“உதய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன்!”

''வாய்ப்புகளின் தேசம் சென்னை. தன்னை நம்பி வர்றவங்களைக் கைவிடாது சென்னை. அப்படி ஒரு நம்பிக்கையோட தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வர்ற  ஹீரோவும், லண்டன்ல இருந்து சென்னைக்கு வர்ற ஹீரோயினும் சந்திக்கிறாங்க. மோதல்-காதல்-காமெடி... இதுதான் 'வணக்கம் சென்னை’. படத்தில் கதையை ஆரம்பிக் கிறதும், முடிச்சுவைக்கிறதும் சந்தானம் தான்!''-உற்சாகத்துடன் சிரிக்கிறார் கிருத்திகா உதயநிதி.

''சினிமா இயக்குநர்... பெரிய பொறுப்பாச்சே!''

''நல்லாத் தெரியும். அதனாலதான் குறும்படங்கள் இயக்கிய பிறகும், இந்த ஸ்க்ரிப்ட்டைக் கையில்வைச்சுக்கிட்டு ரொம்ப நாள் சும்மாவே இருந்தேன். ஒரு நாள் 'ஓ.கே. ஓ.கே.’ ராஜேஷ்கிட்ட ஸ்க்ரிப்ட்டை கொடுத்துப் படிக்கச் சொன்னேன். திட்டுவார்னுதான் நினைச்சேன். ஆனா, 'ரொம்ப நல்லா இருக்கு. நீங்களே டைரக்ட் பண்ணுங்க’னு உற்சாகப்படுத்தினார்!''

''ஆல் தி பெஸ்ட்... ஆனா, உங்க வீட்லயே ஒரு ஹீரோ இருக்காரே! உங்க படத்துக்கு ஏன் சிவா?''

''உதய்-யைச் சொல்றீங்களா? 'இது கதிர்வேலன் காதல்’ அவருக்கு ரெண்டாவது படம்.பிரபல இயக்குநர் படத்துல நடிக்கணும்னு அவருக்கு ஆசை. நான் முதல் படம் பண்றேன் என் படத்தோட ஹீரோவுக்கு காமெடியான கேரக்டர். அதுக்கு சிவாதான் பொருத்தமா இருந்தார். அதனால முதல் படத்துல என்னை நிரூபிச்சுட்டு, அடுத்த படத்துல உதய்யை நடிக்கவைக்கலாம்னு இருக்கேன். ஆனா, என் படத்துக்கு உதய்தான் தயாரிப்பாளர். மத்த எல்லாரையும் சமாளிச்சுட்டேன். ஆனா, அவர்கிட்ட புராஜெக்ட்டுக்கு ஓ.கே. வாங்கத்தான் சிரமப்பட்டேன். 'ஒரு படம் இயக்குவதில் நிறைய சிரமம் இருக்கு. குழந்தை களையும் பார்த்துக்கணும்; சினிமாவையும் சின்சியராப் பண்ணணும். ரெண்டு பொறுப்பு கள்லேயும் ஜெயிக்க முடியுமா’?னு கேட்டார். என் ஆர்வத்தையும் ஹோம்வொர்க்கையும்  கவனிச்சுட்டே இருந்தார். அப்புறம் ஸ்க்ரிப்ட்ல கொஞ்சம் மாத்தச் சொன்னார். தினம் தினம் எனக்கு நிறைய டெஸ்ட்வெச்சு திருப்தியான பிறகே, இந்த புராஜெக்ட்டுக்கு ஓ.கே. சொன்னார்!''

''நடிகர் உதயநிதி... கமென்ட் பண்ணுங்க!''  

''அரசியல், அதிரடி, ஆக்ஷன்னு எந்த பிளானும் இல்லாம, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் உதய் பண்றது எனக்குப் பிடிக்கும்.  'நடிக்கப் போறேன்’னு அவர் சொன்னப்போ, நான்கூட 'அவசியம் நடிக்கப் போகணுமா? பார்த்துக்கங்க’னு சொன்னேன். 'ட்ரை பண்ணிப் பார்க்கிறேனே’னு சொன்னார். இப்போ அவரோட நம்பிக்கை, உழைப்பு, ஆர்வம், நேர்மைதான் அவருக்கு ஒரு மதிப் பான இடத்தைக் கொடுத்திருக்கு. 'இப்போ நடிக்கிறார்... அடுத்து அரசியலா?’னு அவருக்கு நெருக்கமான நண்பர்கள்கூட கேட்கிறாங்க. அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார். ஆனா, எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரியலை. உதய் என்ன செஞ்சாலும் அதுக்கு என் சப்போர்ட் கண்டிப்பா உண்டு!''

- க.நாகப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!