Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரிப்பு ராட்சஸி!

'' 'தலைவா’ படத்துக்குத்தான் நான் முதல்முறையா தமிழ் படத்தில் என் சொந்தக் குரல்ல பேசியிருக்கேன். சிட்னியில் நானும் விஜய் சாரும் நடிக்கிற மாதிரி நீளமான ஒரு காட்சி. அந்தக் காட்சியை ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணினேன். இயக்குநர் விஜய்ல ஆரம்பிச்சு எல்லாரும் பாராட்டினாங்க. எனக்குப் பயங்கர சந்தோஷம். 'நான் சரியா தமிழ் பேசினேனா?’னு கேட்டதும், 'என்னது... நீங்க பேசினது தமிழா? எனக்கு லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு’னு விஜய் சார் தன் நெஞ்சுல கை வைச்சுட்டார். நீங்களே சொல்லுங்க... நான் நல்லாத்தானே தமிழ் பேசுறேன்?'' - அமலா பால் கேட்கும்போது 'ஆமாம்’ என்றுதானே சொல்ல முடியும்.

ஜெயம் ரவியுடன் 'நிமிர்ந்து நில்’, தனுஷ§டன் ஒரு படம்; மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு படம் என தென்னிந்தியத் திரையுலகில் விறுவிறு வலம் வருபவரிடம் பேசினேன்...

''ஒண்ணு தெரியுமா... நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடி ஸ்ரீதேவி, ஷோபனா, ஐஸ்வர்யாராய்... இவங்க மூணு பேரும்தான் என் ஆதர்சம். ஒரு விமானப் பயணத்தில் ஷோபனா மேடம் என் பக்கத்தில் உட்காந்திருந்தாங்க. கடவுளே என் பக்கத்துல வந்து உட்கார்ந்த மாதிரி இருந்தது. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். 'மைனா’வில் நான் நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது!''

''முதல் சம்பளம்..?''

''ஆயிரம் ரூபாய்! பத்தாம் வகுப்பு மாணவியா இருந்தப்ப, ஒரு மியூஸிக் ஆல்பத்தில் பாடினேன். அதுக்காக வாங்கின சம்பளம். 'இவ்வளவு பணத்தை என்ன பண்றது?’னு தெரியாம, பெருமையில் தலைகால் புரியாம சுத்திட்டு இருந்தேன்!''

''உங்கள் சம்பளத்தில் முதலில் வாங்கிய சொத்து?''

''கார். 18 வயசுல லைசென்ஸ் எடுத்த அடுத்த நாளே ஹூண்டாய் ஐ20 கார் வாங்கினேன். ஆனா, கார் விலையில் பாதிதான் என் பணம். மீதி, என் அப்பா தந்தது!''

''மறக்க முடியாத பரிசு?''

''சமீபத்தில் என் உயிர்த் தோழி கென்ஷாவுக்குக் கல்யாணம் நடந்தது. என் ஆடை வடிவமைப்பாளரை வைச்சு மணமக்களுக்கு கல்யாண ஆடை வடிவமைச்சு பரிசாக் கொடுத்தேன். 'பிரமாதமா இருக்கு’னு எல்லாரும் பாராட்டினாங்க. பரிசு வாங்குவதைவிட கொடுப்பதில்தான் ரொம்ப சந்தோஷம்!''

''அழகுக் குறிப்பு ஒண்ணு சொல்லுங்க..!''

''சந்தோஷமா இருந்தாலே அழகா இருப்போம். அதனாலேயே சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் பெரிசா சிரிச்சுடுவேன். சிரிப்பைக் காதலிக்கிறேன்னே சொல்லலாம். 'நேத்து நீ வராம வகுப்பே களைகட்டலை’னு என் பள்ளித் தோழிகள் சொல்வாங்க. அந்த அளவுக்கு நான் சிரிப்பு ராட்சஸியா இருந்தேன். என் அழகின் ரகசியம் எப்பவுமே மகிழ்ச்சிதான்!''

''உங்களுடன் நடிச்ச ஹீரோயின்களில் உங்ககூட இப்பவும் நட்பில் இருக்கிறவங்க யார்?''  

''எல்லாரும்தான்! காஜல், அனுஷ்கா ரெண்டு பேருமே எனக்கு சீனியர்ஸ். படப்பிடிப்புத் தளத்தில் என்னை எப்பவும் 'பேபி... பேபி...’னு குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க. என்கூட நடிக்கிறவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறவ நான். அதனால அவங்க பேசலைனாக்கூட நானே போய் பேசி, அவங்களோடு நட்பாகிருவேன். 'வேட்டை’ படத்துல எனக்கு அக்காவா நடிச்ச சமீரா, இப்போ எனக்கு கிட்டத்தட்ட நிஜ அக்கா!''

''சமீபத்திய பாராட்டு...''

''ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ரொம்ப கண்டிப்பான வாத்தியார். 'தலைவா’, நான் அவருடன் வேலை பார்த்த ஐந்தாவது படம். இதுக்கு முன்னாடி அவர் என்னை ஒரு வார்த்தைகூட பாராட்டினது இல்லை. ஆனா, 'தலைவா’ பார்த்துட்டு என்கிட்ட பேசினார். 'நல்லா தமிழ் பேசியிருக்க; நல்லாவும் நடிச்சிருக்க. நிச்சயம் உனக்கு நல்ல பேர் கிடைக்கும்’னு சொன்னார். எனக்கு அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு!''

''ஹனிமூன் எப்போ?''

''ஹலோ... படப்பிடிப்புக்கு அடுத்த லொகேஷனே எங்கேனு தெரியாதவள்கிட்ட, 'ஹனிமூன் எங்கே’னு கேட்டா, நான் என்ன சொல்றது?''

- ம.கா.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்