வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/08/2013)

கடைசி தொடர்பு:14:39 (07/08/2013)

யூ ஹாப்பி...?

'கும்கி’, 'பருத்திவீரன்’, 'மைனா’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'காக்க காக்க’... இதெல்லாம் நெகட்டிவ் க்ளைமாக்ஸில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த படங்கள். என்னதான் ஹிட் என்றாலும் அல்லியும் பொம்மனும் கலகலவென காதலில் இணையாமல் போனதில் எல்லோருக்கும் வருத்தம்தானே. ஒருவேளை இந்தப் படங்களெல்லாம் ஹரி, பேரரசு, சுராஜ், சுந்தர்.சி மாதிரியான செம கமர்ஷியல் இயக்குநர்களின் கையில் சிக்கி இருந்தால் க்ளைமாக்ஸ் இப்படித்தானே இருந்திருக்கும் மச்சான்ஸ்...

 

 

மைனா

டைரக்டர் ஹரி இந்தப் படத்தை இயக்கி இருந்தால்..? போலீஸ் ஜீப்பை (ஸ்டேஷனுக்கு வெளியே சாவியோடு ஹீரோவுக்காகக் காத்துக்கிடக்கும் அதே ஜீப்தான்!) எடுத்துக்கொண்டு பறக்கும் விதார்த், வெட்டுப்பட்ட அமலாபாலை அள்ளிப்போட்டுக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சேர்க்கிறார். ஜீப்பை டாப் கியருக்கு மாற்றி, குறுக்கே ஓடும் ரயிலின் உச்சந்தலையில் உரசியபடி அந்தப் பக்கம் போய் இறங்குபவர், தேனியில் அடாவடித்தனம் செய்யும் இன்ஸ்பெக்டரின் மச்சான்களைப் பிடரியில் நாலு போட்டு போட்டு, அல்லையில் அரிவாளால் வெட்டி, கணுக்காலில் செருகி வைத்திருக்கும் கள்ளத் துப்பாக்கியால் டுப்பு டுப்பெனச் சுட்டுக் கொல்வார். ரௌடித்தனம் செய்யும் இன்ஸ்பெக்டரின் மனைவியின் கன்னத்தில் அறைபவர் 'போலீஸ்காரன் பொண்டாட்டினா பொறுமையா இருக்கணும்; போக்கிரித்தனம் பண்ணக் கூடாது. அடக்கமா இருக்கணும்; அடங்காப்பிடாரியா இருக்கக் கூடாது’ என்று பாடமெடுத்து நகர்வார். இறுதியில், தான் வைத்திருக்கும் கள்ளத் துப்பாக்கியோடு போலீஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் (கெஸ்ட் ரோல் பண்ண வந்தவர்) சரண்டர் ஆவார். 'சரண்டர் ஆனவனெல்லாம் கிரிமினலும் இல்லை, கிரிமினலெல்லாம் சரண்டர் ஆகுறதுமில்லை’ என பொத்தாம் பொதுவாக பஞ்ச் டயலாக் பேசும் ரவிக்குமார், விதார்த்துக்கு மன்னிப்பு வழங்குவார். ஃபுல் மேக்-அப்பில் ஆஸ்பத்திரி ஐ.சி.யு-வில் மூக்கில் மாஸ்க் மாட்டியபடி படுத்திருக்கும் அமலாபால் மெள்ள மெள்ளக் கண் திறக்க அங்கே கலைந்த தலையோடு நிற்கும் விதார்த், 'வா புள்ள... பெரியகுளம் ரோட்டுல பணியாரக் கடை போட்டுப் பொழச்சுக்கலாம்.’ என்று சொல்லி அலேக்காகத் தூக்குவார். உடனே 'டேய் சுருளி, இனி உங்க காதலுக்குக் குறுக்கே எந்தக் கொம்பனும் கிடையாதுடா. எந்தக் கொம்பனும் கிடையாது’ என்று எக்கோ வாய்ஸில் நெகிழ்ந்து குழைந்து வாழ்த்துவார் தம்பி ராமய்யா!

பருத்திவீரன்

இயக்குநர் பேரரசு ஒருவேளை இந்த சப்ஜெக்டைத் தொட்டிருந்தால்... ஊருக்கு வெளியே இருக்கும் தனி வீட்டில் ப்ரியாமணியை வைத்துவிட்டு ஊருக்குள் செல்கிறார் கார்த்தி. இந்த நேரத்தில், எம்.எல்.ஏ. தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடாத அந்த ஊரை அழிப்பதற்காக இறக்கப்பட்ட வெடிகுண்டுகளை அங்கே பதுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. உடையப்பா, வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். தன் வாழ்க்கையைவிட ஊரே பெருசு என்று நினைக்கும் முத்தழகு, அந்த வீட்டுக்குத் தீ வைத்து வெடிகுண்டுகளை அழித்துத் தானும் சாக முடிவெடுக்கிறாள். நமத்துப்போன தீப்பெட்டியின் ஒவ்வொரு குச்சியாக எடுத்து முத்தழகு உரசிக்கொண்டிருக்க, இங்கே தனது பழைய எதிரி பட்டாசு பாலுவோடு மல்லுக்கட்டுகிறான் பருத்திவீரன். முத்தழகு எடுத்த முடிவை பருத்திவீரனிடம் எம்.எஸ்.பாஸ்கர் ஓடிவந்து சொல்ல, பிளேடு துகள்களை பட்டாசு பாலுவின் கண்களில் துப்பிக் குருடாக்கிவிட்டு ஹைவால்டேஜ் மின்சாரக் கம்பிகளில் கயிற்றைப் போட்டுத் தொங்கியபடி அந்த வீட்டுக்குப் பறக்கிறான் பருத்தி. பூட்டி இருக்கும் வீட்டின் கதவை வெல்டிங் கம்பி தீ மூலம் பிளந்து இவன் உள்ளே நுழையவும், முத்தழகு கடைசித் தீக்குச்சியைப் பற்றவைக்கவும் சரியாக இருக்கிறது. தாவணி தீயில் கருகியதால் கிழிந்த பிளவுஸ், கழன்ற ஸ்கர்ட் என கில்மா போஸில் பதறி நிற்கும் முத்தழகைத் தூக்கிக்கொண்டு பழையபடி மின்சாரக் கம்பியில் தொங்கிப் பயணித்து பருத்திவீரன் எஸ்கேப் ஆக, பின்னணியில் வெடித்துத் தூள் தூளாகிறது அந்த வீடு. (அங்கே போடுவாருல்ல... 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் பேரரசு’-னு)

கும்கி

ராம. நாராயணன் கையில் இந்தப் படம் சிக்கி இருந்தால்... கொம்பனைத் தந்தத்தால் மோதி ஜெயிக்க முடியாததால், சட்டென ஃபாரஸ்ட் ஆஃபீஸர் கையில் இருக்கும் மெஷின் கன்னைத் தும்பிக்கையால் பிடுங்கி படபடவெனச் சுட்டுத்தள்ளும் மாணிக்கத்தைக் கொண்டாடுகிறது ஆதிகாடு. இருந்தாலும் கொம்பன் வயிற்றில் குத்தியதால் ரத்தம் கொட்ட மயங்கி விழுகிறான் மாணிக்கம். இதைப் பார்த்து பக்கத்து மலைக் கிராமமான சென்னிமலைக்கு நாய் வண்டியில் ஏறிப் பறக்கும் ராமு குரங்கு 'ஒரு உயிர் துடிக்கிறது. உங்களிடம் உதவி கேட்கிறது’ என்று எழுதப்பட்ட சிலேட்டை எடுத்துக் காண்பித்து வைத்தியரை அழைத்து வருகிறது. வைத்தியர் வந்து பச்சிலை மருந்து தடவி மாணிக்கத்தைக் காப்பாற்றுகிறார். இதற்குள் பொம்மன் - அல்லி காதல் ஊருக்குத் தெரிந்துவிடுகிறது. என்னதான் குல வழக்கத்தை மீறியிருந்தாலும்கூட கொம்பனை அழித்த பாகன் என்பதால் பொம்மனை ஏற்றுக்கொள்கிறார்கள் ஆதிகாடுவாசிகள். ஆதிகாட்டின் முன்னோடி தெய்வமான ஒத்தக்கண் டைனோசர் சிலை முன்பாக நடக்கும் இந்தக் காதல் திருமணத்தில் ஃபாஸ்ட்ட்ராக் கூலிங் கிளாஸ், ட்ரிகர் ஜீன்ஸ் அணிந்தபடி வெல்கம் டான்ஸ் ஆடுகிறது மாணிக்கம் யானை. அதன் தலையில் லூயிஸ்பிலிப் கட்டம் போட்ட சட்டையில் கலக்கலாகச் சீறுகிறான் நாகராஜன் பாம்பு. இந்தக் களேபரத்தில், அசிஸ்டென்ட் பாகனான உண்டியலும் லோக்கல் ஆதிவாசிப் பொண்ணு ஒன்றை கரெக்ட் பண்ணி வந்து நிற்க 'அடப்பாவி, என்னையத் தனிக்கட்டையா நிறுத்திட்டியே. உனக்கு ஃபர்ஸ்ட் நைட்ல பக்கவாதம் வந்தே தீரும்டா’ என்று தம்பி ராமய்யா சலம்ப, கலகலவென விழுகிறது திரை!

- எஸ்.ஷக்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்