“இது ஹாலிவுட் ஜிகர்தண்டா!” | ஜிகர்தண்டா, பீட்சா, கார்த்திக் சுப்புராஜ், சித்தார்த், லட்சுமி மேனன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (09/09/2013)

கடைசி தொடர்பு:12:51 (09/09/2013)

“இது ஹாலிவுட் ஜிகர்தண்டா!”

'''முதல் படத்துக்கு 'பீட்சா’னு பேர் வெச்சது க்ளிக் ஆகிடுச்சு. அதனால ரெண்டாவது படத்துக்கு 'ஜிகர்தண்டா’னு பேர் வெச்சுட்டீங்களா?’னு  கேக்கிறாங்க. அந்த சென்ட்டிமென்ட் எனக்கு இல்லை. மதுரையில் நடக்கிற கதை, இந்தப் படம். மதுரைன்னா அருவா, மல்லிப்பூ, கோயில் தவிரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கே... அதுல எங்க யூனிட்டுக்குப் பிடிச்சது 'ஜிகர்தண்டா’.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், கோனார் கடை, ஐயப்பன் தோசைக் கடை லிஸ்ட்ல 'ஜிகர்தண்டா’வுக்கும் ஒரு இடம் இருக்கு. நல்லா வயிறுமுட்ட சாப்பிட்டுட்டு ஒரு கிளாஸ் ஜிகர்தண்டா குடிச்சா, அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கும். எங்க படமும் அந்த ஃபீல் கொடுக்கும். அதான் இந்தப் பேர்!'' - நான்கு கிளாஸ் ஜிகர்தண்டா அடித்த உற்சாகம் தொனிக்கிறது 'பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ் குரலில். முதல் படத்தில் இருளைக் காட்டி மிரட்டியவர், இப்போது இனிப்பு ஃபார்முலாவோடு வருகிறார்.  

'' 'ஹாலிவுட் தரத்தில் முயற்சி’னு பீட்சா-வில் பேர் வாங்கினீங்க. ஆனா, இரண்டாவது படத்துலயே லோக்கல் ஜிகர்தண்டாவைக் கையில் எடுத்துட்டீங்களே!''

'' 'பீட்சா’-வில் பயம் மட்டுமே இருக்கும். 'ஜிகர்தண்டா’ முழுக்க முழுக்கப் பொழுதுபோக்குப் படம். ரெண்டாவது படமா 'ஜிகர்தண்டா’தான் சரி. 'பீட்சா’வைவிட இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் நாலு மடங்கு வேகமா இருக்கும். வழக்கமான 'மதுரை படங்கள்’ மாதிரி இல்லாமல், விஷ§வல், இசை, வசனங்கள்னு எல்லாமே வேற லெவல்ல இருக்கும்!''

''விஜய் சேதுபதியோட நல்ல தொடர்பில்தானே இருக்கீங்க. அப்புறம் ஏன் 'ஜிகர்தண்டா’வில் அவர் நடிக்கலை?''

''அவருக்கு 'ஜிகர்தண்டா’ கதை  முன்னாடியே தெரியும். 'பீட்சா முடிஞ்சதும் இதைப் பண்றோம்’னு சொல்லிட்டு இருந்தார். ஆனா, கதைக்கான ஹோம்வொர்க் பண்ணிட்டு நாங்க வரும்போது, அவர் பரபரப்பாகிட்டார்.

'பீட்சா’ பார்த்துட்டு என்னை முதல்ல பாராட்டின பிரபலம் நடிகர் சித்தார்த். படத்தோட இன்டர்வெல்லயே வாழ்த்து சொல்லிட்டு, 'நாம ஒரு படம் பண்ணணும்’னு அப்பவே சொன்னவர். இந்தக் கதை அவருக்குப் பிடிச்சிருந்தது. இது வழக்கமான சாக்லேட் பாய் கேரக்டர் இல்லை. நிறைய சவால்களை ஜஸ்ட் லைக் தட் சாதிக்கிற செம கேரக்டர்!''

'' 'பீட்சா’ பண்ணும்போது ரொம்ப சுதந்திரமா உணர்ந்திருப்பீங்க. ஆனா, இப்போ எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்குமே... எப்படி சமாளிக்கிறீங்க?''

''குறும்படம் பண்ணிட்டு 'பீட்சா’ பண்றப்பவே அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.  அதனால் இந்தப் படம் பண்ணும்போது பெரிய பயம் இல்லை. ஆனா, நிறைய ஆர்ட்டிஸ்ட்கள் இருந்ததால், எல்லார் கால்ஷீட்டும் ரொம்ப இடிச்சுக்கிச்சு. அதைச் சமாளிச்சு 90 சதவிகிதம் படம் முடிச்சதுதான் பெரிய சாதனை.   ஷூட்டிங்லயும் நிறைய அனுபவங்கள்.

'பீட்சா’வை ஒரு வீட்டுக்குள்ளயே வெச்சு முடிச்சுட்டோம். ஆனா, இந்தப் படம் முழுக்க  அவுட்டோர், ஏகப்பட்ட பிரபலங்கள்னு நிறைய சவால்கள். ஸ்பாட்ல போய் பார்த்தா ஆயிரம் பேர் சுத்தி நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பாங்க. திருவிழாவுக்கு நடுவுல மாட்டிக்கிட்ட மாதிரி கண்ணைக் கட்டுச்சு. 'டேய் இது வேறடா’னு ஒரு பயம் உதைச்சது.  கூட்டத்தைக் கட்டுப்படுத்தி மனசுல நினைச்சதை மானிட்டர்ல பார்க்கிற வரைக்கும் உயிர் நம்ம கையில் இல்லை. எல்லாத்துக்கும் மேல ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ் கதிரேசன் என் மேல வெச்சிருந்த நம்பிக்கைக்கு நன்றி சொல்லணும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு படமும் ஒரு சவால்தான். எல்லாத்தையும் ஜாலியா சின்சியரா சமாளிப்போம் நண்பா!''

- க.ராஜீவ்காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்