'தலைவா' - இன்று உரிமை; நாளை ரிலீஸ் - அன்பழகன் அதிரடி!

விஜய் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் படம் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 'தலைவா' படத்திற்கு என்னதான் பிரச்னை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

'விஸ்வரூபம்' படத்தினைப் போன்று அரசாங்கம் படத்தினை வெளியிடத் தடை என்று அறிவிக்காத நிலையில், 'தலைவா'விற்கு என்ன பிரச்னை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

இந்நிலையில், அன்பு பிக்சர்ஸ் நிறுவனரும், தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், தனது டிவிட்டர் இணையத்தில், " 'தலைவா' படத்தினை எங்களுக்கு (அன்பு பிக்சர்ஸ்) கொடுத்தால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயார்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சந்தோஷம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அன்பழகனிடம் பேசினோம். " 'ஆதிபகவன்' படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆகையால் தான் எனது டிவிட்டர் இணையத்தில் 'தலைவா' படத்தினை எங்களுக்குக் கொடுத்தால் வெளியிடத் தயார் என்று கூறினேன்.

வெளிநாடு, வெளிமாநிலங்கள் என படம் வெளியானாலும், எனக்குக் கவலையில்லை. இப்போதெல்லாம் படம் வெளியான அன்று, படத்தின் சி.டி. பர்மா பஜாரில் கிடைக்கிறது. எனவே, இணையத்தில் வெளியானது பற்றியும் நான் கவலைப்படவில்லை. 'தலைவா' மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இன்று காலை முதலே, எனக்குத் தெரிந்த ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர்களிடமும் பேசி வருகிறேன். அவர்களும் 'கண்டிப்பாக வாங்குங்கள், வெளியிடத் தயாராக இருக்கிறோம்' என்று தெரிவித்து வருகிறார்கள். ஆகையால், எனக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

அரசாங்கம் படத்திற்கு எவ்வித தடையையும் விதிக்கவில்லை. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களும் படத்தினை வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். பிறகு ஏன் நான் கவலைப்பட வேண்டும்? 'தலைவா' வெளியீட்டு உரிமை இப்போது எனக்கு வந்தால் கூட படத்தை நாளை காலை ரிலீஸ் செய்ய முடியும்.

அதற்காக நான் வேந்தர் மூவிஸுக்குப் போட்டியாகச் செயல்படுகிறேன் என்றில்லை. அவர்களால் முடியவில்லை என்றால் மட்டுமே கொடுங்கள், நான் வெளியிடுகிறேன் என்றுதானே கூறுகிறேன்.

ஒரு சில நபர்கள் விஜய் கால்ஷீட் தேதிக்காக பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். விஜய்யிடம் கால்ஷீட் குறித்து இதுவரை நான் பேசியதில்லை. நான் வேறு ஒரு முன்னணி இயக்குனரிடம் பேசி வருகிறேன். அவருடைய பணிகள் முடிந்தவுடன், எனது அன்பு பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் செய்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்போது சொல்கிறேன்... நான் யாருடனும் போட்டி போடவில்லை. தயாரிப்பாளர் என்கிற முறையில் உதவி செய்கிறேன். என்னிடம் படத்தினைக் கொடுத்தால், நாளை வெளியிட என்னால் முடியும்" என்று அடித்துச் சொல்கிறார் அன்பழகன்.

'தலைவா' படத்தின் தயாரிப்பாளர் என்ன முடிவு செய்ய இருக்கிறாரோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!