பவர் ஸ்டார் பகீர் வாக்குமூலம்! | பவர் ஸ்டார், சீனிவாசன், ஆர்யா சூர்யா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பிரசாந்த், திகார், மோசடி வழக்கு

வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (14/09/2013)

கடைசி தொடர்பு:13:38 (14/09/2013)

பவர் ஸ்டார் பகீர் வாக்குமூலம்!

வர் ஸ்டாரிடம் உண்மையிலேயே ஏதேனும் 'பவர்’ இருக்கிறதோ! மோசடி வழக்கு காரணமாக இந்தியாவின் கெடுபிடி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர், அவரது புதிய படம் வெளியாகும் வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிறார். 'புழல் டு திகார்’ ட்ரிப் முடித்து வந்த சோர்வு காட்டாமல், ஒரு கோட்டிங் அதிக பவுடர் பூச்சுடன் உற்சாகமாக வந்து நிற்கிறார்.  

''ஜெயில்ல இருந்த மாதிரியே தெரியலையே... செம ஃப்ரெஷா இருக்கீங்க?''

''அதை ஜெயில்னு சொல்ல மாட்டேன்; அது எனக்கு ஒரு ஆசிரமம். நான் பாவம் சார்... அப்பாவி. சில துரோகிகளால் பழிவாங்கப்பட்டேன். யாரையும் ஏமாத்தணும்னு திட்டம் போட்டு நான் செயல்படலை. வம்படியா ஒரு பொருளை உங்களை ஏமாத்தி வாங்கிட்டு தலைமறைவானாத்தானே என்னை 'ஃப்ராடு’னு சொல்ல முடியும். ஆனா, நீங்களா வந்து வற்புறுத்தி பணத்தைக் கொடுத்துட்டு என்னை ஃப்ராடுனு சொன்னா எப்படி? ஒரு வேலை நடக்கணும்னு பணம் கொடுக்கிறாங்க. நான் அதை இன்னொருத்தர்கிட்ட கொடுத்துதானே காரியம் சாதிக்க முடியும்? என்னை அவங்க ஏமாத்திட்டா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? எல்லாரையுமே ஈஸியா நம்பிடுவேன். அதான் என் பலமும் பலவீனமும்!

சினிமாவுல அறிமுகமாகணும்னு மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை இழந்தவன் நான். அந்த இயக்குநர்கள் பேரெல்லாம் சொல்ல விரும்பலை. உண்மையிலேயே அதிகம் ஏமாந்தது நான்தான். என்னை ஏமாத்தினவங்களை, கடவுள் பார்த்துப்பார்!''

''ஆனா, உங்க சினிமாவுலக நண்பர்களே 'நீங்க ஃப்ராடு’ங்கிற ரீதியில செய்தி பரப்பினாங்களே!''

''சொன்னவங்க யாருனு பாருங்க. அவங்கதான் பெரிய கிரிமினலா இருப்பாங்க. நல்லவங்க வார்த்தைக்குத்தான் நாம கவலைப்படணும்.  என்கூட எப்பவும் சுத்திட்டே இருக்கும் பத்து பேர்கூட எனக்கு எதிரியா ஆகிட்டாங்க. என்னை அழிக்கணும்னு கூடவே இருந்து வேலை பார்த்தாங்க. ஆனா, அவங்க எண்ணம் நிறைவேறலை... நிறைவேறாது. நான் வெளில வந்தது நிஜமா காட்ஸ் மிராக்கிள்!''

''இந்தச் சிறைவாசத்தால் நீங்க இழந்தது என்ன?''

  ''என் லத்திகா மருத்துவமனை. எட்டு கோடி முதலீட்டில் நான் கட்டின ஆஸ்பத்திரி அது. நான் கைதானதும் கொள்ளையடிக்கிற மாதிரி லாரி வெச்சு என் ஆஸ்பத்திரி பொருட்களை எல்லாம் சிலர் தூக்கிட்டுப் போயிட்டாங்க. யார் யார் எடுத்தாங்கனு எனக்குத் தெரியும். அவங்க மேல நடவடிக்கை எடுப்பேன். இந்த எல்லாப் பிரச்னைக்கும் ஒரு லேடிதான் காரணம். சீக்கிரமே அதற்கான ஆதாரங்களை கொடுப்பேன்!''

''ஆசிரமத்து (ஜெயில்) வாழ்க்கை எப்படி இருந்துச்சு?''

  ''நான் எப்பவுமே சாப்பாடு, வசதிகளை பெருசா எடுத்துக்க மாட்டேன். மனக் கவலையில்தான் கொஞ்சம் வெயிட் குறைஞ்சிருச்சு. நாலு மாசம் ரெஸ்ட் கிடைச்சதுனு நினைச்சுக்கிட்டேன்.  உள்ளே போனவன்லாம் அக்யூஸ்டும் இல்லை; வெளியில இருக்கிறவன்லாம் யோக்கியனும் இல்லை. குடும்பத்தைப் பிரிஞ்சு இருந்ததுதான் கஷ்டமா இருந்துச்சு. இதுவே இன்னொருத்தனா இருந்தா, இந்நேரம் தற்கொலை பண்ணிட்டு செத்திருப்பான். ஆனா, நான் சமாளிச்சுட்டேன். பாசம்தான் பெரிசுனு நினைச்சேன். பணம்தான் பெரிசுனு உணரவெச்சுட்டாங்க!''

''போலீஸ்ல அடிச்சாங்களா?''

''இல்லை. தமிழ்நாட்டு போலீஸ் தங்கமானவங்க. நிறைய அறிவுரை சொன்னாங்க. ஒரு வாரத்துக்கு அப்புறம் எல்லாரும் எனக்கு ஃபேன்ஸ் ஆகிட்டாங்க!''

''எப்படி, சரியா உங்க படம் ரிலீஸ் சமயம் நீங்களும் ரிலீஸ் ஆனீங்க?''

  ''90 நாள் ஆகிடுச்சு. பெயில் கிடைச்சுடுச்சு. சட்டம்கூட நம்ம பக்கம்தான்... பார்த்தீங்களா!''

''சிறைல இருந்தப்போ சினிமா நண்பர்கள் யாரெல்லாம் விசாரிச்சாங்க, சந்திச்சாங்க?''

''பிரசாந்த் மட்டும் விசாரிச்சார். மத்தபடி யாருமே என்னாச்சுனுகூட கேட்கலை. யார் யாரையோ 'தம்பி’னு சொன்னேன். அவங்கள்லாம் எட்டிக்கூட பார்க்கலை. அவங்க எல்லா ருக்கும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். ஒருத்தன் நல்லா இருக்கும்போது, பக்கத்துல இருக்கிறது முக்கியமில்லை. அவனுக்குப் பிரச்னை வரும்போதும் பக்கபலமா இருக்கணும். அதுதான் உண்மையான நட்பு. இந்த மாசம் மட்டும் நான் நடிச்ச மூணு படங்கள் வருது. இன்னும் நிறையப் படங்கள் புக் ஆகுது. 'ரசிகர்கள் என்னை வெறுக்கணும்... நான் சினிமாவுலயே இருக்கக் கூடாது’னு நினைச்சவங்க எண்ணத்தை அடிச்சு நொறுக்குவான் இந்த பவர்!''

''ஆனா, நீங்க நிஜத்துலயும் நடிக்கிறீங்கனு சொல்றாங்களே!''  

''அட... எல்லாருமே வாழ்க்கையில நடிச்சுட்டுத்தானே இருக்கோம் பிரதர்!''

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: ந.வசந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்