வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (13/08/2013)

கடைசி தொடர்பு:11:54 (13/08/2013)

கேப்டனின் ஆபரேஷன் ஒசாமா!

கேப்டனின் அடுத்த படம் ஹாலி வுட்டில் என்றால் உங்களால் நம்ப முடியுதா? எங்களாலயும்தான் நம்ப முடியலை. ஆனா, அப்படி ஒரு அமானுஷ்ய அசம்பாவிதம் நடந்துச்சுன்னா, அது எப்படி இருக்கும்?

 (குறிப்பு: இப்படத்தில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் தட்டுமுட்டுச் சாமான்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.)

2011-ல் ஒசாமா கொல்லப்பட்ட சம்பவத்தின் உண்மைப் பின்னணியும் அதில் கேப்டனின் தொடர்பும்தான் கதை.

ஓப்பனிங்ல அமெரிக்க அதிபர் ஆன ஒபாமா பிளாக் ஹவுஸ்ல (அதாங்க ரகசிய மீட்டிங் நடக்கும் இடம்) நடக்கிற மீட்டிங்கில் ''ஒசாமா பின்லேடனை ஒழிக்கணும். அதுக்குப் பொருத்தமான போலீஸ் அதிகாரி எந்த நாட்டுல, உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரி, சொல்லுங்க'' என்று கேட்கிறார். எல்லோரும் மௌனமாய் இருக்க, தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மட்டும் ''ஏன் இல்லை? எங்க ஊர்ல கேப்டன் பிளாக்னு ஒரு போலீஸ் அதிகாரி இருக்கார்''னு சொல்றாரு.

அடுத்த சீனே 10 ஃப்ளைட் வரிசையாகப் பறந்து வருது. அத்தனையும் சிவப்பு கலரு. ஆனா, நடுவில வருது பாருங்க, ஒரு கருப்பு ஃப்ளைட். அதுல இருந்து அசால்ட்டா இறங்குறார் கேப்டன். ''ஐ ஆஃப் த கில் ஆஃப் த ஒசாமா. யு ஆஃப் த டோன்ட் ஆஃப் த வொரி ஆஃப் த ஒபாமா!''னு  பேசி அசத்துறார். ஒசாமா பாகிஸ்தானில் இருப்பது கேப்டனுக்குத் தெரிய வருகிறது. இனிமேதான் கிளைமாக்ஸ். மனசைத் தேத்திக்குங்க.

லெஃப்ட்டில் கால் தூக்கி அடிப்பதற்கு வசதியாக ஒரு பேன்ட், தலையில் பேட்டரி லைட் வித் கேமரா உடன் பாகிஸ்தானுக்குக் கிளம்புகிறார் கேப்டன். 'ஹெலிகாப்டர்ல போறவரே சின்னக் கவுண்டரே... உமக்குச் சுத்திப் போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே’னு சாங் முடிஞ்சதும் கேப்டன் ஒசாமா வீட்டுல ஹெலிகாப்டரை லேண்ட் பண்றார். கேப்டன் டீமுக்கும் ஒசாமா டீமுக்கும் துப்பாக்கிச் சண்டை நடக்குது. வழக்கம்போல ஒரு புல்லட் கூட கேப்டன் மேல படலை. ஒரு புல்லட் ஸ்லோமோஷனில் வந்து சேரும் இடைவெளியில் சட்டசபைக்கே போய் ஒரு கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்து ஆபரேஷனில் இணைந்துகொள்கிறார் கேப்டன். இந்த பவரைப் பார்த்துப் பதறிப்போன பின்லேடன், மூன்றாவது மாடிக்குப் போய், மூன்றாவது மனைவியின் பின்னால் ஒளிந்துகொள்கிறார். ஆனாலும் விடாமல் துரத்தும் கேப்டன், ''ஏ ஒபாமா, நீ எட்டாவது படிக்கும்போது ஸ்கூலில வாங்குன மார்க் எட்டு, உனக்கு இருக்கிற ஒய்ஃப் மொத்தம் நாலு, உங்க இயக்கத்துல இருக்கிறவங்க 63,064, உன் தாடியில இருக்கிற முடியோட எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 36'' என்று புள்ளிவிவரங்களைப் போட்டுப் பொளக்க, ''இதுக்கு புல்லட்டாலேயே சுட்டிருக்கலாமே கேப்டன்''னு சொல்லி ஒசாமா மாடியில இருந்து குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கிறார். ஆனாலும் விடாம டுமீல், டுமீல், டுமீல்னு துப்பாக்கியால சுடுற கேப்டன், ''மொத்தம் சுட்டது மூணு டுமீல். என் துப்பாக்கியில இருந்த தோட்டாவோட எண்ணிக்கை ஆறு''னு சொல்றார் கண் சிவக்க.

இதை எல்லாம் கேப்டன் தலையில கட்டியிருக்கிற கேமரா மூலமா வெள்ளை மாளிகையில இருந்து பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் ஒபாமா. திடீர்னு 10 தீவிரவாதிகள் கேப்டனைச் சுத்தி ரவுண்ட்-அப் பண்ணிடுறாங்க. கேப்டன் துப்பாக்கியை எடுத்துச் சுட டிரை பண்றார். பட், குண்டு தீர்ந்துடுது. (ஒபாமா, பதட்டத்துல சேர் நுனிக்கு வந்துடுறார்). வேற வழி இல்லாம சரணடையறார் நம்ம கேப்டன்.

தீவிரவாதிங்க அவரைக் கொல்றதுன்னு முடிவு பண்றாங்க. எப்பவும்போல ''உன்னோட கடைசி ஆசை என்ன?''னு கேட்குறாங்க. ''இந்தியாவோட தேசிய கீதத்தைக் கேட்டுக்கிட்டே சாகணும்கிறதுதான் என் கடைசி ஆசை''னு சொல்றார் கேப்டன். அவரோட செல்போன்ல இருந்து தேசியகீதத்தைத் தேடிப் பிடிச்சு பிளே பண்றான் ஒரு தீவிரவாதி. ஆனா, கை தவறுதலா வேற ஒரு மியூசிக்கைப் போட்டுடறான். அது...ஹாரிஸ் ஜெயராஜ் அடுத்த படத்துக்குப் போடறதுக்காக நெட்ல இருந்து சுட்டு வெச்சிருந்த டியூன். ஆனா மக்களே, ஹாரிஸ் ஜெயராஜுக்குத் தெரியாது, அதான் ஆப்கானிஸ்தானோட தேசியகீதம்னு.

ஆப்கன் தேசிய கீதத்தைக் கேட்டதும் ஆல் தீவிரவாதிகள் அலெர்ட் ஆகி அட்டென்ஷன்ல நிக்கிறாங்க. கீழே கிடந்த துப்பாக் கியை எடுத்து 'டுமீல் டுமீல்’னு சுடறார் கேப்டன். 'இது முடிவல்ல, அடுத்த ஆபரேஷனின் ஆரம்பம்’னு டைட்டில் கார்டோட படம் முடியுது.

அனேகமா, 2014 பிப்ரவரி 31 அன்னைக்குப் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகும்னும் பிப்ரவரி 30 அன்னைக்கு கேப்டன் டி.வி-யில ரிலீஸ் ஆகும்னும் சொல்றாங்க.

ஏன், ஏன்ன்ன் அழுறீங்க, அழக் கூடாது மக்களே!

-ச.காளிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்