இது அங்காளி - பங்காளி கதை! | மதயானைக் கூட்டம், ஜி.வி.பிரகாஷ், விக்ரம் சுகுமாறன், வெற்றிமாறன், ரகுநந்தன், ஆடுகளம்

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (06/09/2013)

கடைசி தொடர்பு:14:21 (06/09/2013)

இது அங்காளி - பங்காளி கதை!

'' 'உன் படத்துக்கு வேற ஒரு இசையமைப்பாளரா? சூப்பர்! திறமையான இளைஞர்கள் சினிமாவுக்குள் வர்றது நல்ல விஷயம்’னு பிரபலங்களே ஆச்சர்யப்பட்டாங்க.  இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்னு தொடர்ந்து புது செட் ஆட்களை என் பேனரில் அறிமுகப்படுத்த ஆசை. அதன் தொடக்கம்தான் 'மதயானைக் கூட்டம்’!'' - 'தயாரிப்பாளர்’ ஆக புரமோஷன் பெற்ற மகிழ்ச்சியில் பேசுகிறார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

''விக்ரம் சுகுமாரன், வெற்றிமாறனின் அசோசியேட். என் நண்பர். 'ஆடுகளம்’ மூலம் மதுரை மண்ணுக்கே நம்மை அழைச்சிட்டுப்போனதில் இவரின் வசனத்துக்கும் பெரிய பங்கு உண்டு'' என்ற ஜி.வி-யைத் தொடர்கிறார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.

''என் சொந்த ஊர் ராமநாதபுரம். பாலு மகேந்திரா சார் அசிஸ்டென்ட். வெற்றி மாறனுடன் 'பொல்லாதவன்’, 'ஆடுகளம்’ படத்தில் வேலை செஞ்சேன்.

மதுரைக்குப் பக்கத்தில் இருந்தாலும் தேனி மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், பேச்சுமொழினு எல்லாமே வேற. அதில் நிறைய விஷயங்கள் புதுசாவும் ஆச்சர்யமாவும் இருந்தது. கல்யாணம், காதுகுத்து, மொய் இதெல்லாம் எல்லா ஊர்கள்லயும் நடக்கும் விஷயம்தான்.  ஆனால், தேனியில 'மொய்’ கான்செப்ட்டுக்கு 'செய்முறை’னு பேர். கொலையில்கூட போய் முடியும் அளவுக்கு இந்தச் செய்முறை இன்னும் உயிர்ப்போட இருக்கு. 'செய்முறை’யில பிஹெச்.டி., பண்ற அளவுக்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அதைப் பின்புலமா வெச்சு ரெண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் விஷயங்களை திரில்லராச் சொல்லப் போறேன்.  

ஒரு விழாவில் நமக்கு யாராவது 1,001 எழுதினால், அவங்க வீட்டு விசேஷத்துக்கு 2,001, 3,001-னு எழுதணும். இல்லைனா, 'உன் வீட்டு விசேஷத்துக்கு செஞ்சோம்ல, அதே மாதிரி எங்க வீட்டு விசேஷத்துக்கு ஒழுங்கா செஞ்சுட்டுப்போடா வெக்கங்கெட்டவனே!’னு ஓப்பன் மைக்ல அசிங்கப்படுத்துவாங்க. மத்த ஊர்கள்ல நோட்டு போட்டு, மஞ்சப்பை வெச்சுதானே மொய் கலெக்ட் பண்றதைப் பார்த்திருப்போம். ஆனால், தேனியில் அண்டா தான். கஷ்டத்துல இருக்கிறவன்கூட, பொண்டாட்டியோட தாலியை அடமானம்வெச்சு செய்முறை செய்வான்.

'கஷ்டத்துல இருக்குற பங்காளி வீட்ல விசேஷம்னா, எல்லாரும் செய்முறை செய்றோம். கிடைக்கிற பணத்துல அவன் தொழில் தொடங்கி நல்லா வாழ வழி கிடைக்கும். செய்முறை செஞ்சவன் கஷ்டப்படும்போது, வாங்கினவன் திரும்பச் செய்யணும். அதைச் செய்யலைன்னா, கன்ஃபார்மா பிரச்னைதான்’னு அவங்க சொல்ற லாஜிக் பயங்கரம்.  

சாவு வீட்டுக்காரங்களுக்கு, கிட்டத்தட்ட ஒரு மாசம் வரை சோறே அக்கம்பக்கத்தார் வீட்ல இருந்துதான் வரும். கறிச்சோறு போடுறது, எல்லாம் 'நாங்க இருக்கோம்... எல்லாத்தையும் மறந்துடு’னு சொல்லாமச் சொல்லி பழைய நிலைக்கு கொண்டுவர்றதுக்கான ஒரு சர்போர்ட். இப்படி கோவம், பாசம்னு எல்லாத்தையுமே அளவுக்கு மீறித் தர்ற அவங்க குணத்தை கேண்டிட் கேமரா மாதிரி பதிவுபண்ணிட்டு வந்திருக்கோம்.

எல்லாருமே புதுமுகங்கள்தான். தேனி, கம்பம், குமுளியில் இருக்கும் தனியார் நர்ஸிங் காலேஜ்களில் கேரளப் பெண்கள் நிறையப் பேர் தங்கிப் படிக்கிறது இயல்பு. அப்படி ஒரு நர்ஸிங் மாணவி கேரக்டர் ஓவியாவுக்கு. மண்ணின் மைந்தன் மாதிரி இருக்கணும். கொஞ்சம் படிச்ச பையனாவும் தெரியணும்னு தேடினப்ப சிக்கினவர்தான் கதிர்.

மண், மலை, சாரல்னு ஒளிப்பதிவுக்கு பெரிய ஸ்கோப் இருக்கும். கேமராமேன், ரவி கே.சந்திரன் சாரின் அசோசியேட் ராகுல் தர்மன். காட்சிகளின் பிரமாண்டமும் இசையும்தான் படத்தின் மிகப் பெரிய பலம்'' என்கிறார் இயக்குநர் விக்ரம்.

''இந்தப் படத்தில் நாட்டுப்புற இசையின் இன்னொரு வடிவத்தைத் தொட்டிருக்கோம்'' என்கிற இசையமைப்பாளர் ரகுநந்தன், ''நாட்டுப்புறப் பாடகர்கள் பலரைச் சந்திச்சு நிறைய ரெஃபரென்ஸ் எடுத்துப் பண்ணியிருக்கேன்.  

'கோணக்கொண்டக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கிடக்கல
காரணம் யாருங்க
கேரளத்துச் சாரலுதானுங்க’னு
எல்லாப் பாடல்களையுமே ஏகாதசி எழுதியிருக்கார். தவில், பம்பைனு வெச்சு உங்களை அந்த மண்ணுக்கே அழைச்சிட்டுப்போற முயற்சிதான் இந்தப் பாடல்கள். புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன், தஞ்சை செல்வி, திருவுடையான்னு நிறைய கிராமத்து குரல்கள். எங்க தயாரிப்பாளரும் ஒரு பாட்டு பாடியிருக்கார்'' என்று பேச்சை, ஜி.வி.பிரகாஷ் குமார் பக்கம் மடை மாற்றுகிறார்.

''வாழ்க்கையில சின்னச்சின்னதா நல்ல விஷயங்கள் செய்யணும்னு ஆசை. உங்க அன்பும் ஆசீர்வாதமும் வேணும்'' எனப் புன்னகைக்கிறார் ஜி.வி.பி.!

- ம.கா.செந்தில்குமார், படம்: ஆ.முத்துக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்