Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'திருமதி தமிழ்’ 100 டெரர் டேய்ஸ்!

'சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் கலக்கிய 'திருமதி தமிழ்’ படத்தின் 100-வது நாள் விருது (!) வழங்கும் விழா விளம்பரப் பதாகைகளை சென்னை வீதிகளில் கண்டோம். 'அடடடா. எப்படித்தான் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போமே’ என அந்த போஸ்டர்களை பின்தொடர்ந்தேன்.  

தி.நகரில் இருந்த ஒரு பள்ளி ஆடிட்டோரி யம்.  பட்டு வேட்டி, பட்டு சட்டை என, மாப் பிள்ளை ஜோரில் 'சோலார் ஸ்டார்’ வாசலி லேயே நின்று வரவேற்றுக்கொண்டிருந்தார். அரங்கினுள் நுழைந்தால், மேடையின் இருபுறமும் இரண்டு திரைகளில் 'திருமதி தமிழ்’டிரைலர்கள் 'நான்-ஸ்டாப்’ ஆக ஓடிக் கொண்டிருந்தன. ஆச்சர்யமாக, சுமார் 100 பேர் ரசிகர்களாக அரங்க இருக்கைகளைஆக்கி ரமித்திருந்தனர். 'அட... ராஜகுமாரனைரசிக்க இத்தனை பேர் வந்திருக்கிறார்களே!’  என்று அவர்களை உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் அத்தனை பேர்கையிலும் ஒரு டிக்கெட் பட படத்தது. ஒருவரிடம் விசாரித்தேன்.

''இது என்ன டிக்கெட்?''

''எனக்கு, இந்த பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலதான் வீடு. எங்க வீட்டுக்கு வந்து இந்த டிக்கெட்டைக் கொடுத்து, 'தேவயானி மேடத்தை நேர்ல பார்க்கணும்னா வாங்க’னு சொன்னாங்க. வந்துட்டேன்!''

''இந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா?''

''என்னது... இந்தப் படம் ரிலீஸ் ஆகிருச்சா!''   என்று 'சிவாஜி செத்துட்டாரா’ பாணியில் விசாரித்தார்.

பெரும் ஆரவாரத்துக்கு இடையே மேடையேற காத்துக்கொண்டிருந்தார் ராஜகுமாரன். ஆனால், அதற்கான சமிக்ஞைகள் எதுவும் தென்படாததால், சிறு ஆரவாரம்கூட இல்லாமலே மேடையேறினார்.

''என் செலெக்ஷன் எப்பவுமே கரெக்டா இருக்கும். என் குரு விக்ரமன் சார். என் தயாரிப் பாளர் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி. அடுத்ததா என் வொய்ஃப் தேவயானி!'' என்று அறிவித்துவிட்டு வெட்கப்பட்டு நின்றார். இதற்கு தன் மகள்களுடன் கீழ் வரிசையில் அமர்ந்திருந்த தேவயானியிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.  பிறகும் 'தன் பெருமை’களை அடுக்கிவிட்டு, அப்போது ஓய்ந்திருந்த டிரைலர்களை மீண்டும் இயக்கவைத்தார். ஒருமுறை ஓடி முடிந்ததும் மீண்டும் மீண்டும் அதை இயக்கச் செய்தவர், 'நல்லா கைதட்டுங்க... இல்லைன்னா இங்கே நடக்குறதே வேற’ என்றரீதியில் மிரட்டி கைதட்டல்களைக் குவித்தார். பிறகு, தன் படைப்பின் பெருமைகளைப் பற்றிப் பேச மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளித்தார்.

பொற்கோ கருணாநிதி என்கிற கவிஞர்(!)  மைக் பிடித்து, ''எழுத்தாளர் சுஜாதா இந்நேரம் இருந்திருந்தால் தேவயானியை வாழ்த்தி மகுடம் சூட்டியிருப்பார். நம் தமிழர்கள் வீட்டுக்கெல்லாம் கிடைத்த குத்துவிளக்கு தேவயானி'' என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார். மேடையில் வீற்றிருந்த ரமேஷ் கண்ணா, சாருஹாசன், விக்ரமன் உள்ளிட்ட பிரபலங்கள் ஒருகட்டத்துக்குப் பிறகு பொறுமை இழந்துநுழை வாயிலை எட்டி எட்டிப் பார்க்க, கவிஞர் பொற்கோவிடமிருந்து வலுக்கட்டாயமாக மைக்கைப் பிடுங்கினார் ராஜகுமாரன். ஆனால், கொடுமையிலும் கொடுமையாக அதற்குப் பிறகு மைக் பிடித்த அனைவருமே தங்களைப் பற்றிய வரலாற்றுப் பெருமைகளை அளந்துவிட்டு, ஏதோ போனால்போகிறதென்று கடைசியாக சில வார்த்தைகள் ராஜகுமாரனைப் பாராட்டிய பிறகு,மைக்கை அவரிடமே பறிகொடுத்தார்கள். ஒரே ஷீல்டை பலருக்கும் மாற்றி மாற்றிக்கொடுப் பது, இரண்டே இரண்டு சந்தன மாலைகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் மாற்றிப் போட்டு, சா... பூ... த்ரீ விளையாடுவது போன்ற பல்சுவை காட்சிகளும் அரங்கேறின.

செல்வம் என்கிற விநியோகஸ்தருக்கு ஷீல்டு கொடுத்த ராஜகுமாரன், ''இவர்தான், 'நீங்க எந்தப் படம் எடுத்தாலும் அதை நூறு நாள் ஓட்டிக் காட்டுறேன்’னு என்கிட்ட சொன்னார்'' என்று கூறிவிட்டுக் கண்கலங்கத் தொடங்கினார். அந்த செல்வத்தை நிகழ்ச்சி முடிந்ததும் தேடினோம். ஆள் எஸ்கேப்! ஒப்பனையாளருக்கான விருதை பாரி என்பவருக்கு அளித்துவிட்டு, ''பேஸிக் மேக்-அப் மட்டும்தான் இவர். என் ஓவர் மேக்-அப்பை ஆந்திராவுக்கு போய் நானே ஸ்பெஷலா போட்டுக்கிட்டேன்!'' என்று பெருமையடித்துக்கொண்டார் 'பவுடர் ஸ்டார்’. மேடையில் நடைபெற்ற இந்தக் களேபேரங்களால் பல பிரபலங்கள் உஷாராக சிறப்புரையாற்றாமல் ஒதுங்கிக்கொள்ள, கிடைத்த அந்த கேப்பிலும் துள்ளத் துடிக்க, ரத்தம் தெறிக்க கிடா வெட்டினார் சோலார் ஸ்டார்.

ஒருவழியாக அவர் பேச்சு முடிந்து, 'திருமதி தமிழ்’ 100-வது நாள் சிறப்பு விழா  நிறைவடை வதற்கான அறிகுறிகள் தென்பட்ட சமயம்,   துணை நடிகர் ஒருவர் எங்கிருந்தோ ஓடிவந்து மைக்கைப் பிடுங்கி, 'மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடிக் கொல்ல ஆரம்பிக்க... பொறுமை இழந்து அரங்க நிர்வாகிகளே விளக்குகளை சுவிட்ச்-ஆஃப் செய்து கூட்டத்தினரைக் காப்பாற்றினர்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் விடாமல் துரத்தியடித்தது மேடையில் ராஜகுமாரன் அறிவித்த அந்த வாசகம்..

'நெக்ஸ்ட்... 150-வது நாள் விழாவில் மீட் பண்றேன்!’

- க.ராஜீவ் காந்தி, படங்கள்: மு.உ.ஷமீம் ஃபகாத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement