'எல்லோரும் தாழ்வான இடத்தை நோக்கி ஓடுங்க!'' | அர்னால்டு, ஜாக்கிசான், மிஷன் இம்பாஸிபிள்- 2, ஹாலிவுட்

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (13/08/2013)

கடைசி தொடர்பு:13:57 (13/08/2013)

'எல்லோரும் தாழ்வான இடத்தை நோக்கி ஓடுங்க!''

ர்னால்டையும் ஜாக்கிசானையும் சென்னைத் தமிழிலும் கொங்குத் தமிழிலும் பேசவைத்த ப‌யலுக யாரு? நம்ம பயலுகதேனே! ஆங்கிலப் படங்களைப் புரியாமல் பார்க்கும் கூட்டத்துக்காகத்தான் கவுண்டமணி ஒரு படத்தில் இப்படிச் சொல்வார்: ''அது ரொம்ப சிம்பிள். எல்லோரும் சிரிக்கிறப்போ நாமளும் சிரிக்கணும்... எல்லோரும் கைதட்டுறப்போ கைதட்டணும்... எல்லோரும் கிளம்ப‌றப்போ நாமளும் கிளம்பிரணும்" தமிழில் முதன்முதலில் டப்பிங் கொடுத்த அந்தப் புண்ணியாத்மா யார்னுதான் தெரியலை பாஸ். இதோ நான் பார்த்து ரசித்த ஹாலிவுட் படங்களின் தமிழ் டப்பிங் அட்ராசிட்டிகள்!

 

'மிஷன் இம்பாஸிபிள்- 2’ தமிழில் பார்த்திருக்கீங்களா? நம்ம டாம் க்ரூஸ்,  'மாற்றான்’ சூர்யா, 'அலெக்ஸ் பாண்டியன்’ கார்த்திக்கெல்லாம் அகில உலக‌ முன்னோடி. உலகையே அழிக்கக் காத்திருக்கும் கைமைரா கிருமியை உற்பத்தி செய்யும் ரஷ்ய டாக்டர் ஒருவர் அதை ஒழிக்கும் 'பெலோரோஃபோன்' என்ற மருந்தையும் கண்டுபிடித்து வியாபாரத்துக்காக வைத்திருப்பார். தீங்கிழைக்கும் அந்த வைரஸ் கிருமிகளைத் தனியரு மனிதனாக அழித்தொழித்து அந்த மருந்தையும் மீட்டுக்கொண்டு வந்து உலகை அழிவிலிருந்து காப்பார் டாம். அந்த சயின்டிஸ்ட் வில்லனுக்குக் குரல் கொடுத்திருப்பது, 'ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்தேங்க்கா’ என 'கரகாட்டக்காரன்’ படத்தில் காந்திமதியிடம் நெகிழ்ச்சிக் கண்ணீருடன் பேசும் நம் சண்முகசுந்தரமேதான். கொஞ்சம் அவர் வாய்ஸில் இந்த டயலாக்கை கற்பனை பண்ணிப்பாருங்க பார்ப்போம்... ''உலகையே அழிக்கும் கைமைரா கிருமியை நாந்தான் கண்டுபிடிச்சேன். அதுல இருந்து தப்பிக்க இந்த பெலொரோஃபோனையும் நாந்தான் கண்டுபிடிச்சேன். இந்தக் கிருமி உடலில் பரவுனா, கொஞ்சங்கொஞ்சமா உடல் உறுப்புகள் செயல் இழந்து ரத்தம் கக்கிச் சாவாங்க" இது எப்டி இருக்கு?

'ஜுராஸிக் பார்க்’ படத்தில் சிவனேனு இருக்கும் டைனோஸர்களைப் பக்கத்துல போய் போட்டோ பிடிக்கிறேன், ஆராய்ச்சி பண்றேன்னு போய் அது கோபமாகித் தாக்க வரும்போது , ''ஓடுங்க அதோட குட்டி நம்மைத் தாக்க வருது" என அலறியடித்து ஓடி வருவர்கள். இந்த டயலாக் போன வாரம் பார்த்த ஒரு குரங்கு படத்திலயும் அப்படியே இருக்கு பாஸ். அண்மையில் பார்த்த ஒரு முதலைப் படத்தில் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் பக்கத்துல போய், ''அது கோபமா இருக்குனு நான் நினைக்கிறேன்" எனச் சொல்வார் ஒரு தொப்பை சயின்டிஸ்ட். அது படக்குனு லவக்கிடும் ஆளை. ஏன்டா நடுராத்திரியில போய் சுடுகாட்டுல உட்கார்ந்துக்கிறீங்கனு கேட்கத் தோணும் நமக்கு!

ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்றில், ''மிஸ்டர் ஜேம்ஸ்! நீங்க பல ஊரு தண்ணியக் குடிச்சு வளர்ந்த ஆளுங்குறது எனக்கு நல்லாவே தெரியும்" எனக் கட்டிலில் வீழ்த்த‌ கொக்கிப்போடுவார் ஒரு காந்தக் கண்ணழகி (அடடடா... கவிஞன்டா)

'ஷாங்காய் தளபதி’ படத்தில் ஜாக்கிசானோடு மல்லுக்கு நிற்கும் கௌபாய் ஒருவன், 'எலே நாயி... ஆக்கங்கெட்ட சவத்த மூதி' என நெல்லைத் தமிழில் பேசி சிரிக்கவைப்பான். 'ரம்பிள் இன் த பிராங்க்ஸ்'  படத்தில் சண்டைபோடும் ஜாக்கிக்கு, 'சூப்பர் ஸ்டார் 'ராஜாதி ராஜா’ படத்துல பண்ணின ஸ்டைல் போல 'கண்ணா... இப்டிச்சூடு’ என்பார்.  அண்மையில் விஜய் டி.வி-யில் ஒரு பழைய ஜெட்லீ படத்தை ஒளிபரப்பினார்கள். சீரியஸான ஒரு காட்சியில் அவர் வில்லன்களைப் பார்த்து செம பன்ச் கொடுப்பார், ''வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்கே தோத்தவன் ஜெயிப்பான். ஜெயிச்சவனும் ஒருநாள் தோப்பான்"னு ஜாக்கிசானையே போலீஸ் ஸ்டோரி கடைசி பார்ட்டில், ''இந்தத் துப்பாக்கி 'போக்கிரி’ படத்துல விஜய் யூஸ் பண்ணினது" என சொல்லவைத்ததுதான் காமெடியின் உச்சம்!

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படங்களில் நம் ஜானி டெப் பேசும் சென்னை செந்தமிழ் செம காமெடி... ''இப்ப என்னான்றே...?, தட்னேன் தாவாந்துருவே, பூட்ட கேசுப்பா, நைனா நம்ம கைல வச்சுக்காதே, பின்னிப் பெடலெடு மாமே, ஷோக்கா சொன்னே நைனா, நாரப்பயலே நார் நாராக் கீச்சிடுவேன்டா, போக்கத்தப் பயலே போய்டு, நம்ம கைல ராங்கு பண்ணாதே ராங்காப் பூடும்" என அதிரிபுதிரி டயலாக்குகளால் தோரணம் கட்டுவார். 'அடங்கொக்கமக்கா' என சொல்லத் தோன்றும் நமக்கு!

இப்படில்லாம் டயலாக் எழுதி நம் மனசுக்கும் புத்திக்கும் ஹாலிவுட் படங்களை நெருக்கமாக்குனதும் ஒருவகையில கரெக்ட்டுதான் பாஸ். இல்லையா பின்னே? முதன்முதலாக ஆங்கிலப் படத்தைப் பார்த்து கண்ணீருடன் தியேட்டரைவிட்டு வெளியே வந்த‌ என் கல்லூரி நண்பன் பந்தல்குடி பிரபாகரன் ஞாபகம் வருகிறது. 'டைட்டானிக்’ படத்தை முழுக்க முழுக்க‌ ஆங்கிலத்தில் பார்த்துவிட்டு நெகிழ்ந்துபோன அவன் ஹாஸ்டலுக்குத் திரும்பும் போது இப்படிச் சொன்னான், ''செம டச்சிங் லவ் ஸ்டோரிடா மாப்ளே. இப்படி ஒரு காதல் காவியத்தை நான் பார்த்ததே இல்லை. எல்லாமே புரியுது மாப்ளே. ஆனா அப்பப்போ நடுநடுவுல ஒரு வயசான பாட்டியை சம்பந்தமே இல்லாம‌ காட்டுறாய்ங்களே... அதுதான் யார்னே  எனக்குப் புரியவே இல்லை" என்றான் செம சீரியஸாக!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்