவரான திருச்சி சரவணக்குமாரிடம் நான் போட்ட மொக்கை இது.  தமிழ் சினிமா வழக்கப்படி ஹீரோவுக்கு காமெடி நண்பனாக தலை காண்பிக்கவும் ஆரம்பித்துவிட்டார் சரவணக்குமார்.

''500 எபிசோடுகளைத் தாண்டிட்டீங்களாமே, எப்படி பாஸ் இதெல்லாம்?''

  ''ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுதான் காரணம். நாங்க போடாத வேஷமே கிடையாது. இப்போ சினிமா பக்கமும் போயிருக்கேன். 'சிங்கம்-2’-ல சந்தானம் அனுஷ்காவோட டூயட் பாடிட்டார். சிவகார்த்திகேயன் ஹன்சிகா கூட டூயட் பாடப் போறார். அட்லீஸ்ட் நான் நஸ்ரியாவுக்குப் பக்கத்துல நிக்கணும். நடக்குமா பாஸ்?'

''உலகம் அழிஞ்சுடும். 'சின்னவனே பெரியவனே’ புரொகிராம்ல யார் சின்னவன், யார்  பெரியவன்?''

''என் கூட புரொகிராம் பண்ற 'சேட்டை’ செந்தில் சாரை விட நான் வயசுல சின்னவன். அதனால அவர் பெரியவன். ஆனா, நான் உருவத்தில அவர விட பெரியவன். அதனால அவர் சின்னவன். தல சுத்துதா? இதுக்குப் பேருதான் கொலமொக்கை!''

''நீங்க நடிச்ச 'யமுனா’ படத்துக்கு ஹீரோவை விட உங்க போட்டோவை மட்டும் நான்கு அடி உயரத்துக்கு நாலு போஸ்டர் போட்டு, திருச்சி மக்களை மிரள வெச்சீங் களே... எப்படி?''

  ''அது ஒரு பெரிய கதை. நான் அந்தப் படத்துல காமெடியன்தான். ஊர்ல நம்ம 'நண் பேண்டா’ பசங்க 'அண்ணே திருச்சியையே மிரள வைக்கிறோம். கட் அவுட், போஸ்டர்னு நீங்க ஓ.கே. மட்டும் சொல்லுங்க’னு சொன்னாய்ங்க. சரி, நம்ம மேல ரொம்ப பிரியத்தோட இருக்கானுங்களேனு ஓ.கே. சொன்னேன். படம் ரிலீஸுக்கு அப்புறம் திருச்சி போனப்ப 'அண்ணே இந்த அமவுன்ட்  செட்டில் பண்ணிருங்கண்ணே’னு ஒரு பில்லைக் கொடுத்தானுங்க. ஆத்தி ..! அந்தப் படத்துல நடிச்சதுக்கு நான் வாங்கினதை விட அதிகம். அப்புறம் இது உனக்கு தேவையானு வடிவேலு பாணியில என்னைய நானே கேட்டுக்கிட்டு கடன் வாங்கிக் குடுத்துத் தொலைச்சேன்!''

''சரி, உங்களுக்கு ரோல் மாடல் யாரு?''

''மாடலா வர்றவங்க அழகா இருந்தாப் போதும். எல்லா மாடலும் நமக்கு ரோல் மாடல்தான். சரிதானேண்ணே?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!