‘ட்விட்டர் காதல்’ சின்மயி! | ராகுல் ரவீந்தர், காதல் திருமணம், rahul raveendar, love marriage

வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (08/10/2013)

கடைசி தொடர்பு:12:29 (08/10/2013)

‘ட்விட்டர் காதல்’ சின்மயி!

'சர சர சாரக்காத்து’ சின்மயிக்குக் கல்யாணம்; காதல் கல்யாணம்!

மாப்பிள்ளை...ராகுல் ரவீந்தர். 'மாஸ்கோவின் காவிரி’, 'விண்மீன்கள்’ படங்களில் ஹீரோவாக நடித்த ராகுல், தெலுங்கில் வளர்ந்துவரும் ஹீரோ. 'வணக்கம் சென்னை’ படத்திலும் நடித்திருக்கிறார். சின்மயியுடனான காதல் அத்தியாயங்களைக் கேட்டவுடன், ''அதெல்லாம் பெர்சனல் பாஸ்!'' என்று ஏகத்துக்கும் வெட்கப்பட்டவர், ''பேசிப் பேசிக் கரைத்தேன்'' என்றார்.

''ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி அறிமுகம் ஆனீங்க?''

''போன வருஷம் என் முதல் தெலுங்குப் படமான 'அந்தாள ராட்சஷி’யில் ஹீரோயினுக்குப் பின்னணி குரல்கொடுக்க சின்மயியை சிபாரிசு பண்ணாங்க. சின்மயி ஏற்கெனவே தெலுங்கில் சமந்தாவுக்குக் குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க குரல் ஒருமாதிரி ஹஸ்கியா இருக்கும். ஆனா, 'அந்தாள ராட்சஷி’ ஹீரோயினுக்கு செம போல்டான கேரக்டர். அதனால் படத்தின் இயக்குநர்கிட்ட, 'சின்மயி குரல் நம்ம ஹீரோயினுக்கு செட் ஆகுமா?’னு சந்தேகமாக் கேட்டேன். 'அந்தப் பொண்ணு எந்த கேரக்டருக்கும் குரல் கொடுக்கும்பா. ரொம்பத் திறமையான பொண்ணு’னு என்னை சமாதானப்படுத்தினார். நான் அரை மனசா சம்மதிச்சேன். ஆனா, படம் பார்க்கும்போது, சமந்தாவுக்கு வரும் அந்த ஹஸ்கி வாய்ஸ் ஓர் இடத்துலகூட வரலே. எங்க ஹீரோயின் கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருத்தமா இருந்தது. அசந்துட்டேன்!

அதுவரை நான் சின்மயியைப் பார்த்ததுகூட இல்லை. படம் வெளியான ரெண்டு வாரம் கழிச்சுதான் சின்மயியைச் சந்திச்சேன். அப்புறம் ட்விட்டர்ல தொடர்பில் இருந்தோம். அதுக்கப்புறம் ஒண்ணு, ரெண்டு தடவை சந்திச்சாலும் எங்களுக்குள் நட்பு மட்டும்தான் இருந்துச்சு. ஆனா, ட்விட்டர், வாட்ஸ்அப் உரையாடல்கள் அந்த நட்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போச்சு. ஒரு கட்டத்துக்குப் பிறகு காதலில் விழுந்தோம்!''

''யார் முதல்ல விழுந்தது?''

''நான்தான்! முதல்ல என் விருப்பத்தைச் சொன்னேன். என் தரப்பில் 'ஆல் க்ளியர்’னு சொன்னேன். 'இந்த நட்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப்போனா, நல்லா இருக்கும்’னு ரொம்பக் கனிவான வார்த்தைகளில் சொன்னேன். கொஞ்சம் யோசிச்சாங்க. அப்புறம் அவங்ககிட்ட இருந்தும் க்ரீன் சிக்னல்தான்!''

''ஆனா, ட்விட்டரால்தானே சின்மயி நிறைய பிரச்னைகளும் சந்திச்சாங்க?''

''அந்தச் சமயம் நான் அவ்ளோ க்ளோஸ் கிடையாது. அவ ரொம்பத் துடிப்பாப் பேசினாலும், மனதளவில் ஒரு குழந்தை. அது எனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்!''

''சின்மயிகிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன?''

''அவங்களோட துணிச்சலும் புத்திசாலித்தனமும்! என் பூர்விகம் தஞ்சாவூர் பக்கம் இளங்கார்குடி. எம்.பி.ஏ. முடிச்சுட்டு மும்பையில் நல்ல வேலையில் இருந்தேன். ஆனா, சினிமா ஆசையால் அதை விட்டுட்டு வந்துட்டேன். நினைச்சபடி வாழணும்னு ஆசைப்படுவேன் நான். சின்மயியும் அதே கேரக்டர்தான். அதுதான் எங்களை இணைச்சது!''

''கல்யாணத்துக்குப் பிறகு?''

''இன்னும் கல்யாணம் எப்பன்னே தெரியலைங்க? நான் என் கேரியருக்காக ஹைதராபாத்லதான் இருக்கணும். சின்மயி சென்னையில் இருந்தாக வேண்டிய சூழல். அதனால் மாசத்தில் சில நாட்கள்தான் நாங்க சேர்ந்து இருக்க முடியும். எத்தனையோ ஜோடிகள் இப்படி இருக்கிறதில்லையா? 'வணக்கம் சென்னை’ படத்தில் ஒரு பாட்டு ப்ளஸ் கதைக்கே ட்விஸ்ட் கொடுக்கும் சின்னக் கதாபாத்திரம் எனக்கு. அந்த ஓப்பனிங் மூலமா தமிழ் சினிமாவில் ஒரு பளிச் இடம் கிடைக்கணும் எனக்கு. அதுக்காகத்தான் ரெண்டு பேரும் காத்திருக்கோம்!''

''சின்மயி பாடியதில் எந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்?''

'' 'தெய்வம் தந்த பூவே...’ சான்ஸே இல்லை... பின்னியெடுக்கும் ஃபாஸ்ட்பீட் மெலடி!''

''ரெண்டு பேரும் அடிக்கடி சந்திக்கும் மீட்டிங் பாயின்ட்... மறக்கமுடியாத காதல் பரிசுகள்?''

''ஹைதராபாத்ல சுத்துனா என்னை ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சிருவாங்க. தமிழ் நாட்டில் சின்மயி எவ்வளவு பாப்புலர்னு நான் சொல்ல வேண்டாம். அதனால், எங்கேயும் வெளியே போனதே இல்லை. ஒரே ஒருமுறை 'வணக்கம் சென்னை’ ஸ்பாட்டுக்கு வந்தாங்க. அதுவும் என்னைப் பார்க்க வரலை. ப்ரியா ஆனந்தைப் பார்க்க வந்தாங்க. காதல் ரகசியம் வெளியே வந்துரக் கூடாதுன்னு சேர்ந்து அவுட்டிங் போனதே இல்லை. அதான், இப்ப வெளியே வந்துடுச்சே. இனி சேர்ந்து சுத்தலாம். மறக்கமுடியாத பரிசைப் பத்தி ஓப்பனா சொன்னா... அவ உதைப்பாளே!''

சின்மயி... காதல்குறித்து என்ன சொல்கிறார்?

''சினிமால வர்ற மாதிரி மலை உச்சி மேலே நின்னுட்டு... ஊர், உலகத்துக்கே கேட்கிற மாதிரி சத்தம் போட்டு என் காதலைச் சொல்ல ஆசைதான். ஆனா, அதுக்கெல்லாம் ஸ்பேஸ் கொடுக்காம நீங்க ரகசியத்தைப் போட்டு உடைச்சிட்டீங்க. இதுக்கு மேல் என் காதலைப் பத்தி நான் பேச மாட்டேன். 'மனதுக்கு நெருக்கமான உறவை பராமரிப்பது எப்படி?’னு ஒரு புத்தகம் எழுதுற ஐடியா இருக்கு. அதுல என் காதல்குறித்த ரகசியங்களை ஷேர் பண்ணிக்கிறேன்!''

சீக்கிரம் ஷேர் பண்ணுங்க சின்மயி!

- க.ராஜீவ் காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்