“தேர்தல்ல தோத்தேன்... வாழ்க்கையில ஜெயிச்சேன்!” | கானா பாலா, காசு பணம் துட்டு மணி மணி, நதியா, பிரியாணி, சரஸ்வதி சபதம், உதயம்

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (31/08/2013)

கடைசி தொடர்பு:14:20 (31/08/2013)

“தேர்தல்ல தோத்தேன்... வாழ்க்கையில ஜெயிச்சேன்!”

ப்போது கோடம்பாக்கத்தின் ஹிட் குரல்... கானா பாலாதான். 'நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா..?’ வரை வாய்ப்புக்காக வாசல் பார்த்தவரின் வீட்டில் இப்போது 'காசு, பணம், துட்டு, மணி, மணி’ கொட்ட ஆரம்பித்திருக்கிறது.

புளியந்தோப்பில் இருக்கும் பாலா வீட்டுக்குச் சென்றால், அவரது மனைவி நதியா வரவேற்கிறார். ''இவங்க இதே ஏரியா, சொந்தக்காரங்க வேற... உடனே கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டேன் பிரதர்'' - நதியாவை அறிமுகப்படுத்தும்போது பாலா முகத்தில் அவ்வளவு பிரகாசம்.  

''ரொம்ப நாள் போராட்டத்துக்குப் பலனா 'பிரியாணி’, 'சரஸ்வதி சபதம்’, 'இதற்கத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’னு வாய்ப்புகள் தேடி வருது பிரதர். பெரும்பாலும், நான் பாடிய பாட்டுகளில் எனக்குத் தோணுறதை நான் ராகம் போட்டுப் பாடிடுவேன். அதுக்கு ஏத்த மாதிரி ட்யூனைக் கொஞ்சம் மாத்திப்பாங்க. ஆனா, 'உதயம்’ படத்துல இருந்து ட்யூனுக்கு ஏத்த மாதிரியும் பாட்டு எழுதி பாடிட்டு வர்றேன்.''

''நீங்க சினிமா பார்க்குறது உண்டா?'' என்று நதியாவிடம் கேட்டால், ''முன்னாடி எல்லாம் படம் பார்க்குற பழக்கம் கிடையாது. 'அட்டக்கத்தி’ ஹீரோ தினேஷ§ம் டைரக்டர் ரஞ்சித்தும் வற்புறுத்தினதால, அந்தப் படம் பார்த்தேன். அதுக்கப்புறம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா!’ பார்த்தேன். அதெல்லாம்விட சந்தோஷம்... என் பையன் பர்த்டேவுக்கு சந்தானம் வந்து வாழ்த்து சொன்னார். அதை என்னால மறக்கவே முடியாது!'' என்கிறார்.

''மனசை நெகிழவெச்ச பாராட்டுன்னா, எதைச் சொல்லுவீங்க?''

'' 'காசு... பணம்...’ பாட்டு பயங்கர ஃபீவர் ஆயிடுச்சு. சூர்யா, கார்த்தி சார் அவங்க கலந்துக்கிற நிகழ்ச்சிகள்ல 'எனக்குப் பிடிச்ச பாட்டு’னு சொல்லி இதைப் பாடும்போது சந்தோஷமா இருக்கும்.  சந்தோஷ் நாராயணனின் இசையில முதல்ல அந்தப் பாட்டை பாடும்போது ஹிட் ஆகும்னு நான் சத்தியமா நினைக்கலை. ஷூட்டிங்ல டான்ஸ் பாத்ததுமே இது 'சூப்பர் ஹிட் பாட்டு’னு முடிவு பண்ணிட்டேன்.

இன்னொரு விஷயம் பிரதர். நான் வெறும் பாடகர் மட்டும் இல்லை. பி.எல்., படிச்சிருக்கேன். நேரம் கிடைக்குறப்ப கோர்ட்டுக்குப் போறேன். முதல்ல, லீடிங் லாயர் ஆகணும்னு கனவோட இருந்தேன். சினிமாவில் பிக்கப் ஆனதும் அந்த ஆர்வம் போயிருச்சு. ஆனா, வீடு ரெஜிஸ்ட்ரேஷன், ஸ்கூல், காலேஜ் சம்பந்தமா நோட்ரி பப்ளிக் கையெழுத்துனு யார் வந்து நின்னாலும் உடனே பண்ணிக்கொடுத்துடு«வன். நமக்கு இன்னொரு முகமும் இருக்கு பிரதர். அது அரசியல்வாதி'' என்று சின்ன பிரேக் விடுகிறார் பாலா.

சிரித்தபடி அந்த சஸ்பென்ஸ் உடைக்கிறார் நதியா...

''கவுன்சிலர் எலெக்ஷன்ல ரெண்டு முறை சுயேட்சையா நின்னுருக்கார். முதல் தடவை 200 ஓட்டு வித்தியாசத்துலயும், ரெண்டாவது தடவை 300 ஓட்டு வித்தியாசத்துலேயும் தோத்துட்டார். அதுவும் ஒருவகையில நல்லதுக்குத்தான். முதல்முறை தோத்தப்ப எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. அடுத்த முறை தோத்தப்ப, 'அட்டகத்தி’யில பாட வாய்ப்பு கிடைச்சு ஹிட் ஆனார்'' என்று பாலாவைப் பார்த்து புன்னகைக்கிறார் நதியா.

''இசையமைப்பாளர்கள், பாடகர்கள் இப்போ ஸ்கிரீனில் தலை காட்டுற சீசனாச்சே?'' என்றால் ''கண்டிப்பா எனக்கும் நடிக்கிற ஆசை இருக்கு பிரதர். நல்ல கதைன்னா, ஹீரோவாக்கூட நடிக்க ரெடியா இருக்கேன்.  என்ன நம்ம முகத்துக்கு டெரர், ஆக்ஷன், டூயட், சேஸிங்லாம் நல்லா இருக்காது. முகத்துக்கு ஏத்த கதைன்னா பண்ணலாம்!'' என்றவரை பார்த்து சிரிக்கிறார் நதியா.

''நீங்க பாடுவீங்களா?'' என்று நதியாவிடம் கேட்டால், ''எனக்கு சினிமா பாட்டுலாம் பாடத் தெரியாது. சர்ச்சுல பாடுவேன்'' என்றவர்,  

'உயிரே...
என் உயிரே...
என் உயிரே உம்மைத் துதிப்பேன்.
என் உயிரோடு கலந்தவரே...
என் நினைவோடு இருப்பவரே...’ என்று நெகிழ்ச்சியான குரலில் பாடுகிறார்.

''பிரதர்... சினிமா பாட்டு தவிர சமூக விழிப்பு உணர்வுப் பாடல்களைப் பாடி தனி சி.டி-யா கொண்டுவரப் போறேன்.

 

எவ்வளவு காசு, பணம், புகழ் வந்தாலும் இந்தப் புளியந்தோப்புதான் நம்ம விலாசம் பிரதர். அதேபோல இன்னைக்கும் சாவு வீட்டுக்குப் போய்ப் பாடுறேன். காரணம், இந்த மக்கள் மேல நானும், என் மேல அவங்களும் வெச்சிருக்கிற பிரியம்தான்.

'ஆறு அடி வீடு...
அதுக்குப் பேரு சுடுகாடு...
அங்க போனா திரும்பி வர முடியாது...
கொஞ்சம் நாளானா இருக்கும் இடம் தெரியாது’ ''

என்று ராகமாகப் பாடுகிறார். காந்தக் குரல் புளியந்தோப்பு எங்கும் பரவுகிறது.

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்