உங்ககிட்ட ரெண்டு கால்... என்கிட்ட ரெண்டு கை! - இது Fools பாலிசி | நவீன், பாண்டிராஜ், சென்றாயன், சிந்து, naveen, pandiraj, sentrayan, sindhu

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (05/10/2013)

கடைசி தொடர்பு:12:54 (18/06/2018)

உங்ககிட்ட ரெண்டு கால்... என்கிட்ட ரெண்டு கை! - இது Fools பாலிசி

முதல்முறையாக பளீர் புகழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் கூச்சம், 'மூடர்’கள் கண்களில் மின்னுகிறது!

 தமிழ் சினிமாவில் ஒரு 'திடுக்’ அலையை உண்டாக்கிய 'மூடர்கூடம்’ உழைப்பாளிகளுடன் 'விகடன் ஸ்பெஷல் சந்திப்பு’. 'ப்ளாக் காமெடி’ வகை படமான 'மூடர்கூடம்’ படத்தின் கதையைக் காட்டிலும், அதீத சுவராஸ்யம்... அந்தப் படத்தின் மேக்கிங் டிராஜிடி!

'' 'பசங்க’ படத்துல அசோஸியேட்டா இருந்தவன் நவீன். 'மூடர்கூடம்’ ஸ்கிரிப்ட்டை என்கிட்டதான் முதல்ல படிக்கக் கொடுத்தான். 'சூப்பரா இருக்குடா... 'மெரினா’ முடிச்சுட்டு வந்துர்றேன். நானே தயாரிக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இரு’னு சொன்னேன். 'இல்லைண்ணே... நானே தயாரிச்சுடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு’னு சொன்னான். ரொம்பக் கஷ்டப்பட்டு படத்தை முடிச்சான். படம் பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன். 'நானே ரிலீஸ் பண்றேன்’னு சொல்லி வெளியிட்டேன். இந்தப் படத்தை வெளியிட்டதாலேயே, இப்போ எனக்கு இண்டஸ்ட்ரியில நல்ல பேர். தேங்க்ஸ்டா தம்பி!'' என்று நவீனைக் கட்டி அணைத்து நெகிழ்கிறார் 'பசங்க’ பாண்டிராஜ்.

'மூடர்கூடம்’ முன்கதைச் சுருக்கம் சொல்லத் தொடங்கினார் அந்தப் படத்தின் இயக்குநர் நவீன்.

''ஈரோடு பக்கம் கொக்கராயன்பேட்டைதான் சொந்த ஊர். வளர்ந்தது, கரூர் காகிதபுரம். பாலிடெக்னிக் படிப்புல 'வட்டியும் முதலும்’ ராஜு முருகன் எனக்கு சீனியர். பாண்டிராஜ் அண்ணன்கிட்ட 'மூடர்கூடம்’ கதை சொன்ன பிறகு நிறையத்  தயாரிப்பாளர்கள், ஹீரோக்களிடம் கதை சொன்னேன். 'ஹீரோ ஹீரோயின் எப்போ சந்திப்பாங்க?’, 'இடைவேளைக்குள்ள ரெண்டு பேருக்கும் காதல் வந்துடும்ல?’னு வழக்கமான மைண்ட்செட்ல கதை கேட்டாங்க. 'காமெடிப் படம்னு சொன்னீங்க. காமெடியே இல்லை’னுலாம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாங்க. அதான் நானே தயாரிக்கலாம்னு இறங்கினேன். என் அக்காவும் மச்சானும் அவங்களோட வாழ்நாள் சேமிப்பைக் கொடுத்து ஷூட்டிங்கை ஆரம்பிச்சுவெச்சாங்க. நிறைய நண்பர்கள் அஞ்சு லட்சத்துல ஆரம்பிச்சு, 20 ஆயிரம் வரை அவங்களால முடிஞ்சதைக் கொடுத்து உதவினாங்க. ஒரே நாள் பழக்கத்துல பணம் கொடுத்தவங்களும் உண்டு. படத்துல வேலைக்கார அம்மாவா நடிச்ச பெண்ணுக்கு நாங்க ரெண்டு லட்சம் கொடுக்குற மாதிரி காட்சி இருக்கும். ஆனா, உண்மையில் அந்த கேரக்டர்ல நடிச்ச என் தோழி ஆதிரா, ஷூட்டிங் நடக்க தன் பங்கா 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க.

ஊட்டியில பாட்டு ஷூட் பண்ணிட்டு இருந்தப்போ, யூனிட் ஆட்களுக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுக்க காசு இல்லை. சாப்பிடாம எவ்வளவு நேரம்தான் ஷூட் பண்ண முடியும்? வேற வழியில்லாம ஆதிராவை போன்ல கூப்பிட்டு சூழ்நிலையைச் சொல்லி, '20 ஆயிரம் ரூபாயை என் அக்கவுன்ட்ல போட்டுவிடுங்க’னு சொன்னேன். அவங்க அனுப்பி வெச்சதும்தான் எல்லாரும் சாப்பிட்டோம். போன உயிர் திரும்பி வந்துச்சு.

டைட்டில் கார்டுபடி பார்த்தா படத்துல நடராஜன் சங்கரன் 'இசையமைப்பாளர்’னு மட்டும்தான். ஆனா, அவர் இந்தப் படத்துல பார்க்காத வேலையே இல்லை. அந்த 'கிரேட் டேன்’ நாய்க்கான பாட்டை படம் பிடிக்கலாம்னு ஒரு வீட்டை ஃபிக்ஸ் பண்ணி வெச்சிருந்தோம். ஆனா கடைசி நேரத்துல, 'கண் திருஷ்டி பட்டுரும்’னு சொல்லி அனுமதி மறுத்துட்டாங்க. அப்புறம் ஒரு பழைய மில்லை வாடகைக்கு எடுத்து, பெரிய ஹால் முழுக்க கறுப்புத் துணி கட்டிப் படம் பிடிச்சோம். அதுக்காக பல துணிக்கடை ஏறி இறங்கி 7,500 மீட்டருக்கு கறுப்புத் துணி வாங்கி தைச்சு எடுத்துட்டு வந்தது நடராஜன் சங்கரன்தான். படத்துல ஜெயப்பிரகாஷ் சார் வீடா வர்றது, ஒரு கோழிப் பண்ணையோட மொட்டைமாடினு சொன்னா நம்புவீங்களா? ஆனா, அதான் உண்மை! அதே சமயம் ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்படுதுனு சொல்லி சில நொடிகள் மட்டும் வர்ற பாட்டுக்கு கிராஃபிக்ஸ் பண்ண 22 லட்ச ரூபாய் வரை செலவு பண்ணோம். 'மூடர்கூடம்’ என் தனிமனிதப் படைப்பு இல்லை. அதுல என் நண்பர்களின் உழைப்பு, வியர்வை, ரத்தம் எல்லாமே கலந்திருக்கு!''- மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நவீனை அணைத்துக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுக்கிறார்கள் அவரது சகாக்கள்.

நவீனைத் தொடர்ந்து மற்ற 'மூடர்’களின் முன்கதைச் சுருக்கம் தொடர்கிறது...

'' 'தலைகீழா நிக்கிறதுலாம் ஜுஜூபி மேட்டர் சார்’னு ஜெயப்பிரகாஷ் சாரை அவ்ளோ கலாய்ச்சேன். ஆனா, மைக்கேல் ஜாக்சன் கெட்-அப் பாட்டுல என்னைத் தலைகீழா நிக்க வெச்சப்போதான் தெரிஞ்சது, அது எவ்ளோ பெரிய தண்டனைனு. கண்ணு முழிலாம் வெளில வந்துருச்சுண்ணே! அட, அதைக்கூட சமாளிச்சுட்டேன்னு வைங்களேன்... ஆனா, ஓவியாவைக் கட்டிப்பிடிச்சு நடிச்ச அடுத்த நாள், காய்ச்சல்ல விழுந்துட்டேன்!'' என்று ஸ்க்ரீன் சேட்டைகளை நேரிலும் செய்கிறார் சென்றாயன். 'பயபுள்ள அந்த அளவுக்கு காய்ஞ்சு கெடந்துருக்கான்!’ என வாரும் கமென்ட்டுகளைக் கண்டுகொள்ளாமல் தொடர்கிறார் சென்றாயன்.

''நமக்கு தேனிப் பக்கம் போடிநாயக்கனூர். அப்பா, அம்மா கல்குவாரி தொழிலாளர்கள். 13 வருஷம் முன்னாடி சினிமாப் பித்து தலைக்கேறி சென்னை வந்தேன்.  என்ன பண்ணி    நடிக்கிற வாய்ப்பு பிடிக்கலாம்னு, சைக்கிள்ல போறப்பவே ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போறதுனு இல்லாத அட்டூழியம்லாம் பண்ணியிருக்கேன். ஒரு தடவை, பொணமா நடிக்க ஆறு பேர் தேவைனு கேள்விப்பட்டு போய் நின்னா, அங்கே எனக்கு முன்னாடி 13 பேர் போட்டிக்கு நிக்கிறாங்க. உடனே ஆளுங்களை ஃபில்டர் பண்றதுக்காக, 'எங்கே நடிச்சுக் காமிங்க’னு சொன்னாங்க. 'பொணமா என்னத்தடா நடிக்கிறது?’னு யோசிச்சுட்டே சும்மா படுத்திருந்தேன். 'உங்க நடிப்பு நல்லா இல்லை’னு என்னை அனுப்பிச்சாட்டங்கண்ணே. அப்படி இப்படினு இப்பத்தான் ஒரு கதவு திறந்திருக்கு. அதோட நமக்கு லவ் மூடும் ஆரம்பிச்சிருச்சு. ஒரு பொண்ணைக் காதலிக்கிறேண்ணே... சீக்கிரமே கல்யாணம்!'' என்று வெட்கப்படுகிறார் சென்றாயன்.

''படத்துல என்னை 'முட்டாள்’னு சொன்னா கோபம் வரணும். நான் அந்த கேரக்டராவே வாழ ஆரம்பிச்சுட்டேன். ஊட்டில ஷூட்டிங் நடந்தப்போ, ஒரு ராத்திரி எல்லாரும் தூங்கிட்டு இருக்கோம். அப்போ ராத்திரி ரவுண்ட்ஸ் வந்த போலீஸ், 'ஆள் ஒருமாதிரி சைஸா இருக்கானே’னு என்னைத் தட்டி எழுப்பி துப்பாக்கி நீட்டி விசாரிச்சார். நான் சினிமா போலீஸ்னு நினைச்சு 'காமெடி பண்ணாமத் தூங்கவிடுங்கடா’னு சொல்லி அடிக்கலாமானு யோசிச்சேன். ஆனா, கடைசி நிமிஷத்துல கிரேட் எஸ்கேப்!''-விபரீதத் தலைப்புச் செய்தியில் இருந்து தப்பித்த சந்தோஷத்தில் பேசுகிறார் குபேரன்.

''என்னடா இங்கே படத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தன் உட்கார்ந்து இருக்கான்னு பார்க்குறீங்கள்ல? நான்தாங்க வக்கா..!'' 'சுடுறதுக்குத்தான்டா துப்பாக்கி தேவை... சுட மாட்டேன்னு சொல்றதுக்கு துப்பாக்கி தேவை இல்லை!’ என்று கருகரு தாடியும் சுருள் முடியுமாக லொள்ளு பண்ணிய தாடிவாலாவின் இயற்பெயர் ரிஷி. மேடை நாடகக் கலைஞர்.

உதார்விட்டு உச்சா போன ஆட்டோ குமாராக நடித்த சஞ்சீவி, கூத்துப்பட்டறை வார்ப்பு. ''நிறையப் படங்கள்ல, 'அதோ போறாரே... அவர்தான்’னு சொல்ற மாதிரி ஒற்றை வரி டயலாக் நிறைய பேசி மொக்கை வாங்கி இருக்கேன். ஆனா, நவீன் என்கிட்ட முழு ஸ்கிரிப்ட்டையும் படிக்கக் கொடுத்தப்போ, அவர் என் மேல வெச்சிருந்த நம்பிக்கை புரிஞ்சது. எனக்குப் பிடிச்ச சென்னைத் தமிழ் பேசவெச்ச நவீனுக்கு நன்றி!'' என்கிறார் சஞ்சீவி.

படத்தில் சலீம் பாயாக நடித்த மகேஷ்வரன், படத்தில் நடித்த அதே சாயலில் அமைதியாக ஆனால், அழுத்தமாகப் பேசுகிறார். '' 'நாளை’, 'சக்ரவியூகம்’ படங்களின் இயக்குநர் நான். ஒளிப்பதிவாளர் நட்டி எனக்கு நல்ல தோஸ்த். அவரைப் பார்க்க வந்த நவீன் அங்கே இருந்த என்னைப் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டார். எனக்கு நடிக்கிற ஆசையும் இல்லை, நடிக்க வருமான்னும் தெரியாது. 'என் கதையில நான் கற்பனை செஞ்சுவெச்சியிருக்குற சலீம் பாய் மாதிரியே இருக்கீங்க. வாங்க பாய்’னு பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டார். இனி தொடர்ந்து நடிக்கலாம்னு இருக்கேன்!'' என்று ஸ்டைல் பார்வை வீசுகிறார் மகேஷ்வரன்.

''பாட்டு இருக்கிறதாலயே என்னை ஹீரோனு சொல்லிக் கலாய்க்காதீங்க. என் பேர் ராஜாஜ். ஆனா, வெள்ளையா இருக்கேன்னு சொல்லி, 'ஒயிட்’னு படத்துல பேர் வைச்சுட்டார் நவீன். படத்துல எந்தளவுக்கு முக்கியம்னு தெரியலை, ஆனா, நவீனின் நிஜ வாழ்க்கையில் என் கேரக்டருக்கும் முக்கியமான பங்கு இருக்கு. ஏன்னா, படத்துல என் கேரக்டர் மூலமாகத்தான் டைரக்டர் சாருக்குக் காதல் கைகூடி இருக்கு!'' என்று ராஜாஜ் சொல்ல, நவீன், சிந்து ரெட்டி முகங்களில் ஒரே சமயத்தில் வெட்கப் பூரிப்பு!

'மூடர்கூடத்தில்’ ராஜாஜுக்கு ஜோடியாக நடித்த சிந்து ரெட்டி, இப்போது நவீனின் காதல் மனைவி. படப்பிடிப்பு சமயம் இருவருக்குள்ளும் பற்றிக்கொண்டிருக்கிறது காதல் பாஸ்பரஸ்.

  ''நவீன் காதலின் பின்கதைச் சுருக்கத்தை நான் சொல்றேன்!'' என்று ஆரம்பித்தார் பாண்டிராஜ்.

''முதல்ல படத்தை நானே தயாரிக்கிறேன்னு சொன்னான். அப்புறம், 'நடிக்க ஹீரோ கிடைக்கலை... நானே நடிக்கிறேன்’னு வந்து நின்னான். 'சிந்து ரெட்டினு ஒரு பொண்ணு நடிக்குது’னு நடுவுல தகவல் சொன்னான். திடீர்னு படத்துல ஒரு காதல் பாட்டு எழுதியிருக்கேன்னு அதிர்ச்சி கொடுத்தான். ப்ரிவியூ ஷோல பார்த்தா, 'டேய் நவீன்’னு அந்தப் பொண்ணு இவனைக் கூப்பிடுது. அப்பவே எனக்கு லேசா சந்தேகம். ஆனா, 'ச்சே... ச்சே... சின்னப் பையன்தானே. டைரக்டர் அந்தஸ்து பார்க்காம ஈகோ இல்லாம எல்லார்கிட்டயும் பழகி வேலை வாங்கியிருப்பான்’னு நினைச்சேன். ஆனா, இவன் இவ்ளோ க்ளோஸா வேலை பார்த்தது அந்தப் பொண்ணுகூட மட்டும்தான்னு அப்புறம்தான் தெரியுது. பட ரிலீஸ் ஆகுறதுக்குள்ள ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வந்து நிக்கிறாங்க!''

நவீன் முகத்தைப் பார்த்துக்கொண்டே மென்மையாகப் பேசினார் சிந்து. ''முஸ்லீம் பெண்ணாக நடிக்க நவீன் ஆள் தேடிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டு என் புரொஃபைல் கொடுத்தேன். ஆனா, 'பொண்ணு நல்லா இல்லை...’னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாரு. 'ஏன் என்னை ரிஜெக்ட் பண்ணீங்க?’னு நான் கேட்க, அப்புறம் டெஸ்ட் ஷூட் பண்ணிப் பார்த்துட்டு ஓ.கே. சொன்னார். மத்ததெல்லாமே தன்னால நடந்தது!'' என்று மிகச் சுருக்கமாக காதல் கதையை முடித்துக்கொண்டார்.

நிறைவாகப் பேசத் தொடங்கினார் நவீன்.

''சிம்புதேவன் சார்கிட்ட 'இம்சை அரசன்’, 'அறை எண் 305-ல் கடவுள்’ படங்கள்ல உதவியாளராகவும், பாண்டிராஜ் சார்கிட்ட 'பசங்க’ படமும் வேலை பார்த்தவன் நான். 'மூடர்கூடம்’ மாதிரி படத்துக்கு பெரிய பட்ஜெட் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். அதனாலேயே, நிறைய க்ளோஸ்-அப் காட்சிகளும் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்து ரசிகர்களைத் திசை திருப்பும் விதமா ஸ்க்ரிப்ட் எழுதினேன். ஒரே அறைக்குள் நடக்கும் கதை அடிக்கடி ரிலாக்ஸ் ஆகணும்னுதான் நாய், பொம்மைக்குக்கூட முன்கதைச் சுருக்கம் வெச்சேன். சம்பளம் கொடுக்க முடியலைன்னாலும் பரவாயில்லை... நல்ல நடிகர்கள்தான் நடிக்கணும்னு தேடித் தேடி ஆட்களைப் பிடிச்சேன். 'ஜாப் எத்திக்ஸ்’ திருடனா நடிச்சது என் நெருங்கிய நண்பன் பாபி. அதிகம் டேக் வாங்காம ட்யூப் ஜாக்கெட் ஜெர்கின் பேன்ட் உடைகள்னு அவனால முடிஞ்ச அளவுக்கு அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்தான். ஜெயப்பிரகாஷை போன்ல வெறுப்பேத்தும் அந்தக் குட்டிப் பாப்பா ரிந்தியா சிவபாலன், நாலைஞ்சு டேக்லயே நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேல பின்னிட்டா. அந்த 'க்ரேட் டேன்’ நாய்க்காக அலைஞ்சப்போ, ஒரு வீட்ல 'பெப்பரெப்பே’னு உட்கார்ந்துட்டு இருந்த சபீஷை, 'நடிடா’னு கூட்டிட்டு வந்துட்டேன். படத்துல என்னை ஒருவித மையலோட பார்க்கும் மானசா மது, 'நண்பன்’ல சின்னதா நடிச்ச பொண்ணு. ரைட் ராயலா இங்கிலீஷ் பேசி எல்லாரையும் பயமுறுத்துவா. அவளை நடிக்கவைக்க அவங்க அப்பா அம்மாகிட்டகூட சம்மதம் வாங்கிட்டோம். ஆனா, அவ படிச்ச ஸ்கூல் மேடம் கடைசி வரை மானசாவை நடிக்க வைக்கச் சம்மதிக்கலை. இந்த மாதிரி சூழ்நிலைகள்ல என்கிட்ட இருக்கிற 'லாஸ்ட் புல்லட்’ அஸ்திரத்தைப் பயன்படுத்துவேன். அது, 'உங்ககிட்ட ரெண்டு கால் இருக்கு... என்கிட்ட ரெண்டு கை இருக்கு’னு சாஷ்டாங்கமா கால்ல விழுறது. அந்த அளவுக்குப் போனதும் அவங்க அலறியடிச்சு ஓ.கே. சொல்லிட்டாங்க!'' என்று சிரிக்கும் நவீன் சின்ன இடைவெளி விட்டுச் சொல்கிறார்...

'' 'நல்ல படம்’னு சமூக வலைத்தளங்கள்ல கமென்ட்ஸ் மட்டும் கிடைச்சது. 'விகடன்லயே 50 மார்க் கொடுத்திருக்காங்கன்னா, அப்ப நீ நல்ல படம்தான் எடுத்திருக்க’னு என் ஊர் டெய்லர் அண்ணன்ல ஆரம்பிச்சு சொந்தக்காரங்க வரை பேசுறாங்க. விகடன் விமர்சனத்துக்குப் பிறகுதான் நிறைய சினிமா பிரபலங்களே படம் பார்த்துட்டுப் பாராட்டுறாங்க. ஆனா, இதுல ஒரு காமெடி என்னன்னா, படத்தைப் பத்தி நல்ல பேச்சு கிளம்பி அதைப் பார்க்கலாம்னு ஆசைப்படுறவங்க பலரால் படத்தைப் பார்க்க முடியலை. ஏன்னா, மிகச் சில தியேட்டர்கள்ல ஒரு ஷோ மட்டும்தான் படம் ஓடுது. இது என் ரியல் லைஃப்ல நடந்த ப்ளாக் காமெடி!'' எனும் நவீனின் சிரிப்பு, ஆயிரம் அர்த்தங்களை அறைந்து உணர்த்துகிறது!

- ஆர்.சரண், ம.கா.செந்தில்குமார், படங்கள்: பொன்.காசிராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்