ரெண்டாவது படத்திலேயே பிட்டு இருக்கு!

'தமிழ் படம்’ என்று ஒரு படம் எடுத்து பல தமிழ்ப் படங்களின் டவுசர் கிழித்தவர் சி.எஸ்.அமுதன். இப்போது தன் இரண்டாவது படத்துக்கு 'ரெண்டாவது படம்’ என்று அர்த்தபூர்வமாகப் பெயர் வைத்திருக்கிறார். டிரெய்லரே படு நக்கலாக இருக்க, அமுதனைச் சந்தித்து, கொஞ்சம் சம்பந்தத்தோடும் கொஞ்சம் சம்பந்தம் இல்லாமலும் கேள்விகள் கேட்டேன்.

 ''ட்ரெய்லர்ல வர்றாங்களே ஸ்வேதா... யார் சார் அவங்க? எங்கே பிடிச்சீங்க அந்த அழகியை?'' (மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் அந்த அழகி!)

''அவங்க ஏற்கெனவே என் தமிழ் படத்துல நடிச்சவங்கதான். அவங்களே அவங்களுக்குத் தேவையான காஸ்ட்யூம்ஸ்லாம் எடுத்துட்டு வர்ற அளவுக்கு ஆர்வமா இருந்தாங்க. நான் அவங்க கொண்டுவந்த காஸ்ட்யூம்ஸை யூஸ் பண்ணக் கூடாதுனு சொல்லிட்டு வேற காஸ்ட்யூம் கொடுக்கச் சொன்னேன். என் அழகுக்கு இந்த காஸ்ட்யூம்லாம் செட் ஆகாதுனு சொல்லி பிரச்னை பண்ணி, கடைசியில அவங்க கொண்டுவந்த ஜீன்ஸ், கவுனை எல்லாம் போட்டுதான் நடிச்சாங்க. அந்த அளவுக்கு ஒரு டெடிகேட்டிவ் ஆர்டிஸ்ட்.''

''அது என்ன 'கம்மிங் அஸ் சூன் அஸ் பாசிபிள்’னு போட்டுருக்கீங்களே... ஏன் என்ன காரணம்''

''படம் ஸ்டார்ட் பண்ணப்ப, சம்மர் 2012-னு போட்டோம். ஆனால், ரொம்ப லேட் ஆகி டைமுக்கு ரிலீஸ் பண்ண முடியலை. இந்த லட்சணத்துல 'கம்மிங் சூன்’னு போட்டோம்னா, 'இப்படித்தான்டா நீங்க சொல்வீங்க, ஆனால் லேட் பண்ணுவீங்க’னு சொல்வாங்க. அப்படி யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடக் கூடாதுனுதான் நாங்களே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுறோம்னு ட்ரெய்லர்ல போட்டுருக்கோம்.''

''தொப்பை பெருசா இருக்கே.. ஒரு நாளைக்கு எவ்வளவு சரக்கு அடிப்பீங்க?''

''ஒரு நாளைக்கு நான் எவ்வளவு சரக்கு அடிக்கிறேன்னு சொல்ல மாட்டேன். அது நம் இளைஞர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகிடும். அது சரிவராது. அடப் போங்கப்பா... இது நல்லாச் சாப்பிட்டு சாப்பிட்டு வளர்ந்த தொப்பை பிரதர்!''

'' 'தமிழ்படம்’, 'ரெண்டாவது படம்’ வரிசையில் அடுத்து பிட்டுப் படம் எடுக்கப்போறீங்களாமே?''

''இது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி. ஏன்னா, ஆல்ரெடி இந்த ரெண்டாவது படத்துலயே பிட்டுப் படமும் இருக்கு. என்ன எப்படின்னு லாம் சொல்ல மாட்டேன். சொல்லிட்டா, சஸ்பென்ஸ் போய்டும். வாட்ச் இட் இன் தியேட்டர்ஸ்!''

''பவர் ஸ்டார் உங்களைத் திடீர்னு கடத்திட்டுப்போய், என்னை வெச்சு ஒரு படம் கண்டிப்பா பண்ணியே ஆகணும்னு மிரட்டுனா என்ன பண்ணுவீங்க?''

''வேற வழியே இல்லைங்க... தற்கொலை பண்ணிக்குவேன்''

'' 'அம்மாவின் கைப்பேசி’ படத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க''

''நல்லவேளை, நான் அந்தப் படத்தைப் பார்க்கலை. ஐயயோ, நான் அப்படிச் சொல்ல வரலைங்க. பார்க்காமல் அந்த படத்தைப் பத்திப் பேசக் கூடாதுன்னு சொல்ல வந் தேன்.''

இந்தக் கேள்வி கேட்டவுடனே பேட்டி முடிந்துவிட்டது. ஏன் சார்? என்ன சார் நடக்குது இங்க?

- உ.அருண்குமார், படம்: பா.கார்த்திக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!