வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (07/08/2013)

கடைசி தொடர்பு:14:30 (07/08/2013)

அட ஆமாம்ல!

நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவரா? அதுவும் 80-களில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? டி.வி.யில் பிளாக் அண்ட் ஒயிட் படங்களையும் இன்னும் ரசனையுடன் பார்ப்பவரா? 'அட... ஆமாம்பா, ஆமா’ என்கிறீர்களா? அப்போ, இங்கே இருக்கிற எல்லா விஷயங்களும் உங்க மைண்ட்லேயும் வந்து லந்து பண்ணுமே!

 

 

பாம் டிஸ்கனெக்ட் பண்றப்போ சிவப்பு வயரை கட் பண்ணப்போய் கட் பண்ணாம, பச்சை வயரைக் கட் பண்றமாதிரிப் போய் அதையும் கட் பண்ணாம, திரும்பவும் சிவப்பு வயரை கட் பண்ணுவாரு ஹீரோ. ஆக்சுவலி ஒரு படத்திலேயாச்சும் தப்பா கட் பண்ணி எண்ட் கார்டு போடுவாய்ங்கனு  பார்த்தா, ஒரு ஹீரோவும் தப்பா கட் பண்ணினதாத் தெரியலை. இதுக்குப் பேருதான் 'வயர்கட் சின்ட்ரோம்?’

'கூக்கூ என்று குயில் கூவாதோ...’ பாட்டா இருக்கட்டும், 'என்னடி மீனாட்சி’ பாட்டா இருக்கட்டும், 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா’ பாட்டா இருக்கட்டும், சின்னச் சின்ன வித்தியாசங்கள் மட்டுமே காட்டி, கையை இரண்டு பக்கம் விரித்து, தலையை வலதும் இடதுமாக ஆட்டிக் கமல் ஆடுவதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா? இல்லாங்காட்டி புலியூர் சரோஜாவின் ஒரே ஸ்டெப்பை பல படங்களில் கமல் மாடிஃபிகேஷன் பண்ணிட்டு இருந்தாரா?

வேகாத வெயிலில் ஜெர்கின் ஜாக்கெட், லெதர் பேன்ட் போட்டுக்கொண்டு, மழை நாளில் டிராஃபிக் கான்ஸ்டபிள்ஸ் அணியும் முட்டி உயர ஷூக்களை மாட்டிக்கொண்டு ஏழை ஹீரோவாக ரோட்டுக் கடையில் தலையை சிலுப்பிக்கொண்டு டீ சொல்லும் 'நல்லவனுக்கு நல்லவன்’ ரஜினி அப்போதும் இப்போதும் எப்போதும் எனக்கு ஆச்சர்யமே!  

'சத்ரியன்’ போன்ற ஹிட் படங்களில்கூட வெவ்வேறு வில்லன்களோடு விஜயகாந்த் மோதும்போதும் எல்லா சண்டைக் காட்சிகளிலும் தவறாமல் ஆஜர் ஆகி விஜயகாந்திடம் அடிவாங்கிச் செல்லும் பொன்னம்பலம் உண்மையிலேயே எந்த வில்லனோட அடியாள்?

'வாட் 69’னு ஒரு சரக்கு அப்போது எல்லாப் படத்திலும் பணக்கார வில்லன்கள் வீட்டில் தவறாமல் இருக்கும். இந்த சரக்கைக் குடிச்சா ஒண்ணு கொலை பண்ணுவாய்ங்க; அல்லது ரேப் பண்ணிடுவாய்ங்க. அவ்ளோ மோசமான சரக்கா சார் அது? எங்கே சார் கிடைக்கும்?

'ஓ.கே. பாஸ்...’ இந்த டயலாக்கை  இஞ்சி தின்ன ஏதோ போல முகத்தை வைத்துக்கொண்டு, தான் நடிக்கும் படங்களில் தவறாமல் பேசும் ஆர்.எஸ்.மனோகர் பெரும்பாலும் மொட்டை போட்டுத்தான் நடிச்சிருப்பார். என்ன வேண்டுதல்?

சங்கிலி முருகன் பல படங்களில் இரும்புக்கை மாயாவி போல ரெண்டு கையிலும் பெரிய அகப்பையை மாட்டிக்கொண்டு ஹீரோவைக் குத்திக் கொல்ல சண்டை போடுவாரே, ஏன்ன்ன்ன்ன்ன்..?

பெரும்பாலும் கருப்பு பிரௌன் கலர்களில் மட்டுமே  ஷூக்கள் பார்த்திருக்கோம். (ராமராஜன் இதில் விதிவிலக்கு). வெள்ளையில் பூப்போட்ட டிசைன் ஷூக்களைத்தான் ப்ளாக் அண்ட் ஒயிட் ஆளுங்க யூஸ் பண்ணி இருப்பாங்க. கவனிச்சிருக்கீங்களா? அந்த ஷூ கம்பெனிகள் எல்லாம் இப்போ எங்கே பாஸ்?

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் எட்டி மிதிக்கும் தூரத்தில் சண்டை போட்டாலும் கத்திகளை எக்ஸ் வடிவத்தில் வைத்தபடி ஒருவர் கழுத்திலிருந்து மற்றவர் கழுத்துக்கு மாற்றி மாற்றி நெருக்கிவைத்து... ஸாரி நெருக்கமாக நின்றுகொண்டு வளைந்து சண்டை போடுவார்களே... என்ன வில்லத்தனமான கெமிஸ்ட்ரி அது?

ஜெயசுதா, சௌகார் ஜானகி, சுமித்ரா, ஸ்ரீவித்யா போன்ற அம்மா நடிகைகளை மேக்கப் அப்பி இளமையாக முதல் சீனில் காட்டினால், அடுத்த சீனில் கெட்டது நடக்கப்போகுதுனு அர்த்தம். குடிசை வீட்டில் இருந்தால் குடும்பத்தோடு கொளுத்திவிடுவார்கள். அல்லது மழை நாளில் கணவர் ரத்தச் சகதியில் விழுந்து சாகும் அதே நேரத்தில் பாழடைந்த கோயிலில் மணிகள் காற்றில் ஆட... இடி மின்னல் முழங்க 'குவா குவா’ என்ற சத்தம் எழுப்பும் 'குட்டி’ ஹீரோவை டெலிவரி செய்வார்கள்!

'கோபுர வாசலிலே’ படத்தில் 'காதல் கவிதைகள் எழுதிடும் நேரம்’ பாடல் காட்சியில் ஹீரோயின் பக்கத்தில் நிற்கிற சுகுமாரி கையில் ஒரு குடை வெச்சிருப்பாங்க. அது காத்துல பறந்து போக, எல்லோரும் அதை ஃபாலோ பண்ணி ஓடுவாங்க. ஆனா, அந்தக் குடையை முன்னாடி யாரோ இழுத்துட்டு ஓடுறது அப்பட்டமாகத் தெரியும். எனிதிங் எடிட்டிங் மிஸ்டேக்?

ராதா காலத்திலே இருந்து சுகன்யா காலம் வரைக்கும் டூயட் பாட்டில் ஹீரோ கேன்வாஸ் ஷூ போட்டு ஆட, மொட்டைப் பாறையோ, இமயமலைப் பனியோ ஹீரோயின்ஸ் மட்டும் செருப்பே போடாம ஆடுவாங்க. எதுவும் நேர்த்திக்கடனா?

தேங்காய் சீனிவாசன் நல்ல காமெடியன்தான் ஆனா, சென்டிமென்ட் சீன்களில் அப்படியே சிவாஜியை இமிடேட் செய்து மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சுடுவாரு... கவனிச்சிருக்கீங்களா?  

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்