Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘என் மகன் அகதி ஆகணும்!’

''மிகத் துணிச்சலா ஒரு படத்தை எடுத்திருக்கேன். இத்தனை நாள் நான் வாழ்ந்ததுக்கு அடையாளம்தான் இந்தப் படம். இதை நான் கர்வமா சொல்லலை; பெருமையா சொல்றேன்'' - சிலாகித்துப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் அஜய். இலங்கை அகதிகளின் அவல வாழ்க்கைப் பதிவுதான் 'ராவண தேசம்’.

''நான் ஆந்திராக்காரன். என் தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா, ராணுவத்துல வேலை பார்த்தவர். சின்ன வயசுல இருந்தே தேசபக்தி, மத நல்லிணக்கம், மனிதநேயம்னு சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. நான் நடிகன் ஆகணும்னு சினிமா முயற்சிகள்ல இறங்கினப்போதான் ஈழத் தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வை கிடைச்சது. ஈழத்தில் இறுதிக்கட்டப் போர்ல நடந்த கொடூரங்கள் எல்லோருக்கும் தெரியும். இணையத்தில் அதுக்கு சாட்சிகள் நிறைய இருக்கு. அதைப் பத்தி ஆழமா யோசிச்சப்பதான், இயக்குநர் ஆவதற்கான தீப்பொறி எனக்குள்ள விழுந்தது.''

''படம் என்ன பேச வருகிறது?''

''ஈழத் தமிழர்கள், இலங்கை ராணுவத்துக்குத் தெரியாம ஒரு படகில் தமிழ்நாட்டுக்கு தப்பிச்சு வரப் பார்க்கிறாங்க. ராமேஸ்வரம் வரத் திசை தெரியாம தவிச்சி ஆந்திராவோட காக்கிநாடாவுக்கு வந்து சேர்றாங்க. அந்தப் பயணத்துல என்னென்ன நடக்குதுங்குற உண்மையை உருக்கமா சொல்லியிருக்கேன்.

என் மகனை டாக்டராக்கணும், கலெக்டராக்கணும் ஆசைப்படறவங்களுக்கு மத்தியில, ஈழத்துல மட்டும் 'என் மகன் அகதி ஆகணும்’னு ஆசைப்படறாங்க. அப்படியாவது அவன் எங்கேயாவது உயிரோட இருந்தாப் போதும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய வலி? அந்த வலிகளைத்தான் நான் படமாப் பதிவுசெஞ்சிருக்கேன்.''

'' இலங்கைப் பிரச்னை பத்தின படம் என்றால், நிறைய சமரசங்கள் செய்ய வேண்டி இருக்குமே?''

''இலங்கையில் இருக்கும் ஐ.நா. சபை அலுவலகம் முன்னாடி 'என் மகன் உயிரோட இருக்கானா?’னு விடை தெரியாத கேள்விகளோட, போட்டோவை வெச்சுக்கிட்டு நிற்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களை எனக்குத் தெரியும். அது தினம் தினம் மரணத்தைச் சந்தித்துத் திரும்புகிற மாதிரியான வலி. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. 10 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளா சிதறிப்போய்ட்டாங்க. அவங்க சொந்தங்கள் என்ன ஆனாங்கன்னு தெரியாது. உண்மையைச் சொல்லணும்னா, என்னை நான் ஒரு ஈழத் தமிழனா உணர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கேன். அதனால் எந்த சமரசமும் செய்யவில்லை.''

''அப்போ அரசியல் அதிகம் இருக்குமா?''

''இதில் சிங்கள ராணுவத்தோட தவறுகள், புலிகள் பக்க நியாயங்கள்னு கருத்து சொல்லலை. நடந்த உண்மையை அப்படியே அச்சு அசலாப் பதிவு பண்ணியிருக்கேன். மூன்று மாச கர்ப்பிணிப் பெண், கைக்குழந்தையோட பயணிக்கும் பெற்றோர், சுயநலம் பிடிச்ச கணவன், மகனைத் தேடி அலையும் தாத்தா - பாட்டினு 10 பேர் அந்தப் படகில் இருக்காங்க. அந்தப் பயண அனுபவங்கள்தான் படம். 110 நாள், கடலிலேயே ஷூட்டிங் நடந்தது. படகில் பயணிக்கும் பத்தாவது நிமிஷத்துலயே வாந்தி வந்திடும். 10 நாள் பயணிக்கும்போது தேவையான உணவு, தண்ணி எதுவும் இருக்காது. கைக்குழந்தைக்கும் கடல் தண்ணியைத்தான் குடிக்கக் கொடுப்பாங்க. அது உடம்புக்கு ஒப்புக்காது. ஆனா, அந்தத் தண்ணியைத் தவிர வேற எதுவும் சாப்பிடக் கிடைக்காத அவலம். இப்படி வலிகளும் வேதனைகளும் மட்டுமே இருக்குற உண்மையானப் பதிவைக் கொடுத்திருக்கேன்.''

- க. நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்