ப்ரியமானவர்களின் பிரபஞ்சம்!

 ''நான் சின்னத்திரையிலேயே கடைசி வரை இருக்கணும்னு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே முடிவுபண்ணிட்டேன். அதில் உறுதியாவும் இருந்தேன். ஆனா, விதி வலியது. இப்போ, வருஷத்துக்கு ஒரு படம் பண்ணலாம்னு சினிமா தயாரிப்பாளர் ஆகிட்டேன்'' - சிரித்துக்கொண்டே பேசுகிறார் 'நீயா நானா’ நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி.

தமிழர்கள் மத்தியில் வாரம் ஒரு விவாதத்தைக் கிளப்பும் 'நீயா நானா’வில் பல்வேறு சமூகப் பிரச்னைகளை அலசிவரும் அனுபவமோ என்னவோ, ஆண்டனி தயாரிக்கும் முதல் படமான,  'அழகுக் குட்டிச் செல்லம்’, குழந்தைகளின் உலகத்தைப் பற்றியது!

''ஒரு படம்தான். ஆனா, அதுக்குள் ஆறு கதைகள் பல்வேறு கிளைகளில் பரவும். திரைக்கதையில் ஒண்ணுக்கொண்ணு அழுத்தமான தொடர்பு இருக்கும். இந்த உலகம் இயங்குவதே குழந்தைகளால்தான். வீட்டின் வரவேற்பறை தொடங்கி நாட்டின் நாடளுமன்றம் வரை எல்லா செயல்களும் அடுத்த தலைமுறையை மனசுல வெச்சுதான் நடக்குது. அதையே எங்கள் படத்துக்கும் சப்ஜெக்டாப் பிடிச்சோம். பல தளங்களில் குழந்தைகளின் உலகத்துக்குள் ரொம்ப நெருக்கமான பயணமா இருக்கும் இந்தப் படம். ஆனா, இது குழந்தைகளுக்கான படம் இல்லை!'' என்று படத்தின் டிரெய்லர் கட் சொல்கிறார் ஆண்டனி.

ஆண்டனியின் நண்பரும் 'நஞ்சுபுரம்’ படத்தின் இயக்குநருமான சார்லஸ், இந்தப் படத்தின் இயக்குநர்.  

'' 'பெண் குழந்தை பிறந்திருச்சே. ஆண் குழந்தை இல்லையே’னு ஒருத்தருக்குக் கவலை, 'குழந்தையே இல்லை’னு இன்னொருத்தருக்குக் கவலை,

18 வயசுல திருமணத்துக்கு முன் கர்ப்பமான ஒரு பெண்... இப்படி படம் முழுக்க யதார்த்தமான பல கேரக்டர்கள். ஆனா, முழுக்க முழுக்க பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பேசும் படம் இது. பார்க்கிற எல்லாருக்குமே நம்பிக்கை கொடுக்கும்; சந்தோஷம் கொடுக்கும். படத்தில் உரையாடல்கள் ரொம்ப ரொம்பக் குறைச்சலா இருக்கும். மௌனமான காட்சிகளின் மூலமே கதையை நகர்த்துவோம்!

படத்தில் எமோஷனல் சம்பவங்கள் நிறைய இருக்கும். அதேசமயம், காட்சிக்குக் காட்சி காமெடியா இருக்கும். படம் முழுக்கவே 'என்ன நடக்கும்’னு ஓர் எதிர்பார்ப்பு ஓடிட்டே இருக்கும்'' என்கிறார் சார்லஸ்.

இந்தக் கேள்வி ஆண்டனிக்கு...

''திடீர்னு ஏன் சினிமா தயாரிக்கும் ஆர்வம்?''

''நானும் சார்லஸும் ரொம்ப நாள் நண்பர்கள். நான் தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஆவணப்படங்கள் எடுத்துட்டு இருந்தேன். அப்போ என்னுடன் இருந்தவர் சார்லஸ். கைல ஒரு பைசாகூட இல்லாத அந்தச் சமயத்துல, பலரிடம் கதை சொல்வோம். மணிரத்னம் சார் ஆபீஸுக்குலாம் போய் கதை சொன்னோம். அப்போ நாங்க ஏறி இறங்காத தயாரிப்பு நிறுவனங்களே இல்லை. இப்போ யோசிச்சா, எவ்வளவு விளையாட்டுத்தனமா இருந்திருக்கோம்னு தோணுது. 'நம்ம கனவை நாமே சாத்தியப்படுத்தும் வாய்ப்பு இருக்கும் போது ஏன் தயங்கணும்?’னு முடிவு பண்ணி, களம் இறங்கிட்டோம்.

ஒரு சினிமா இயக்குநரா சார்லஸின் முதல் பட ரிசல்ட் பத்தி நான் கவலைப்படலை. ஆங்கிலத்தில், 'இன்டிபெண்டன்ட்’னு ஒரு பத்திரிகை வந்தது. அது தோல்வி அடைஞ்சிருச்சு. அதை யாருக்குமே பிடிக்கலை. ஆனா, அந்தப் பத்திரிகை எனக்குப் பிடிச்சிருந்தது. 'எங்க போனார் அந்தப் பத்திரிகையை நடத்தினவர்?’னு தேடினேன். மறுபடியும் அவரே ஆரம்பிச்சதுதான் 'அவுட்லுக்’ பத்திரிகை. அது வாசகர்களைத் திருப்திப்படுத்தியது. அதுபோல ஒரே ஒரு படத்தை வெச்சு, சார்லஸின் திறமையைக் குறைச்சு மதிப்பிட முடியாது. சார்லஸுக்கு சினிமா மொழி நல்லாக் கைவந்திருக்கு. இந்தப் படம் மூலம் மக்களுக்குக் கருத்து சொல்லணும், அவங்களை நல்வழிப்படுத்தணும்னு இல்லை. தியேட்டருக்கு வர்றவங்க சந்தோஷமா ஒரு துளி ஆனந்தக் கண்ணீரோட திரும்பிப் போகணும். அதுவே எங்களுக்கு வெற்றி. ஏன்னா, குழந்தைகள் மீதான பிரியமே, இந்தப் பிரபஞ்சத்தை உயிர்ப்போடு இயக்கும் ரகசியம்!''

- ஆ.அலெக்ஸ்பாண்டியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!