'நமக்கான அடையாளம் என்ன?’ | golisoda , கோலிசோடா

வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (26/10/2013)

கடைசி தொடர்பு:10:48 (26/10/2013)

'நமக்கான அடையாளம் என்ன?’

ளிப்பதிவாளர் டு இயக்குநர் பாதையில் மீண்டும் ஒரு டிரிப் அடிக்க வந்திருக்கிறார் விஜய் மில்டன். 'ஆட்டோகிராஃப்’ 'காதல்’, 'வழக்கு எண்’,... என முத்திரைப் பதித்த படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்தவர், 'கோலிசோடா’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கிக் கொண்டிருக்கிறார்.

  ''ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட் போயிருந்தேன். யதேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையா நூத்துக்கணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம், எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. அவங்க யாரு, என்னனு விசாரிச்சப்போ கிடைச்ச லைன்தான் 'கோலி சோடா''’ - சிநேகமாகச் சிரித்தபடி பேசுகிறார் விஜய் மில்டன்.

''அந்தப் பரண், அப்படி என்ன கதைகள் சொல்லியது?''

''60 ஏக்கர், 3,400 கடைகள்னு கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவின் மிகப் பெரிய சந்தை. வெளியூர், வெளிமாநிலங்கள்னு பல்வேறு இடங்களில் இருந்து வர்ற ஆயிரக்கணக்கான லாரிகளில் அதிகாலை ரெண்டு மணிக்கு பூ, பழம், காய்கறிகள் வந்து இறங்கும். அந்தச் சரக்குகளை இறக்குறதுக்கு ஒரு கடைக்கு 10, 15 பேர்னு மொத்தமா

20 ஆயிரம் பேர் அங்க வேலை பார்க்கிறாங்க. எல்லாருமே 17-லிருந்து 25 வயசுக்கு உட்பட்டவங்கதான். அதிகாலை ரெண்டு மணியிலேர்ந்து அஞ்சு மணி வரைதான் இவங்களோட வொர்க்கிங் ஹவர்ஸ். அப்புறம் பரண்ல ஏறி தூங்க ஆரம்பிச்சா, சாயங்காலம் மூணு மணிக்குதான் எந்திரிப்பாங்க. அப்புறம், அதிகாலையில லாரி வர்ற வரை பாட்டு, ஆட்டம், டாஸ்மாக் சரக்குனு தனி உலகத்துல இருப்பாங்க. என் ஹீரோஸ் நாலு பேரும் இந்த உலகத்தைச் சேர்ந்த பசங்கதான்!''

''கதைக்களம் கோயம்பேடு மார்க்கெட் ஓ.கே., கதை என்ன?''

''அவங்களுக்கு இந்த மார்க்கெட்டை தாண்டி வேறு எதுவும் தெரியாது. அவங்களுக்குனு எந்த அடையாளமும் கிடையாது. வயசு ஆயிருச்சின்னா வாழ்க்கை அவ்வளவுதான். வயசானாலும் மார்க்கெட்டை விட்டுப் போக மாட்டாங்க. கஞ்சா விக்கிறது, டீக்கடை போடுறதுனு அங்கயேதான் சுத்தி வருவாங்க. இப்படிப்பட்ட நாலு பசங்க, 'நம்ம வாழ்க்கையும் இப்படியே போயிடுமோ, நமக்கான அடையாளம்தான் என்ன?’னு யோசிக்கும்போது கதை ஆரம்பிக்குது. 'இதனால நம்ம அடையாளத்துக்கு ஏதாவது பிரச்னை வந்துடுமோ?’னு ஏற்கெனவே அடையாளத்தோட இருக்கிற கடை முதலாளிங்க யோசிக்கும்போது பிரச்னை ஆரம்பிக்குது. இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட மோதல்தான் 'கோலி சோடா’.''

''இப்படி ஒரு சீரியஸான லைனை பசங்க எப்படித் தாங்கிப்பிடிச்சிருக்காங்க?''

''நாமதான் தாங்க வெக்கணும். இயக்குநர் பாண்டிராஜ் என் நண்பன். அவன்கிட்ட ஒன்லைனைச் சொல்லி, 'இதை நீ தயாரிக்கிறியா?’னு கேட்டேன். ' 'கேடி பில்லா’... பண்றேன். தயாரிப்பு ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது. நீங்களே பண்ணுங்க. நான் சப்போர்ட் பண்றேன்’னான். அவன் சொன்னவிதம் பிடிச்சியிருந்தது. 'பசங்க’ படத்துல நடிச்ச பசங்க இப்ப வளர்ந்திருப்பாங்க. அவங்களையே நடிக்க வெச்சிடுங்க’னு அவன்தான் ஐடியா கொடுத்தான். அந்த நாலு பேரையும் ஊர்ல இருந்து வரவழைச்சி டெஸ்ட் ஷூட் எடுத்தோம். சனி-ஞாயிறுகள்ல கோயம்பேடு மார்க்கெட்ல காலையில இருந்து ஈவினிங் வரை சுத்தவிட்டு அதையும் ஷூட் பண்ணினோம். மார்க்கெட்ல சுத்தினதுல அழுக்கு, நாற்றம் அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி ஆகிருச்சி. மூட்டைத் தூக்கித் தூக்கி உடம்பு இறுகிருமே! அதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளி வெச்சு நாலு பேரையும் ஜிம்முக்கு அனுப்பினோம். அரும்பு மீசைக்காக ஏகப்பட்ட ட்ரீட்மென்ட். நான் நினைச்ச மாதிரி அவங்க உருமாறி வந்த பின்னாடிதான் ஷூட்டிங்குக்குக் கிளம்பினோம்!''

''ரொம்பக் கம்மி பட்ஜெட்ல படத்தை முடிச்சிட்டீங்கனு கேள்விபட்டோமே..?''

''உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மிகக் குறைவான பட்ஜெட்ல இந்தப் படத்தை எடுத்தோம். ஆனா, நினைச்சிப் பார்க்க முடியாத தரத்துல படம் இருக்கும். அதுக்குக் காரணம் என் நண்பர்கள். நான், என் உதவி இயக்குநர்கள், டான்சர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள்னு எங்க எல்லாருக்குமே மார்க்கெட்ல இருக்கிற கையேந்தி பவன்லதான் சாப்பாடு. எல்லாரும் அவங்க படமா நினைச்சி இதுல வேலை பார்த்திருக்காங்க. அவங்களுக்காக ஒண்ணு பண்ணப்போறேன். படத்துல என்ன லாபம் வருதோ அதை எல்லாத்தையும் எல்லாருக்கும் பங்கு போட்டுக் கொடுக்கப் போறேன். அவங்க அர்ப்பணிப்புக்கு என்னால முடிஞ்ச சின்ன மரியாதை இது!''

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close