“ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை!”

'' கயல்விழி... அவளைச் சுத்தி நடக்கும் விஷயங்கள்தான் 'கயல்’! என் கடைசி இரண்டு பட வெற்றிகள் கொடுத்த தைரியம்தான் 'கயல்’. ஓர் இயக்குநரா, படைப்பாளியா நான் செய்ய நினைச்சதை, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா செய்ய ஆரம்பிச்சிருக்கேன்!'' -உற்சாகமும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் இயக்குநர் பிரபு சாலமன். 'மைனா’வில் உருகவைத்து, 'கும்கி’யில் மிரளவைத்த பிரபு சாலமனின் அடுத்த படம்... 'கயல்’!

'' 'மலைக் கிராமம்’, 'கும்கி யானை’னு தேடித் தேடி கதைக்களம் பிடிப்பீங்க... இதுல என்ன வித்தியாசம்?''

''இப்போ இருக்கும் சூழல்ல ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமா வெச்சு சினிமா பண்ணணும்னா, பாலியல் பலாத்காரம், கொலை, அடிதடி, ரத்தம், துரோகம்னுதான் யோசிக்கவே தோணுது. ஏன்னா, நம்ம சமூகம் அப்படித்தான் இருக்கு. நான் அதுல இருந்து வெளியே வர நினைக்கிறேன். மென்மையா, அழகா, இயல்பா ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சொல்ல ஆசை. மைனா, அல்லி கேரக்டர்கள் போலவே கயலும் ரசிக்கக்கூடிய ஹீரோயினா இருப்பா. அவ ரொம்ப ரொம்ப அப்பாவிப் பொண்ணு. வீட்ல ஒரு டி.வி.கூட இல்லாத  வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவள். காதலைப் பத்தின எந்த எண்ணமும் புரிதலும் இல்லாதவள். அவளுக்குக் காதல் வந்தா என்ன ஆகும்? அதான் கதை!''  

''மொத்தப் படத்தையும் தாங்க, புது ஹீரோயின் போதும்னு முடிவு பண்ணிட்டீங்களா?''

'' 'கயல் இப்படித்தான் பார்ப்பா’, 'இப்படித்தான் திரும்பிச் சிரிப்பா’னு என் மனசுக்குள்ள நானே ஒரு ஸ்கெட்ச் போட்டுவெச்சிருந்தேன். ஏழு மாசம் தேடியும் அந்த ஸ்கெட்ச்சுக்கு பக்கத்துலகூட யாரும் வரலை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பல மொழிகளில் ஏகப்பட்ட ஹீரோயின்கள், வாய்ப்பு தேடும் பெண்கள்னு சலிச்சுப் பார்த்தோம். யாரும் தேர்வாகலை. 'அட, எந்த மாதிரிதான் பொண்ணு வேணும்னு நினைக்கிறீங்க?’னு என் அசிஸ்டென்ட்கள் கோவப்படும்போது கிடைச்சவள்தான் ஆனந்தி. நான் மனசுல நினைச்சுட்டு இருந்த கயல்விழியா, கண்ணு முன்னாடி நடமாடினாள். உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம்.  நாகர்கோவில், கன்னியாகுமரியில் நடக்கும் கதை. அந்த வட்டார மொழி தெரிஞ்ச ஒருத்தர் நடிச்சா நல்லா இருக்கும்னு, இமான் அண்ணாச்சியைப் பிடிச்சுப் போட்டோம்!''  

''எப்பவும் புதுமுகங்களை வெச்சே படம் பண்றீங்க... பிரபலங்களை இயக்குவதில் தயக்கமா?''

''தயக்கம்னு சொல்ல முடியாது. ஆனா, புதுமுகங்களை இயக்கும்போது ரொம்பச் சுதந்திரமா உணர்றேன். 'கும்கி’யில் அந்த அருவிக் காட்சிகளைப் படம்பிடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம். அந்த மலையின் உயரம் 950 அடி. 1,260 படிகள் ஏறணும். ஏற மூன்றரை மணி நேரம்... இறங்க இரண்டரை மணி நேரம். மேல போய் லைட்டிங் அது இதுனு எல்லாம் செட் பண்ண மூணு மணி நேரம் ஆகும். இந்தச் சிரமங்களையும் காத்திருத்தலையும் பிரபல நடிகர்கள் பொறுமையா ஏத்துப்பாங்கனு தோணலை. அதான், புதுமுகங்களை என் துணைக்கு வெச்சுக்கிறேன். 'அப்போ பெரிய ஹீரோக்களுக்குக் கதை சொல்லவே மாட்டீங்களா?’னு கேட்கிறாங்க. நான் ஒரு கதைசொல்லிதான். ஆனா, ரசிகர்களிடம் கதைசொல்லத்தான் எனக்கு விருப்பம். ஹீரோக்களிடம் அல்ல!''

''ரெவின்யூ-ரெவ்யூ... இதில் நீங்கள் இயக்கும் படங்கள் எந்தப் பக்கம் இருக்கணும்னு ஆசை?''

''எனக்கு இரண்டுமே வேணும். 'நான் ஒரு நல்ல படம் எடுத்துட்டேன்’னு சொல்லிக் கேட்டா, இங்கே ஒரு டீகூட வாங்கித்தர மாட்டாங்க. அது எவ்வளவு வசூல் பண்ணுச்சுங்கிறதுதான் முக்கியம். 'கொக்கி’ நல்ல படம்தான். ஆனா, ஓடலை. என் வெற்றி, சிலரைச் சந்தோஷப்படுத்தும். தோல்வி, பலரைப் பாதிக்கும். எனக்காக இல்லைனாலும், என்னைச் சார்ந்து இருக்கிறவங்களுக்காக நான் ஜெயிக்கணும். அதை நான் நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்கேன்!''

''தமிழ் சினிமா இயக்குநர்களில் உங்களிடம்தான் அதிக உதவி இயக்குநர்கள் வேலை பார்க்கிறாங்க... அதுக்கு என்ன காரணம்?''

''என்கிட்ட இப்போ 20 பேர் இருக்காங்க. சில பேரோட பேர்கூட எனக்குத் தெரியாது. புத்தகம் வாசிக்கிற பழக்கம் இல்லைங்கிறதால, இவங்களை நிறைய இயக்குநர்கள் சேர்த்துக்கலையாம். என்கிட்ட வந்தாங்க. 'புத்தகம் படிக்கலைனா என்ன, வாழ்க்கையைப் படிப்போம்’னு சேர்த்துக்கிட்டேன். ஏன்னா, எனக்கும் புத்தகம் வாசிக்கிற பழக்கம் கிடையாது. எதைப் பத்தியாவது தெரிஞ்சுக்கணும்னா, நான் நேரடியா அங்கே போயிருவேன். 'மைனா’, 'கும்கி’க்காக மட்டும் 12,000 கிலோமீட்டர் பயணம் செஞ்சிருக்கேன். என் சொந்த அனுபவம், நான் சந்திக்கும் மனிதர்களின் அனுபவங்கள்தான் என் சோர்ஸ். என் பசங்க பிரமாதமா வருவாங்க... பாருங்க!''

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!