“இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடாததை தேடிப் பிடிக்கணும்!” | gibran, ஜிப்ரான்

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (26/10/2013)

கடைசி தொடர்பு:10:44 (26/10/2013)

“இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடாததை தேடிப் பிடிக்கணும்!”

 டித்தது 10-ம் வகுப்புதான். ஆனால், இன்று ஜிப்ரான் 'விஸ்வரூபம் 2’-வின் இசை யமைப்பாளர்! 800-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ், முதல் படமான 'வாகை சூட வா’- விலேயே ஐந்து விருதுகள் என வளர்ச்சியில் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் ஜிப்ரானிடம் பேசுவதற்கு விஷயங்களா இருக்காது?

''ஜிப்ரான், இசையமைப்பாளர் ஆனது எப்படி?''

''கோயம்புத்தூரில் ஸ்கூல் படிக்கும்போதே இசை மேல் ரொம்ப ஆர்வம். இசைப் போட்டிகளில் நிறைய ஜெயிச்சிருக்கேன். ஆனா, 10-வது படிக்கும்போது அப்பாவுக்கு தொழில்ல பெரிய நஷ்டம். ஊரைக் காலி பண்ணிட்டு சென்னைக்கு வந்துட்டோம். மெடிக்கல் ரெப் வேலைக்குப் போனேன். ஆனாலும், இசை மேல இருக்கும் ஆர்வம் மட்டும் குறையல. வேலை முடிஞ்சதும் கீ-போர்ட்டில் 8-வது கிரேட் வரை கத்துக்கிட்டேன். கூடுதல் வருமானத்துக்காக குழந்தைகளுக்கு இசை டியூஷன் எடுத்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனிமேஷன் விளம்பரத்துக்கு இசைஅமைக்க வாய்ப்பு கிடைச்சது. அதுதான் பிரேக். அடுத்தடுத்து நிறைய விளம்பர வாய்ப்புகள்.

500 விளம்பரங்கள் வரை இசை அமைச்சேன். அடுத்ததா சினிமாவுக்கு இசையமைக்க ஆர்வம் வந்துச்சு. அதுக்கு இன்னும் இசை கத்துக்கணும். 'சிங்கப்பூர் இசைக் கல்லூரியில் சேர +2 பாஸ் பண்ணியிருக்கணும்’னு சொன்னாங்க. அதனால 26 வயசில் +2 எழுதி பாஸ் பண்ணி அங்கே சேர்ந்தேன். மூணு வருஷப் படிப்பு முடிஞ்சி திரும்ப சென்னைக்கு வந்தேன். என்கூட விளம்பரங்களில் வேலை பார்த்த சற்குணம், 'வாகை சூட வா’ வாய்ப்பு கொடுத்தார். இதுதான் என் கதை!''

''விஸ்வரூபம்-2 பற்றி?''

''என் வாழ்க்கையின் பெரிய ஆச்சர்யப் பரிசு அது! 'விஸ்வரூபம் இரண்டாம் பாகத்துக்கு நீதான் இசையமைப்ப’னு வைரமுத்து சார் சூசகமாச் சொல்லிட்டே இருந்தார். 'குட்டிப் புலி’ பாடல் காம்போஸிங் பண்றப்ப, 'கமலுக்கு 'வாகை சூட வா’ இசை ரொம்பப் பிடிச்சிருக்கு’னு சொன்னார். 'அவருக்கு உங்க மேல ஒரு கண்ணு’னு ஒருநாள் சிரிச்சிட்டே சொன்னார். இன்னொரு நாள், 'அவர் உங்களை மைண்ட்ல வெச்சிருக்கார்’னு சொன்னார். எதுக்கு நாமளே ஆசையை வளர்த்துக்கணும்னு வைரமுத்து சார் சொன்ன எதையும் நான் மனசுல ஏத்திக்கலை.

அப்போதான் 'குட்டி புலி’ படம் வெளியானது. படத்தோட பின்னணி இசையில் இளையராஜா சாரின் 'பொன்னோவியம்...’ பாட்டின் இசையை இயக்குநர் சேர்க்கச் சொன்னார். டைட்டில் கார்டுல இளையராஜா சார் பேரைச் சேர்த்திருவாங்கனு நினைச்சி அனுமதிச்சேன். ஆனா, என்னாச்சினு தெரியலை, டைட்டில்ல இளையராஜா சார் பேரைச் சேர்க்கலை. நான் ஏதோ இளையராஜா பின்னணி இசையைத் திருடிட்டேனு செம டோஸ் வாங்கினேன். ரொம்பச் சோர்ந்துபோய் எல்லா வேலைகளையும் தூக்கிப் போட்டுட்டு பிரேயர் பண்ணிட்டே இருந்தேன். அப்பதான் கமல் சார் ஆபீஸ்ல இருந்து போன். 'உடனே டெல்லிக்கு கம்போஸிங் செட்டப்போட கிளம்பிப் போங்க’னு சொன்னாங்க!''

''கமல் என்ன சொன்னார்?''

''படத்தின் இயக்குநரோட உட்கார்ந்து ஒன் டு ஒன் செட்டப்பில் நான் மியூசிக் கம்போஸ் பண்ணது கிடையாது. அதனால கொஞ்சம் உதறல் இருந்துச்சு. பயந்துகிட்டே கமல் சாரைப் பார்க்கப்போனா, அவர் ரொம்ப கூலா பழகினார். சற்குணம்கூட வேலை பார்த்தபோது எப்படி சுதந்திரமா இயல்பா இருந்தேனோ, அப்படி இருந்துச்சு. படத்துக்கான இசையை 75 சதவிகிதம் முடிச்சிட்டேன். கமல் சாருக்கு என் மியூசிக் ரொம்பப் பிடிச்சிப்போச்சு!''

''உங்க வொர்க்கிங் ஸ்டைல் என்ன?''

''மியூசிக் கம்போஸ் பண்ண வெளிநாடு போற பழக்கம் கிடையாது. விருகம்பாக்கம் ஸ்டுடியோவுலதான் இசை உருவாகும். இயக்குநர் சூழ்நிலையைச் சொன்னதும் என்னால கம்போஸ் பண்ண முடியாது. கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு தனியா போய் யோசிச்சுதான் கம்போஸ் பண்ணுவேன். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தொட்டுட்டாங்க. அவங்க பண்ணாமவிட்ட ட்யூன்களைப் பிடிக்க ரொம்பவே மெனக்கெடணும். இரவில் மட்டும்தான் ட்யூன் போடுவேன். ஏன்னா, அப்போதான் மொபைல் தொல்லை இல்லை!''

''விஜய் ஆண்டனி, 'படங்களுக்கு பாடல்கள் தேவையே இல்லை’னு சொல்லியிருக்காரே?''

''ஆமாம், அவர் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. 90-களில், பாடல்கள் இல்லாமல் படம் வரும் சூழல் உருவானது. ஆனால், அப்போ உள்ளவங்க அந்தச் சூழலை வளரவிடலை. முன்னாடி ஒரு படத்தில் எட்டு, ஒன்பது பாடல்கள் வரும். இப்போ அது மூணு, நாலுன்னு குறைஞ்சிருக்கு. சீக்கிரமே பாடல்களே இல்லாத படங்கள் தமிழில் வர ஆரம்பிக்கும்!''

 - ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: ஜெ.வேங்கடராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்