பெண்களுக்கும் பிடிச்ச ப்ரேக்-அப் பாட்டு! | vijay sethupathi, விஜய் சேதுபதி

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (23/09/2013)

கடைசி தொடர்பு:12:31 (23/09/2013)

பெண்களுக்கும் பிடிச்ச ப்ரேக்-அப் பாட்டு!

''ஜாலியா இருக்கணும்னு மட்டும் முடிவு பண்ணி சின்னதா ஒரு டீஸர் போட்டோம். அஞ்சு நாள்ல பத்து லட்சம் ஹிட்ஸ். அப்பவே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைச்ச மாதிரி  எனர்ஜி ஏறிக்கிச்சு. அந்த உத்வேகத்தோட இப்போ டிரைலர் கட் பண்ணிட்டு இருக்கோம்!'' வார்த்தைகளில் உற்சாக வெள்ளம் கொட்டுகிறார், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குநர் கோகுல்.  

''நீங்க இயக்கிய 'ரௌத்திரம்’ படத்தில் ஆக்ஷன் அத்தியாயங்கள் நச்னு வந்திருக்கும். ஆனா, அடுத்த படமே காமெடியைக் கையில் எடுத்தது ஏன்?''

''எத்தனை நாளைக்குத்தான் பாஸ் அடிக்கறதும் முறைக்கறதுமா படம் எடுக்கறது? 'ரௌத்திரம்’ பண்ணிட்டு இருக்கும்போதே, அடுத்தது காமெடிதான்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் தவிர 'ரௌத்திரம்’ படத்தின் காமெடி போர்ஷனுக்குக் கிடைச்ச வரவேற்பு அந்த ஆசையை அதிகமாக்கிடுச்சு. 'இ.ஆ.பா.’ படத்தின் ஆன்மா காமெடிதான்.  படம் முடிஞ்சு பார்க்கிங்ல பைக் எடுக்க வர்ற யாரும் கோபமா, ஆதங்கமா விமர்சனம் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க. பைக் தொலைஞ்சே போயிருந்தாலும் பரவாயில்லைனு சந்தோஷமா வீட்டுக்குப் போவாங்க. அந்தளவுக்கு படம் முழுக்க பட்டாசா இருக்கும்!''

''படத்துக்கு ஒரு பளிச் பன்ச்சை தலைப்பு வைச்சுட்டீங்க. ஆனா, டீஸர்ல வந்த 'சுமார் மூஞ்சி குமார்’ பட்டம் பயங்கரமா பத்திக்கிச்சே..!''

''நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் ஜாலியா 'இதுக்குத்தானே ஆசைப்பட்டே’னு கிண்டலடிப்பாங்க இல்லையா? அந்த மூட் படம் முழுக்க இருக்கும். அதுக்காக அந்த டைட்டில் வைச்சோம். ஆனா, டீஸர்ல வந்த 'சுமார் மூஞ்சி குமார்’ பட்டமும் பெரிய ரீச் ஆகிருச்சு. 'சுமார் மூஞ்சி குமாரா’ விஜய் சேதுபதி  அள்ளு கிளப்பிருக்கார். படம் முழுக்க பல முறை காதல் சொல்லிட்டே இருப்பார். ஆனா, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்டைல்ல இருக்கும். எவ்ளோ கேவலமா திட்டினாலும், 'என் மேல உனக்கு கோபம் இல்லையே’னு அலட்டிக்காம கேப்பார்.  'நான் காதல்ல பல்பு வாங்குன பையன். அதனால என் வாழ்க்கைல ஒளி வீசுதே’னு போங்கு வாங்குனதைக் கூட நல்லவிதமா எடுத்துக்குவார்!''

''முன்னாடி வளரும் இளம் நடிகர். இப்போ மூணு ஹிட்டுக்கு அப்புறம் ஸ்டார் ஆகிட்டாரு விஜய் சேதுபதி. அந்த வித்தியாசம் எதுவும் தெரிஞ்சதா?''

''அவர் ஸ்டார்னு நீங்க சொல்லித்தான் எனக்கு ஞாபகமே வருது. திறமை ப்ளஸ் எளிமை மட்டும்தான் அவரோட அடையாளமா இருக்கு. 'பீட்சா’ படத்துக்கு முன்னாடியே அவர்கிட்ட இந்தக் கதை சொல்லிட்டேன். இருந்தாலும் பக்கா சென்னைப் பையனா நடிப்பாரானு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.  அதனால உடனே அவரை கமிட் பண்ணிக்கலை. அதுக்கு இடையில அவர் நடிச்ச மூணு படங்கள் அப்ளாஸ் அள்ளிருச்சு. 'இவர் நமக்கு செட் ஆவாரா’னு நான் யோசிச்சது போய், 'இவன் படம் நமக்குத் தாங்குமா’னு அவர் யோசிக்கிற சூழ்நிலை வந்திருச்சு. ஆனா, அப்ப அவரே, 'சார்... அந்த கேரக்டர்ல நான் இருக்கேன்தானே? மறுபடியும் வந்து நடிச்சுக் காட்டவா’னு கேட்டார். கூப்பிட்டதுமே  ரிகர்சலுக்கு வந்தார். படத்துக்காக மெட்ராஸ் பாஷை கத்துக்கிட்டார். அந்த ஆர்வம்தான் அவரோட முக்கியமான ப்ளஸ்!''

''டீஸர்ல பெண்களைக் கிண்டல் பண்ற மாதிரி 'ப்ரேயர் ஸாங்’ வெச்சுருக்கீங்களே..! அது தப்பில்லையா?''

''இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம்கூட வரலையே எங்களுக்கு. அந்தப் பாட்டைக் கேட்டா  பொண்ணுங்கதான் விழுந்து விழுந்து  சிரிப்பாங்க பாஸ். 'எங்கிருந்தாலும் வாழ்க’ பாட்டை 'சுமார் மூஞ்சி குமார்’ பாடினா எப்படி இருக்குமோ, அதுதான் அந்தப் பாட்டு. முன்னாள் காதலிக்கு எதுவும் சிக்கல் வரணும்னு பாட மாட்டான். 'உன்னைத் தூங்கவிடாம கொசு கடிக்கணும். அதையும் மீறி தூங்கிட்டா, பவர் ஸ்டார் உன் கனவுல வரணும்’னு பாடுவான். முதல் முறையா பெண்களுக்கே பிடிச்ச ப்ரேக்-அப் பாட்டு அது!''

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்