வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (07/08/2013)

கடைசி தொடர்பு:14:51 (07/08/2013)

பா(ட்)டாப் படுத்தினாங்க!

ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் இன்றைய டி.டி.எச். காலம் வரை தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகள் அடைந்திருக்கும் அபரிமிதமான பரிணாம வளர்ச்சிக்கு அளவே இல்லை பாஸ். வாங்க கொஞ்சம் அதைப் பற்றி அலசிக் காயப்போட்டு கிளிப்பு மாட்டுவோம் கிளிப்பு!  

 

'காயாத கானகத்தே...’ என டி.ஆர்.மகாலிங்கம் போன்ற ஹீரோக்கள் ஹை டெசிபலில் பாடுவார்கள். கவனிச்சிருக்கீங்களா? ஆனால், ஹீரோயின்கள் ரெண்டு நாள் காய்ச்சலோடு சுடுகஞ்சி துவையல் சாப்பிட்டதும் வருமே ஒரு தெம்பு... அதே குரலில் பாடுவார்கள். சந்தேகம்னா ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் பொதிகை சேனலில் தவறாமல் 'மகான் காந்தி மகான்...’ எனப் பாடும் அந்தப் பெண் பாடகியின் குரலையும் உச்சரிப்பையும் கேட்டுப் பாருங்கள். அதுமட்டும் அல்லாது தள்ளி நின்று காதல் செய்து 'ஏதேது... நீங்கள் குறும்புக்காரராய் இருப்பீர்கள் போலிருக்கிறதே’ என்பதுபோல ஃப்ரேமுக்கு வெளியே ஓடிவிடும் தூரத்தில் தள்ளி நின்று டூயட்டும் பாடுவார்கள்!

முதல் காட்சியில் ஒரு பெண்ணைக் காப்பாற்றும் 'உரிமைக்குரல்’ எம்.ஜி.ஆர், அடுத்த காட்சியிலேயே தன்னுடைய தோப்பில் மாங்காய் பறிக்கும் லதாவைப் பார்த்து, 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு... பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு...’, என்றும் 'காயா பழமா கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா...?’ என லதாவை நேரடியாக ஈவ் டீஸிங் செய்து தொட்டுக் குளிப்பாட்டிப் பாடுவார். தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் திருட்டுத்தனமாய் தேங்காய் பறித்த லதாவிடம் தன் காதலை நேர்மையாய்ச் சொன்ன நம்பியார்தான் அந்தப் படத்தின் வில்லனாம்!

பாரதிராஜா படத்து ஹீரோயின்கள் ஒரேமாதிரி கன்னத்தில் கை வைத்து, லேசாக மேலே பார்த்து ஒரே மாதிரிதான் சிரிப்பார்கள்!

ராம்கி போன்றோர்  வட்ட வடிவத்தில் 'கொட்டு’ ஒன்றை வைத்துக்கொண்டு (அதில் ரங்கோலி வேறு வரைந்திருக்கும்!) ஹீரோயின் போகும் கம்மாக்கரை, காடு கழனி எங்கும் துரத்தித் துரத்தி வெறித்தனமாய்ப் பாடிக் காதல் அப்பீல் செய்வார். இந்த இம்சைக்குக் காதலித்துத் தொலையலாம் என்பதுபோல ஹீரோயினும் ஓடி வந்து கொட்டைத் தட்டிவிட்டு கட்டிக்கொள்ளுவார். கொட்டு அடித்துக்கொண்டும் வில்லன்களிடம் அடிவாங்கிக்கொண்டும் வாயில் ரத்தம் வடிய வடிய, 'பாடிப் பாடி அழைத்தேன்... ஒரு பாச ராகம் இசைத்தேன்’ எனப் பாடும் 'மருதுபாண்டி’ ராம்கியை ரசித்தவர்கள்தானே நாம்!

'ஒமாஹாசியா...’ என படத்தின் ஓப்பனிங்கிலேயே சூர்யா ஜோதிகாவை  வெறி வந்ததுபோல் துரத்தித் துரத்திப் பாடினார் 'காக்க காக்க’வில். விட்டா ஓடிடுவாங்களா பாஸ்?

  80-களில் தெருக்களில் 'தூள் பறக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்’ என மைக்செட் கட்டி வண்டியில் அறிவித்தபடி செல்வார்கள். அவர்கள் சொல்ல மறந்த விஷயம்... தூள் பறக்கும் பாடல் காட்சிகளும் அந்த சீஸனில் இருந்தது என்பதைத்தான். கேமராவுக்கு முன் கலர் கலர் பொடிகளைத் தூவி வர்ண ஜாலம் காட்டுவது 80-களின் தனிப் பெரும் கொடுமை. அதை அடுத்த கட்டத்துக்கு எஸ்.பி. முத்துராமனும் ரஜினியும் கூட்டிப் போனார்கள்.  இவர்கள் கூட்டணியில் பாடல் காட்சிகளில் ரஜினி ஆடிக்கொண்டிருக்க, பின்னணியில் பாம் வெடித்து கலர்கலராகத் தூள் பறக்கும். இவர் இப்படி என்றால், இன்னொரு பக்கம் டி.ஆர்.

மனிதர் போடாத செட்டுக்கள் இரண்டே இரண்டுதான். அது செட் தோசையும் முட்டை புரோட்டாவும். ராட்சசக் கடிகாரம், உதடு, டெலிபோன், கட்டில், கதவு, ஸ்க்ரூ ட்ரைவர் என செட் போட்டே பாடலை ஹிட் ஆக்கிவிடுவார் மனிதர். டி.ஆரின் இந்த செட் வெறியும் கலர் வெறியும் பரிமாண வளர்ச்சி அடைந்து ஷங்கருக்கு நோய்த் தொற்றாகப் பரவி, இதுவரை அவருக்குக் குணமாகாமல் இருக்கிறது!

ஆளே நுழைய முடியாத தீவுக்குள் (அப்படி ஒண்ணு எங்கே இருக்கு பாஸ்?) நுழையும் ஹீரோ க்ரூப் 'ஊத்தட்டுமா... ஊத்தட்டுமா... தீரட்டுமே புட்டி’ என்ற தத்துவப் பாடல் கேட்கும் தீவிரவாதிகளைக் கிடைத்த கேப்பில் உள்ளே நுழைந்து போட்டுத் தள்ளும். இப்போது ஹீரோவும் ஹீரோயினும் பப்புகளில் சரக்கடித்துவிட்டு லவ் பண்ணிக்கொண்டே, 'யாக்கை திரி... காதல் சுடர்’ என வைரமுத்துவின் தீந்தமிழுக்கு ஆடித் தீர்க்கிறார்கள். '3’ படத்தில் ஒரு படி மேலே போய் பப்பிலே தாலி கட்டினார்கள். இனி, அடுத்தடுத்த தனுஷ், சிம்பு படங்களில் பப்புகளில் முதலிரவை நடத்தியும் காட்டிவிடுவார்கள் என நம்புவோம்!

எப்படியோ ஹீரோ- ஹீரோயின் கெமிஸ்ட்ரி பயாலஜி ஆகாம இருந்தால் சரி!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்