வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (07/08/2013)

கடைசி தொடர்பு:14:25 (07/08/2013)

''எல்லாப் படத்திலேயும் தேவயானிதான் ஹீரோயின்!''

'ஸ்டைலென வாக்கென டாக்கென ராக்கென ராஜகுமாரன் விரைவில்!’ -இப்படி அதிரிபுதிரி போஸ்டர் வாசகங்களோடு ஹீரோவாகித் தெறிக்க வைக்கிறார் ராஜகுமாரன். 'ஆனா, இதுதான் நமக்குப் புதுசு இல்லையே’ என்று ராஜகுமாரனைச் சந்திக்கப் போனேன்.

 

''ஏன் சார் தமிழனுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. இப்போ நீங்களும் அட்ராசிட்டியை ஆரம்பிச்சிட்டீங்களே?''

''என்னை வெச்சு காமெடி பன்ணணும்னு முடிவோடு கிளம்பி வந்துட்டீங்க. ம்... நடத்துங்க. ஆனா சார், இந்தப் படம் நீங்க நினைக்கிற மாதிரி மொக்கையா இருக்காது. ரொம்ப ரொம்பப் பெரிய ஹிட் ஆகும்!''

''அதென்ன 'திருமதி தமிழ்’னு ஒரு டைட்டில்?''

''ஒரு ஆண் அங்கீகரிக்கும்போது ஒரு பெண் திருமதி ஆகிறாள். ஒரு அரசு அங்கீகரிக்கும்போது, ஒரு மொழி செம்மொழி ஆகிறது. நம் தமிழ்மொழிக்கு உலகளாவிய செம்மொழி அங்கீகாரம் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் 'திருமதி தமிழ்’ என்ற டைட்டில் வைத்து மரியாதை செஞ்சிருக்கேன்!''

''சார் படத்தோட ஸ்டில்ஸ் மாதிரி நீங்க சொல்ற பதிலும் கண்ணைக் கட்டுது. இது குடும்பப் படமா, அதாவது உங்க 'குடும்பப் படமா’?''

'' இது முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படம். என் இன்னிங்ஸ் ஆரம்பிச்சுடுச்சு சார்.''

''நீங்க ஹீரோவானதைப் பர்த்து யாராவது உங்ககூட பேசறதை நிப்பாட்டினாங்களா?''

''சார் நான் லவ் மேரேஜ் பண்ணினவன். தமிழ்நாடே கொண்டாடுன... பீக்ல இருந்த ஒரு தேவதையைக் கல்யாணம் செய்தவன். இந்த ஒரு தகுதி போதாதா? இதுவரை என்னை யாரும் கிண்டல் செய்யலை சார். வாழ்த்துறாங்க!''

''நீங்க நடிக்கிறதே ரிஸ்க்னு சொல்ற வங்க சொல்லட்டும்... படத்துல ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கீங்களா இல்லையா?''

''ஆக்ஷன்ல பின்னிப் பெடலெடுத்துட்டேன்ல! நான் கொஞ்சம் மெனக்கெட்டு ரோப் போடாம ஃபைட் பண்ணி இருக்கேன். ஆனா, இந்தக் கர்மம் பிடிச்ச டான்ஸ் ஸ்டெப் மட்டும்தான்... படுத்தி எடுத்திருச்சு!''

''இந்தப் படத்தோட நிப்பாட்டிருவீங்களா? இன்னும் கன்டினியூ பண்ணுவீங்களா?''

''வருஷத்துக்கு இனி மினிமம் 5, மேக்ஸிமம் 10 படங்கள் தயாரிக்கப்போறோம். எல்லாத்துலேயும் தேவயானிதான் ஹீரோயின். நான் ஒரு படம்தான் ஒரு வருஷத்துக்குப் பண்ணுவேன். மீதி எல்லாம் திறமை உள்ள ஆட்களுக்கு. டைரக்டர் ஆகணும்னு கனவோட இருக்கும் நண்பர்களே... தேவயானிக்கான நல்ல கதையோட வந்தீங்கன்னா, உங்கள் ராஜகுமாரன் வீட்டுக் கதவு உங்களுக்காக  திறந்து இருக்கிறது. நான் தயாரிக்க ரெடியா இருக்கேன்.''  

அப்புறம் என்ன பாஸ்? கூட்டம் கூட்டமாக் கொடி பிடிச்சுக் கிளம்புங்க!

 - ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க