"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க!” | விடிவி கணேஷ், பவர் ஸ்டார், இங்க என்ன சொல்லுது, சிம்பு, மீரா ஜாஸ்மின், சந்தானம்

வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (31/08/2013)

கடைசி தொடர்பு:13:58 (31/08/2013)

"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க!”

'' 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படத்தை என் பேனர்ல பண்ணச்சொன்னார் சந்தானம். 'டைரக்டர் புதுசு, ஹீரோ புதுசு’னு பயந்துட் டேன். பிறகு, அவரே எடுத்துப் பண்ணினார். எடிட்டிங், இசை, புரமோஷன்னு அவர் இறங்கி வேலை பார்த்ததுதான் நல்ல ரிசல்ட்டுக்குக் காரணம். 'இதைத்தானே நம்மளைப் பண்ணச் சொன்னாரு... நாம ஏன் செய்யலை?’னு யோசனைல இருந்தப்ப பிடிச்சதுதான் இந்த ஸ்கிரிப்ட்.

இது 40 வயசு பேச்சுலரோட கதை. பயபுள்ள எந்த சுகத்தையும் அனுபவிக்காதவன். அன்னைக்கு சம்பாதிக்கிறதை அன்னைக்கே செலவு பண்றவன். அவன் வாழ்க்கையில ஒரு சம்பவம். அதனால் அவன் என்னல்லாம் கஷ்டப்படுறான். ஒரு மனுஷனால இந்தளவுக்கு கஷ்டப்பட முடியுமானு, அதையே கலகலனு சொல்ற கதை. உண்மையைச் சொல்லணும்னா இது என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம். ஆக, இந்த காமெடியன், ஹீரோ ஆனதுக்குக் காரணமே சந்தானம்தான். நீங்க திட்டுறதுனாலும் பாராட்டுறதுனாலும் அவர்கிட்ட பேசிக்கங்க!'' - கலகலவெனப் பேசுகிறார் கணேஷ்.

  'இங்க என்ன சொல்லுது?’ படம் மூலம் ஹீரோ, திரைக்கதை ஆசிரியர் என இரட்டைக் குதிரை ஏறியிருக்கிறார் 'விடிவி’ கணேஷ்.

''படத் தலைப்பைக்கூட சிரமமே படாமல், நீங்க நடிச்ச படத்துல இருந்தே சுட்டுட்டீங்களா?''

''அட... அதை ஏன் கேக்கிறீங்க? படத்துக்கு எல்லாமே சிக்கிருச்சு. ஆனா, டைட்டில்  மட்டும் கிடைக்கலை. ஒருநாள் சாந்தோம் சர்ச்கிட்ட கார்ல போயிட்டு இருந்தேன். டான் பாஸ்கோ ஸ்கூல் வாசல்ல 15 வயசு பையன் ஒருத்தன் என்னைப் பார்த்துட்டு, காரைத் துரத்திட்டு ஓடி வந்தான். அவனை ஓடவைக்க வேணாமேனு காரை ஓரங்கட்டி 'என்னடா தம்பி?’னு கேட்டேன். அவன் மூச்சு வாங்க நெஞ்சுல கைவெச்சுட்டு, 'இங்க என்ன சொல்லுது’ன்னான். எனக்கு சர்ப்ரைஸ். இதை எப்பிடி மறந்தோம்னு அப்படியே யு-டர்ன் போட்டு ஃபிலிம் சேம்பருக்கு வண்டியை விட்டேன். 'இங்க என்ன சொல்லுது’ டைட்டிலை இப்படித்தான் பதிவு பண்னேன்!''

''ஹீரோயின் மீரா ஜாஸ்மின்... அவங்க மேல உங்களுக்கு எதுவும் கோவமா?''

'' 'உனக்கெல்லாம் மீரா ஜாஸ்மின் ஜோடியா?’னு கலாய்க்கிறீங்களாக்கும்!  'அவங்க ஒரு பொம்பளை பிரகாஷ்ராஜ் ஆச்சே’னு சிலர் என்னைப் பயமுறுத்தினாங்க. 'எனக்கு பிரகாஷ்ராஜே நல்ல நண்பர் தான். அப்படினா, இவங்களும் ஈஸியா மேட்ச் ஆகிடுவாங்க’னு சொன்னேன். கொச்சின் போய் அவங்ககிட்ட ஒன் லைன் சொன்னப்ப, 'ரொம்பப் பிடிச்சிருக்கு. நிச்சயம் பண்றேன்’னு உடனே ஓ.கே. சொல்லிட்டாங்க. ஆஃப்டர் எ லாங் கேப், பிரமாதப் படுத்தி இருக்காங்க!''

''படத்துல சம்பளமே வாங்காம சிம்புவை நடிக்கவெச்சுட்டீங்க... அவ்வளவு பிஸியிலயும் சந்தானம் கால்ஷீட் பிடிச்சுட்டீங்க. நீங்க ரொம்ப விவரமானவரா பாஸ்?''

''விவரம் எல்லாம் இல்லை. நல்ல நண்பன். அவ்வளவுதான்! சிம்புவும் நானும் ஈஸியா ஜெல் ஆவோம். அவர்கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்கலாம். பக்குவமான மனுஷன். சந்தானம் என் லைஃப் டைம்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃபிரெண்ட். அவர்கிட்ட பிடிச்சது கடுமையான உழைப்பு. அது என்கிட்ட கொஞ்சம் கம்மிதான். அவங்க ரெண்டு பேருமே எதையும் ஃபில்டர் பண்ணிப் பேச மாட்டாங்க. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான்... அதான் எங்களுக்குள்ள இந்த கெமிஸ்ட்ரி!''

 

''ரிஷிகேஷ், கோயில், குளம்னு சுத்திட்டு இருந்த சிம்புவை, காதல்ல இழுத்துவிட்டதே நீங்கதானே?''

''நீங்க இப்படி ஏதாவது கிளப்பிவிட்டு, 'இவர்ட்ட போனா நம்மளையும் லவ்வுல இழுத்துவிட்டுருவார்டா’னு லைன் கட்டி நிக்கப்போறாங்க. ரிலாக்ஸா இருக்கும்போது, 'எங்கேயாவது ஒரு ட்ரிப் போலாமே’னு பேசிட்டு இருந்தோம். அப்படித்தான் ரிஷிகேஷ் போனோம். அதைத்தான் 'ஆன்மிக ட்ரிப்’னு பப்ளிசிட்டி பண்ணிட்டாங்க. நாங்க அங்கெல்லாம் போயிட்டு வந்த அடுத்த வாரமே புயல், மழை, வெள்ளம்னு கோயிலையே காணோம். அதனால இனி எங்கேயும் சேர்ந்து ஜாலி ட்ரிப் போறதா இல்லை!''  

''உங்க கோ ஸ்டார், 'பவர் ஸ்டார்’ உள்ள இருக்காரே, அவரைக் காப்பாத்த நீங்க ஏதாவது மெனக்கெடக்கூடாதா?''

''ஐயையோ அவர்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க. பார்க்கும்போது முகம் ஃபுல்லா சிரிப்பார்... அவ்வளவுதான். நீங்கபாட்டுக்கு 'கோ ஸ்டார், பவர் ஸ்டார், பக்கத்து வீட்டு சூப்பர் ஸ்டார்’னு எதையாவது எழுதிவெச்சுடாதீங்க. ஒரு படத்துக்குப் பிறகு பீக்ல போனவர், அப்படியே டபக்குனு உள்ளே போயிட்டாரு. நமக்கு எதுக்கு தேவையில்லாத வம்புதும்பு!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்