ஆல்ரவுண்டர் ஆல்கேட்ஸ்! | விஜய் டி.வி., சூப்பர் சிங்கர், அழகேசன்

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (14/09/2013)

கடைசி தொடர்பு:15:19 (14/09/2013)

ஆல்ரவுண்டர் ஆல்கேட்ஸ்!

'சூப்பர் சிங்கர்’ பட்டம் வெல்கிறாரோ இல்லையோ, 'சூப்பர் தாத்தா’ என்ற பட்டத்தை இப்போதே வென்றுவிட்டார், 62 வயது அழகேசன்!

விஜய் டி.வி-யின் 'சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் அழகேசனின் உற்சாகக் குறும்புகளுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எகிறி அடிக்கிறது. 10,000-த்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் உள்ளே நுழைந்தவர், இன்று 'டாப் - 20’ போட்டியாளர்களில் ஒருவராக நின்று பா(ஆ)டிக் கொண்டிருக்கிறார்.  

''நான் பிறந்து வளர்ந்தது சென்னை வியாசர்பாடி. அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. வீட்ல கஷ்டமான சூழ்நிலை. மூணு தங்கச்சி, ரெண்டு தம்பிங்க. அவங்களைக் கரையேத்தணுமேனு படிப்பை விட்டுட்டு வேலைல சேர்ந்துட்டேன். அப்பவே பாடிட்டேதான் இருப்பேன். முறைப்படி சங்கீதம் கத்துக்க ஆசைதான். ஆனா, படிக்கவே வழியில்லை... இதுல சங்கீதத்துக்கு எங்கே போறது? அப்பப்போ நானா தாளம் போட்டுப் பாடிக்குவேன்.

சென்னைக் குடிநீர் வாரியத்துல 30 வருஷம் வேலை பார்த்தேன். 'சூப்பர் சிங்கர்’ முதல் சீஸன் ஆரம்பிச்சப்பவே, அதுல கலந்துக்க ஆசை. ஆனா, அதுக்கு அரசாங்க அனுமதி வாங்கணும். ரொம்ப நாள் லீவு போட முடியாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். அதனால சின்னச் சின்ன பாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிறதோட திருப்தி அடைஞ்சுக்குவேன். நிறையக் கச்சேரிகள்ல  பாடிட்டே இருந்தேன். அரசாங்க வேலைல இருந்து ஓய்வு பெற்றதும் 'சூப்பர் சிங்கர்’ குரல் தேர்வுக்குப் போனேன். அன்னைக்கு என்னோடு இருந்த 50 பேர்ல நான் ஒருத்தன் மட்டும்தான் செலக்ட் ஆனேன்!'' - பூரிப்பு வழிய பேசும் தந்தையை, பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள் அழகேசனின் மூன்று மகள்களும்.

''என் வீட்டுக்காரம்மா விஜயகுமாரி, 35 வருஷமா முதுகு வலியால கஷ்டப்படுறாங்க. முதுகுல ஆபரேஷன் பண்ண ரெண்டு லட்ச ரூபாகிட்ட செலவாகுமாம். நான் வாங்குன சம்பளம் வயித்துப்பாட்டுக்கே சரியாப் போச்சு. அதுல எங்கே அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்க்குறது? எதுனா பரிசு ஜெயிச்சா, அதை அவங்க மருத்துவச் செலவுக்குத்தான் கொடுக்கணும்!

பாடகி சொர்ணலதா குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால என் பெரிய பொண்ணுக்கு அவங்க பேரை வைச்சேன். அவளுக்கு இதயத்துல ஏதோ ஓட்டை இருக்காம். நாலு வயசுலயே இதயத்துல ஆபரேஷன் பண்ணோம். அதுக்காக அப்பவே நகைகளை அடகு வெச்சும் 50, 100-னு கடன் வாங்கியும் லட்ச ரூபாய் சேர்த்து ஆபரேஷன் பண்ணோம். அந்தச் சிக்கலோ என்னவோ, அவளால கவனம் செலுத்திப் படிக்க முடியலை. ஒன்பதாம் வகுப்போட படிப்பை நிப்பாட்டிட்டு வீட்டுலயே வெச்சுப் பார்த்துக்கிட்டேன். சொர்ணலதாவுக்கு இப்போ 22 வயசு. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும். அடுத்த ரெண்டு பொண்ணுங்க பவானி, ரேவதி காலேஜ்ல படிக்கிறாங்க. கஷ்டத்தை மனசுல ஏத்திக்காம கலகலனு இருக்கிற பிள்ளைங்க. அதான் நான் இப்படி கவலை இல்லாமப் பாடிட்டு ஆடிட்டு இருக்கேன்!''  

''ஊரே நீங்க பாடுறதை ரசிக்கிறாங்க. வீட்ல எப்படி?''

''மோகன் நடிப்புல எஸ்.பி.பி. பாடுன எல்லாப் பாட்டும் என் சம்சாரத்துக்குப் பிடிக்கும். அதைப் பாடியே அவங்களை சமாளிச்சிருவேன். என்கிட்ட எதுவும் கோபமா இருந்தா, 'நான் என்ன சொல்லிவிட்டேன், நீ ஏன் மயங்குகிறாய்..?’னு பாடுவேன். உடனே சிரிச்சுடுவாங்க. என் பொண்ணுங்களுக்கு, 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே...’ பாட்டு ரொம்பப் பிடிக்கும்.

என் பாடலுக்கு முதல் ரசிகைகளும் முதல் விமர்சகர்களும் என் பொண்ணுங்கதான். சில சமயம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கும்போது,  'பாட்டு செலக்‌ஷன் சரியில்லைப்பா’னு சொல்வாங்க. அவங்களை திருப்திப்படுத்துற அளவுக்குப் பாடிட்டாலே, அந்த ரவுண்டுல நான் ஜெயிச்சிருவேன்!

ஏரியாவுல மட்டுமில்லாம எங்கே போனாலும் இப்போ என்னை அடையாளம் கண்டுக்கிறாங்க. ரெண்டு வரியாவது பாடச் சொல்லிக் கேக்கிறாங்க. இத்தனை வருஷம் நான் பட்ட கஷ்டமெல்லாம் இந்த சந்தோஷத்துல காணாமப்போயிடுது!'' என்று அதுவரை சாந்தமும் சந்தோஷமுமாகப் பேசி வந்தவர், சட்டென குரல் உடைந்து பேசுகிறார்.

''ஆனா சொந்தக்காரங்க, நண்பர்கள்லயே நிறையப் பேரு ஜாடைமாடையா என்னைக் குத்திக் காமிச்சுப் பேசியிருக்காங்க. என் உறவுக்காரர் ஒருத்தரு, 'சின்னப் பசங்ககூட பாடி போட்டிப் போடப்போறியா? அசிங்கப்பட்டுத்தான் வருவ’னு சொன்னாரு. அந்தக் கிண்டலையெல்லாம் சவாலா எடுத்துக்கிட்டேன். அனுதாபத்தால மட்டும் இந்தளவுக்கு ஜெயிச்சு வர முடியாது. உலகமே போட்டியைப் பார்த்துக்கிட்டு இருக்கு.  என்கூட வயசானவங்க பலரும் போட்டி போட்டாங்க. ஆனா, அவங்கள்லாம் இப்போ எங்கே இருக்காங்கன்னே தெரியலையே!''

''சரி... சாந்தி சாந்தி!''

('சாந்தி’ என்றதும் பழைய உற்சாகம் தொற்றிக்கொள்கிறது!) ''போட்டியில இவ்வளவு தூரம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. அதனால பரிசு கிடைச்சாலும் சந்தோஷம்... கிடைக்கலைன் னாலும் சந்தோஷம்!''

''உங்களுக்குப் பிடிச்ச பாட்டு எது?''

''டி.எம்.எஸ். பாட்டு எல்லாமே எனக்கு உசுரு.  'ஆதிபராசக்தி’ படத்துல வர்ற 'மணியே... மணியின் ஒலியே...’ பாட்டுதான் எனக்கு எப்பவும் பிடிக்கும்!''

''சரி... முக்கியமான ஒரு விஷயம் சொல்லுங்க... எல்லாப் பெண் போட்டியாளர்களும் உங்கக்கிட்டதான் ரொம்ப செல்லமா இருக்காங்கனு ஒரு வதந்தி இருக்கே..!''

(சின்னதாக யோசித்து சட்டெனப் பதில் சொல்கிறார்) ''தாத்தா, அப்பானு நினைச்சுப் பேசுவாங்க தம்பி. இதைப் போய் விவகாரமாக்கிட்டு'' - சிலீரெனச் சிரிக்கிறார் தாத்தா, 'அவருக்கே உரிய உற்சாகத்துடன்!

- சி.காவேரி மாணிக்கம், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்