Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“ஹீரோக்கள் ஒண்ணு சேர்ந்து எதையும் சாதிப்போம்!” - இது விஷால் ஃபார்முலா

''சாந்தமா உட்கார்ந்து இருக்குற விநாயகரைப் பார்த்திருப்போம். அதே விநாயகர் கோபமா கர்ஜித்தார்னா என்ன நடக்கும்... அதுதான் எம்.ஜி.ஆர். அதாவது மதகஜராஜா!'' - 'சாந்தம்’, 'கோபம்’ என்று எடுத்த எடுப்பிலேயே பொடிவைத்துப் பேசுகிறார் விஷால்.

நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பான பிரச்னையைத் தீர்க்க நடிகர்களை ஒருங்கிணைக் கிறார். தான் நடிக்கும் படங்கள், தயாரிப்புச் சிக்கலை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக, 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் என விஷாலைச் சுற்றி பரபரப்பு மேகங்கள்!  

  ''வதந்திகளை நம்பாதீர்கள் நண்பா. நாம இப்போ 'மதகஜராஜா’ படம் பத்தி மட்டுமே பேசலாம்!'' என்று சிரிக்கிறார்.

''நான், சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ்னு நாலு நண்பர்கள். என்னைத் தவிர மத்த மூணு பேருக்கும் தற்கொலை முடிவுக்கே போற அளவுக்கு ஏதோ ஒரு பிரச்னை. அந்த சமயம் பார்த்து, 'என் பொண்ணு கல்யாணத்துக்கு அவசியம் வந்துடுங்கப்பா’னு சின்ன வயசுல நாங்க பாடம் படிச்ச பள்ளிக்கூட வாத்தியார் அன்பா கூப்பிடுறார். கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து அந்தப் பிரச்னையைப் பத்தி முடிவெடுக்கலாம்னு கிளம்புறோம். அங்கே அந்த மூணு பேர் பிரச்னைக்கும் காரணமான ஒருத்தரைச் சந்திக்கிறோம். அது யாரு, என்ன பிரச்னை, அதுல இருந்து எப்படி மீள்றோம்... இதுதான் 'மதகஜராஜா’ கதை!''

''கதை சரி... அது என்ன சுந்தர்.சி படம்னாலே ரெண்டு ஹீரோயின்?''

''உங்க கனிவான கவனத்துக்கு... இந்தப் படத்துல ரெண்டு இல்லை... அஞ்சலி, வரலட்சுமி, சதானு மூணு ஹீரோயின்கள். மத்தபடி, 'ஒரு படத்துல ஏன் இத்தனை ஹீரோயின்’னு சுந்தர் சார்கிட்டதான் கேக்கணும். 'நம்ம படம் பார்த்துட்டு எல்லாரும் தும்மிட்டே இருக்கணும்ஜி. அந்தளவுக்கு படத்துல மசாலா இருக்கணும்’னு அவர் சொல்லிட்டே இருப்பார். அதனாலகூட இருக்கலாம்!''

''நீங்க சமீபத்துல நடிச்சதுல 'வெடி’ ஆக்ஷன் கமர்ஷியல் படம். 'சமர்’ல திரைக்கதை பளிச்னு இருந்தது. 'பட்டத்துயானை’ல காமெடிக்கு ஸ்பேஸ் கொடுத்து அடக்கிவாசிச்சிருப்பீங்க. இப்படி எல்லா முயற்சியும் பண்ணிப் பார்த்தாலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் சிக்கலையே..! என்ன மிஸ் ஆகுதுனு யோசிச்சீங்களா?''

''நான் எப்பவும் நடிச்சு முடிச்ச படங்களைப் பத்தி போஸ்ட்மார்ட்டம் பண்ண மாட்டேன். அது பிடிக்கவும் பிடிக்காது. 'நல்ல படம்’னு அந்த சமயம் மனசுல தோணினா, நடிச்சிருவேன். 'ஐயோ... அவ்வளவு உயிரைக் கொடுத்து நடிச்சும் மிஸ் ஆகிடுச்சே’னு உட்கார்ந்து யோசிச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்க மாட்டேன். அடுத்த தடவை எல்லாம் கூடிவரும்னு நினைச்சு உழைக்க ஆரம்பிச்சுடுவேன்!''

''புது ஹீரோக்கள் கலக்குறாங்களே... கவனிக்குறீங்களா?''

''விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்... அவங்க வந்து நிக்கிறதைவிட ரொம்ப சந்தோஷமான விஷயம், அவங்களைப் பத்தி நான் எங்கேயுமே தப்பான ஒரு விஷயம்கூட கேள்விப்படலை. 'இனி நாங்கதான்’னு தெனாவட்டு இல்லாமல், பொறுப்பை உணர்ந்து சின்சியரா இருக்காங்க.  இத்தனைக்கும் ரெண்டு பேருக்கும் சினிமா பின்னணி கிடையாது. கிடைச்ச வாய்ப்பைத் தக்க வெச்சுக்கிட்டு ரெண்டு ரெண்டு படியா ஜம்ப் அடிக்கிறாங்க பாருங்க... அந்த ஸ்டைல் எனக்குப் பிடிச்சிருக்கு. சினிமா ஆசையோட இருக்கும் இளைஞர்கள் அத்தனைப் பேருக்கும் அவங்க ரெண்டு பேரும் பெரிய நம்பிக்கை கொடுத்திருக்காங்க!''

''சீனியர் முதல் ஜூனியர் வரை பல ஹீரோயின்களோட நடிச்சிருக்கீங்க... அவங்களோட 'குட்புக்’லயும் இருக்கீங்க. அவங்க ப்ளஸ் சொல்லுங்களேன்?''

''ஃபீனிக்ஸ் பறவை மாதிரி த்ரிஷா. யூத் பல்ஸ் பிடிச்சு ஸ்கோர் பண்ணிருவாங்க. நயன்தாரா எவர்க்ரீன் செக்ஸி கேர்ள். வரலட்சுமியின் தன்னம்பிக்கை... பயங்கர பவர்ஃபுல். லட்சுமி மேனனை நான் 'கெடாக் குட்டி’னுதான் கூப்பிடுவேன். 14 வயசுல சினிமாவுக்கு வந்துடுச்சாம். இப்போ 17 வயசுல பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு. ஐஸ்வர்யா அர்ஜுன், சட்சட்னு பாடம் படிச்சுக்குற க்யூட் கேர்ள். பக்கத்து வீட்டுப் பையன் மாதிரினு சொல்லுவாங்கள்ல, அப்படி அஞ்சலி பக்கத்து வீட்டுப் பொண்ணு. ஒரே சேலைதான்... அதுலயே ஹோம்லி, கிளாமர்னு ரெண்டு லுக்லயும் ஜொலிப்பாங்க!''

''ஆங்... அதான் அடுத்த கேள்வி... அஞ்சலி எங்கே சார்?''

''தெரியலையேங்க... நான் போன நவம்பர்ல அவங்களைப் பார்த்தது. 'மதகஜராஜா’ தெலுங்கு டப்பிங்குக்கு ஆளைத் தேடிட்டு இருக்கோம், சிக்க மாட்டேங்குறாங்க. என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியலை!''

''சிம்புவே நயன்தாராவுக்கு அடுத்து ஹன்சிகாவைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டார். உங்க செட் பசங்கள்லாம் காதல், கல்யாணம், குழந்தைனு செட்டில் ஆகிட்டாங்க. 'ஒரு ஹீரோயினைக் காதலிக் கிறேன்’னு ரொம்ப முன்னாடி சொன்னவர் நீங்க. என்னாச்சு அந்தக் காதல்?''

''ஸாரிங்க... அது ரொம்பவே பெர்சனல். நோ கமென்ட்ஸ்!''

''சரி... காதலிக்கிறீங்கன்னே வெச்சுக்குவோம். எப்ப கல்யாணம்?''

''ஆர்யாவுக்கு எப்போ கல்யாணம் நடக்குதோ, அதுக்கு மறுநாள்! இதை அவங்க வீட்லயும் சொல்லிட்டேன். ஸோ, என் கல்யாணம் இப்போ ஆர்யா கையில்!''

'' 'விஸ்வரூபம்’ பட ரிலீஸ்ல சிக்கல் வந்தப்ப, நீங்க உள்பட தமிழ் சினிமாவே கமலுக்கு ஆதரவா நின்னீங்க. ஆனா, 'தலைவா’ சமயத்துல விஜய்க்கு யாரும் கை கொடுக்கலையே!''

'' 'விஸ்வரூபம்’ ரிலீஸ் பிரச்னைக்கு 'இதுதான் காரணம்’னு ஏதோ ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுது. எல்லாரும் அதைப் பத்திப் பேசினோம். ஒற்றுமையா நின்னோம். ஆனா, 'தலைவா’வுக்கு என்ன பிரச்னை, யார் மூலமா பிரச்னைனு எதுவுமே தெரியலையே. ஆனா, இனிமே இப்படி யாருக்கும் நடக்கக் கூடாது. அதுதான் என் ஆசை!''

''நடிகர் சங்கத்துல என்னதான் பிரச்னை? பிரச்னையைத் தீர்க்கிறதுல உங்க பங்கு என்ன?''

''போன வருஷம் எனக்கே ஒரு பிரச்னை வந்தப்ப, ராதாரவி சார்தான் பேசி முடிச்சு வெச்சார். அதனால எங்களுக்குள் எந்த மோதலும் கிடையாது. இப்ப ஓடிட்டு இருக்குற விஷயம் ஒரு பிரச்னையே கிடையாது. நல்ல விஷயத்துக்காக  எல்லாரும் சேர்ந்து செயல்படுறோம். நட்பா எந்த விளக்கமும் கேட்கலாம் இல்லையா? அப்படிச் சில விஷயங்கள் கேட்டிருக்கோம்.

'நடிகர் சங்கக் கட்டடத்தை சரி பண்ண வெளியே ஏன் நிதி திரட்டணும்? நாமளே ஆளும் பேருமாச் சேர்ந்து அதைச் சரி பண்ணிடலாமே’னு சொல்லியிருக்கோம். இது எல்லாத்தைப் பத்தியும் பேசலாம்னு சொல்லியிருக்காங்க. இது சம்பந்தமா எங்க செட் நடிகர்கள் மட்டுமில்லை, ரொம்ப சீனியர் நடிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கு. அதனால நல்ல விதமான பதில் வரும்னு எதிர்பார்க்கிறோம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாமே!''

- ம.கா.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement