இன்றைய இளைஞர்களின் காதல் பல்ஸ்! | இருவர் ஒன்றானால், மாரிமுத்து, ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/09/2013)

கடைசி தொடர்பு:12:20 (09/09/2013)

இன்றைய இளைஞர்களின் காதல் பல்ஸ்!

'' 'காதல்னா, புனிதம். ஒரு தடவை காதல்ல தோத்துட்டா, மறுபடி இன்னொருத்தர் மேல காதல் வரவே வராது’ன்னு நிறைய நம்பிக்கைகள் இன்னும் இருக்கு. அதெல்லாம் பொய்!'' - இயல்பாகப் பேசுகிறார் 'இருவர் ஒன்றானால்’ பட அறிமுக இயக்குநர் அன்பு.ஜி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் சினிமா பாடம் படித்தவர்.

''இப்போ எல்லா படங்களுமே காதலைக் கலாய்ச்சுதானே வருது. இதில் என்ன புதுசு?''

''அஞ்சாறு கதைக்குள்ளேயே எல்லா சினிமாக்களையும் அடக்கிடலாம். ஆனா, மத்த படத்துல இருந்து எங்க படம் வித்தியாசமா இருக்கும். 'இருவர் ஒன்றானால்’ங்ற தலைப்புக்கு ஏத்தமாதிரி ஒரு ஐடியாவைப் பிடிச்சோம். ஒரு பொண்ணும் பையனும் கட்டியணைச்சு நிக்கிற மாதிரி ஒரு படம். ஆனா, படத்துல ஒரு பையன் மட்டும்தான் இருப்பான். அவனையே அர்த்தநாரீஸ்வரர் மாதிரிக் காட்டணும். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்... போட்டோஷாப் வேலைகள் இல்லாம அந்தப் போஸ்டர் பண்ணணும்னு ஆசை. ஒரு வாரம் செலவழிச்சு காஸ்ட்யூம் தயார் பண்ணி, எங்க ஹீரோ பிரபுவுக்கு மேக்கப் போட்டு அந்தப் படம் எடுத்தோம். 'அட... நல்லா இருக்கே’னு ஒரு பளிச் கவனம் ஈர்த்தது!''

''காமெடி, கிளாமர்தான் டீன் சினிமாக்களின் வெற்றி ஃபார்முலா. நீங்களும் அந்த லைன்லதான் படம் பண்ணிருக்கீங்களா?''

''சொன்னா நம்ப மாட்டீங்க. கன்னத்தில் அறையும்போது கைபடுறதைத் தவிர பாடல்கள்லகூட ஹீரோ, ஹீரோயின் டச் பண்ணிக்க மாட்டாங்க. காமெடி உண்டு. இரட்டை அர்த்த வசனமோ, தனி டிராக்கோ கிடையாது. கதையோடு சேர்ந்த காமெடிதான். 'புதுமுகங்களோட வர்றோம், புதுசா பண்றோம்’னு இறங்கியிருக்கோம். 'இந்தக் கதை கண்டிப்பா ஹிட் அடிக்கும்’னு முருகதாஸ் வாழ்த்தினார்!''

''இப்போ இருக்குற முருகதாஸை எல்லாருக்கும் தெரியும். அப்போ அவர் எப்படி இருந்தார்?''  

''ஒரே ஒரு சம்பவம் சொல்றேன்... அதுலயே நீங்க புரிஞ்சுக்குவீங்க. நானும் முருகதாஸும் ஒரே சமயத்தில் சினிமாவுக்கு வந்தவங்க. அப்புறம் அவர் எஸ்.ஜே.சூர்யாகிட்ட சேர்ந்துட்டார். அவர் 'தீனா’ படம் பண்ணப்போ அவர்கிட்ட நான் வேலை பார்த்தேன்.

ஏவி.எம்-ல தீனா முதல் நாள் ஷூட். இடைவேளைல டிஃபன் சாப்பிட வெளியே போயிட்டு வந்த முருகதாஸை வாட்ச்மேன் செட்டுக்கு உள்ளே விடலை. வாசல்ல நின்னுகிட்டு என்னைக் கூப்பிட்டு, 'நான் யார்னு இவர்கிட்ட சொல்லுங்க. என்னை உள்ளே விட மாட்டேங்குறார்’னு சொன்னார். 'இவர்தான் படத்தோட டைரக்டர்’னு நான் சொல்லி அவரை உள்ளே கூட்டிட்டு வந்தேன். 'என்னங்க நீங்க... வாட்ச்மேன்கிட்ட நாலு வார்த்தை சுள்ளுனு பேசுறதை விட்டுட்டு என்னைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க’னு சொன்னேன். அதுக்கு அவர் சொல்றார்... 'அவர் என்னங்க தப்பு பண்ணார்? வெளி யாளுங்க யாரும் உள்ளே வந்துரக் கூடாதுனு அவருக்குக் கொடுத்த வேலையை ஒழுங்கா பண்றார்’னு ஈஸியா சொல்லிட்டார். இப்பவும் அவர் அப்படித்தான் இருக்கார். 'எந்தவொரு விஷயத்தையும் அப்புறம் பார்த்துக்கலாம்னு தள்ளிப்போடக் கூடாது. முதல்ல உட்காந்து பக்காவா பிளான் போட்டுரணும்.  உழைக்கிறதெல்லாம் பிறகுதான்’னு சொல்வார். அந்த ஃபார்முலாவை நானும் அப்படியே கடைப்பிடிக்கிறேன்!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்